சனி, 18 ஜனவரி, 2020

242. (என் மன முத்துகள்.- 13)






என் மன முத்துகள்.



29-5.2004.

1- வன்சொல்லின் வேகம் செவிப்பறையில் மோதி, முகத்தில் அறைவது போன்று உணர்வு தந்தாலும், பொறுமை யெனும் கற்பாறை அவ்வுணர்வை யடக்கி,   அறிவுக் கண்ணைத் திறக்க வைக்கும்.

2- அடியடியாக வந்த பண்பாட்டை அடியொற்றி வாழ்வில் அடிச்சுவடு பதிப்பவரும்,  புதிய பாணியில் அடிவைத்துக் குடிபுக நினைப்பவரும் தேடுவது,   எல்லோரும் தொட எண்ணும் நிம்மதி அடிவானம் தான்.

3- மங்கலச் சொற்களைப் பாவியுங்கள்! மங்கலச் செயல்களைப் பாவுங்கள்! பாவிகள் யாருமே உலகில் இல்லை. பாவி எனும் பதப் பாவிப்பை.....
     பா – பாட்டு.
     வி – அழகு    என்று பாவியுங்கள்.

4- குதிக்கும் உள்ளத்தின் ஆர்வம் குதிருக்குள் அடங்க வேண்டாம். குதிரை வேகமாகச் செயற் பட, மதிக்கின்ற ஊக்கமும்,   ஆதரவும் கொடுங்கள். அது மிதிக்கட்டையாகச் செயற்பட வைக்கும்.

5- கள்ளம் கபடற்ற சிறு மனதில் கள்ளத்தனம் புகுந்திட இடமின்றி உள்ளம் நிறை  அன்பு கொடுங்கள், 
 ஆதரவு கொடுங்கள். அன்புக் கள்ளுண்ட வண்டாக குழந்தைகளை ஆக்குங்கள்.

6- ' குறை காணும் மனம் நிறைவு பெறாது.' எண்ணங்களைப் பல வகையில் சிறை செய்து உறைய விடாதீர்கள். நல்ல துறையில் மனம் புகுத்தி இறை சிந்தனையையும் புகுத்துங்கள். அன்பு நறை வழிந்து நிறைந்து ஓடும்.

7- ' வில்லினிலிருந்து பறப்பட்ட நாணாக எழு!' சுறுசுறுப்பு மிகு செயலிலும் சிந்தனையிலும்,  நரம்பில் குருதி ஓட்ட நகர்வு சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியமடையும். மெல்லென நகரும் செயல்கள்,   சிந்தனைகள் அனைத்திலும் ஒரு மந்த நிலையை உருவாக்கும்.

8- குறியற்ற நெறியற்ற வாழ்வுஇ தறிகெட்டுத் தரமிழந்து போகும்.

9- இல்லறச் சுழியில் மாட்டியசில பேதைகள் இற்றுவிட்ட மூளைச் சலவையால் வாடுகிறார்கள்.

10- மது போதையில் ஆடவன் மட்டுமல்ல.   மாதுகளும் வீழ்ந்தால் .  தாம் பெற்ற செல்வங்களை எப்படிக் கட்டுப்   படுத்துவதாம்!

11- ஒழுக்கத்தில் பத்திரமாக வாழாதவன் வாழ்வு
அழுக்காம் துன்பப் பள்ளத்தில் தாழ்வு.

அத்தி:-
அத்திவாரத் தமிழ் அழகாக ஊன்றினால் செந்தமிழ் மொழியெனும் அடுக்கு மாடிக் கட்டடம்,   உச்சி மாடிக் கட்டிடமாகவும் உன்னத நிலையடையவும் வாய்ப்பு உண்டு.

தேன் தமிழ் சீறியெழுந்து அத்திர வியூகம் (அம்பு வியூகம்) வகுத்தால் அது சுகந்த அத்திரமாகி (அம்பு) சுகமும் தரும். சுட்டெரித்துப்   பாயும் சக்தியும் பெறும். ஆயினும் நல்ல விளைச்சலுக்குப் பாயும் அத்திரம் பண்புடைத்து,  பயன் பெரிது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

435 (969) தோற்றால் வரும் ஏமாற்றம்

                          தோற்றால் வரும் ஏமாற்றம்   எதிர்பார்ப்பின் பரிசு ஏமாற்றம் எதிர்பார்க்காதவன் மகிழ்ச்சியாளன் ஏமாற்றம் உயர்விற்குப் பட...