வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

168.. (740) செல்லக்கிளியே மெல்லப் பேசு!








செல்லக்கிளியே மெல்லப் பேசு!  

வெல்லமாய் என்னை வெல்லும் கிளியே
சில்லெனும் காற்றான சிங்கார மொழியே
உல்லாசமாய்ச் சிணுங்கும் உயிர்க்; கவிதையே
மெல்லப் பொழியும் பஞ்சு மேகமே
சொல்லடி இன்னும் செல்லமாய் மெல்லவே!

வல்ல தமிழை வளைத்துப் போட்டு
வில்லில் இருந்து ஏற்றும் நாணாய்
வெல்லும் வார்த்தை வல்லாங்கு சொல்
கல்லும் கனியக் கருத்தாகச் சொல்
கொல்லென்று சிரிப்புக் கொட்டிடச் சொல்

23-2-2019

வேறு---

சல்சல்லெனக் குலுங்கும் சலங்கை போல
சில்லறை வந்து சிதறும் ஓசையாய்
செல்லமே பேசு செழிப்பான செந்தமிழை
நல்ல தருணமே நாளும் மகிழ
இல்லம் முழுதும் இன்தமிழ் சிறக்கட்டும்.






வியாழன், 15 ஆகஸ்ட், 2019

167 (739 ) காலம் மாறிப் போச்சு

காலம் மாறிப் போச்சு

காலம் மட்டுமா மாற்றம்
ஞாலமும் மாறிப் போச்சு.
ஆலம், அமிர்தம் நவீனமாய்
அத்தனை தலைகீழ் மாற்றம்.

பழமை அழிந்து போகுது
புதுமை திணற வைக்குது.
புழமை போற்றவொரு புறம்
புதுமையை விரிக்க மறுபுறம்.

பெற்றவர் திணறித் திகைக்க
பேதைகள் திசையறியா ஓட
மறுபடி ஆதிக் கோலத்தை 
நாடிய ஓட்டமா! முடிவென்ன!




16-6-2016








166 (பெண்மை - 34 ) புது விடியல் காண் பெண்ணே!







புது விடியல் காண் பெண்ணே!

இதுவா உன் பிறப்பின் மேன்மை
பதுக்கிடவா அடுப்படியில் உன் நேரம்
பொதுவாக இன்னும் பல வெறுமை
புது நெம்புகோல் இல்லாதது சிறுமை
அதுவிருந்தால் உன்னைப் புரட்டிப் போடும்.
மெதுவாக மாற்றித் தன்னம்பிக்கை தரும்.
புதுக்கிடு உன்னை!  புறப்படு கண்ணே!
புது விடியல் காண் பெண்ணெ!

துணிந்து உன் கருத்தை மொழிந்திடு
துக்கராகம் இசைத்து  துஞ்சி  விழாதே
துடுப்பாயிரு  துன்பம்  துடைக்க  முன்னிரு.
துடிப்புடன் நூலைத் திறந்து பயணி
துதிகளில் மயங்காதே  துப்பறி காரணங்களை
துவைத்திடு அற்ப தூசியாம் பேதமைகளை
துன்னெறியாளரை  ஒதுக்கு துணையிரு நலிந்தோருக்கு
தும்பிக்கையான் துணையிருப்பான் புது விடியலுக்கு.

கண்ணியம் தொலையாது பெண்மையைப் போற்று
கண்ணானது  குடும்பம்  எண்ணத்தில் கொண்டிடு.
கண்மணிகளைப் புது வண்ணச் சமுதாயமாக்கு.
உண்மை தருமம் உன் செங்கோலாக்கு.
எண்ணத்தில் வலிமை திண்ணமாய் வேண்டும்.
வண்டிற் சக்கரமாய்க்  கணவனுடன் இணைந்தோடு.
வண்டமிழ்ப் புரவியுடன்  விண்ணைத் தொடு.
காண்பாய் பெண்ணே புது விடியல்.

11-3-2018








165. (738) ஈரமில்லா நெஞ்சங்கள்







 ஈரமில்லா நெஞ்சங்கள்

ஈகையற்ற ஈரமில்லா நெஞ்சங்கள்
ஈடுபாடற்ற வெறுமை நெஞ்சங்கள்.
ஈங்கு பல மக்கள்
ஈன்றோரை இலட்சியம் செய்து
ஈட்டியாக மனதை வேதனைப்படுத்தி
ஈப்பிணியாகி முதியோரில்லம் அனுப்புகிறார்.

இறுகிய நெஞ்சங்கள் என்றும்
மறுகுதலான மறுதலிக்கும் நெஞ்சங்கள்.
அறுகம் புல்லாக அன்பிணைந்தால்
அறுதலின்று பாசத்தால் ஈரமாகலாம்
அறுவடையாகாத இன்பம் பெருக்கலாம்.
அறுதி வரை ஆனந்தமே.

அன்பெனும் ஈரமற்ற நெஞ்சங்களால்
துன்புறும் பிஞ்சுப் பாலகரும்
வன்முறைப் பாலியல் கொடுமைகளும்
இன்னம் பிச்சை எடுப்போரும்
இன்னலடையும் பெண்மையும், தெருவில்
அன்னியராய் வாழ்வோருமாய் பலர்.

சாரமுடை வாழ்வை ஆதரவெனும்
சாரலில் உலகை நந்தவனமாக்கலாம்.
பாரமுடை ஏக்கம் தவிர்த்து
தீரமுடன் சலனமற்ற வாழ்வமைத்து
ஆரத்தழுவி தன்னம்பிக்கை ஊன்றுகோலுடன்
பூரணமாக இவ்வுலகில் வாழலாம்.

16-11.2017





சனி, 10 ஆகஸ்ட், 2019

164. (737 ) உணர்வால் ஒன்றுபடுவோம்.







உணர்வால் ஒன்றுபடுவோம்.

வீழ்ந்திட்டாலும் நாம்,  வாழ்வது தமிழாகட்டும்
ஆழ்ந்த சிந்தனையிது ஆழ ஊன்றுவோம்.
வாழ்ந்திடுவோம் நல் வாக்குகளை மனதிலூன்றி.
தாழ்த்திடும் அழுக்காறைத் தகர்ப்போம் உயர்வோம்.
ஏழ்மையகற்ற இயன்றவரை ஏதாவது செய்வோம்.

கோடிகளும் மாடிகளும் தேடி அழிவதிலும்
வாடியவருக்குக் கைகொடுத்து வாழ  வைப்போம்.
வேடிக்கையின்றி  நல்லுணர்வால்  விடிவு காண்போம்.
கூடித் தமிழனெனும் தனித்துவம் நிலைநிறுத்துவோம்.
ஊடிடாது  தமிழால் உன்னத மனிதமெழுப்புவோம்.

28-5-2018









163. . (736) இயற்கையாய் விடுங்கள்..







இயற்கையாய் விடுங்கள்.. 

இதயங்கள் விசாலமாய் இணைய
பரந்த சிந்தனை புகுதல்
சுயநல வறுமையை அழிக்கும்.

விரல்களைந்தின் இயல்பை மனிதன்
தரமாய் ஏற்கிறான். மானிட
வித்தியாச இயல்பை ஏற்றிடான்.

விடுங்கள்! விசாலமான வானில்
விகசித்துப் பறக்கட்டும் பறவை.
பறக்காதே நடவெனப் பகர்வாரில்லை.

கண்கவரும் சின்னஞ் சிறு
மின்மினிப் பூச்சி ஒளியை
கண் கூசுதென நிறுத்துவாரில்லை.

அன்னம் பாலைப் பிரித்தருந்துமாம்.
பிரிக்காது  சேர்த்து அருந்தென 
உலகில் யாரும் கேட்பாரில்லை.

மயிலின் தோகை நீளமும்
குயிலின் குரலினிமை யியல்பும்
ஓயிலான இயற்கை வரங்கள்.

புவியின் பல்லின வகையான
கவிஞன் வீரிய  கவிச்சிறகும்
கருத்தாய் விளங்கும் வகையிது.

இயல்பை இயல்பாயேற்காது மனிதனை
இயக்கி அடக்குதலில் சர்வாதிகாரியாய்
அஞ்ஞானத்தில் குளிப்பார் சிலர்

10-2-2017





வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

162 . (735 ) என் பேராசைகள்






 என் பேராசைகள்

தந்திரமாய் சிறு தகவுடை ஆசைகளையும்
மந்திரமாய்த் தலையாட்டி மகிழச் செய்யும்
சுதந்திரம் தந்து சுகம்  தரும்
சுந்தரனென் துணைவருடன் சுகமாயுலாவப் பேராசை.

இயற்கை அழகை  இயல்பாய் இரசித்து
மயற்கையாக நாடுகளை  மதுகை கொண்டு
அயர்ச்சியின்றி ஆராய்ந்து அறிந்து பார்த்திட
உயர்வுடைய சுற்றுலா அனுபவிக்க ஆசை.

வஞ்சம்  கையூட்டில்லா  இயக்குனர்கள் நாடாள
அஞ்சுதலின்றி மக்கள்  அமைதியாக வாழ்ந்து
கொஞ்சும் அன்பில் கொள்ளை அமைதியுணரும்
மஞ்சமான உலகு மலர பெருவிருப்பம்.

என்றுமென் தமிழ் எழிலாக இலகுவாக
இன்னாமை நீக்கி  இழிவற்ற இலக்கடைய
உன்னிப்புடை தாக்கங்களுடன் உலகவுலா கொண்டிட
நன்னெறியுடன் நல்லாட்சி நல்கு இறைவா!

28-5-2018




161 (734) என்னுள் கேட்கும் சுகராகமே.





என்னுள் கேட்கும் சுகராகமே.

(தன்மயம்-இயற்கை, திறமை.  பெற்றி-பேறு, இயல்பு)

தன்னுள் தளிர்க்கும் தன்மயமாம்  உணர்வுகள் 
உன்னுள்  என்னுள் உருவாக்கும் சுகராகங்கள்
தன்னூக்கம் நெம்பி பின்னலாகும் வாழ்விலே
மன்னுயிரின் நிலைத்த மந்திரமே நீள்விலே.

அன்னையின் ஆசைமொழிகள் அனுதினம்  மனிதருள்
உன்னும் இன்பத்துளிகள் உயிர்மூச்சாய்  இணைவது.
அன்னணம்  தந்தையுரையும்   அளவற்ற  ஆக்கமீயும்.
இன்னமுத உறவுகளாலும் இசையும்  ஏகாந்தராகங்கள்.

மனிதன் அணையும் மழலை யிராகம் 
புனித பெற்றி பூக்குமின்பத்  தாகம்.
இனிதாம் இல்லறம் இணைக்கும் இராகம்
இரசவாதம் செய்யும் இயல்புடைய நேசம்.

இத்தனை சுகராகங்கள்  இருந்தும் அணங்காம்
சொத்தான தமிழாளே!  பிச்சியானேன் உன்னிலே
உத்தமக்  காதலால் உயிரை  மீட்டுகிறாய்
வித்தகத் தமிழே வியக்கிறேன்  உன்னுறவால்.

இதயவீணையில் நீ இன்னமுத நரம்பாகி
உதய தாரகையாய்  உலாவுகிறாய் வரம்பின்றி.
புதிய  பூவாய்  பொழுதிற்கும்  உறவாடி
பதியமிடுவது பதமான பன்னூறு சுகராகங்கள்.


7.5-2018





160. (733 ) விமானத்தில்.....(உண்மைச் சம்பவம்)







விமானத்தில்.....(உண்மைச் சம்பவம்) 

ஐந்து பிள்ளைகளுடனொரு தாயெம்முடன் இலங்கையிலிருந்து 
பயணமானார். அவருக்கு உதவிட முனைந்து ஆளுக்கொரு 
பிள்ளையைத் தூக்கியபடி விமானத்திலிருந்து பேருந்தேறி  
யெர்மனியத் தலைநகர் விமான நிலையத்துள் புகுந்தோம்.

பிள்ளைகளில் கவனம் செலுத்தியென் கைப்பையை
விமானத்தினுள் விட்டதை அறிந்தேன் எனதும் எனதிரு 
பிள்ளைகளினதும் கடவுச்சீட்டுகள் கைப்பையுள். பிள்ளைகளிடம் 
யாரழைத்தாலும் போகாது இங்கேயே நில்லுங்களென்றேன். 

உடனே ஓடி அதிகாரிகளுடன் பேசினேன்.
'' மிகவும் வேடிக்கை'' என்று கூறியொருவர் பேருந்தில்
சென்று கைப்பையை எடுத்து வந்து தந்தார்.
நல்ல மனிதர்கள் மிகவும் கண்ணியமாயுதவினர்.


காத்திருந்த பிள்ளைகளுடன் அவசர அவசரமாக
டென்மார்க் தலைநகரம் கொப்பென்கெகனுக்குச் செல்லும்
விமானத்தில் ஏறினோம். கணவரோடு (தந்தையோடு) இணைய.
இன்று நினைத்தாலும் சிரிப்பும் திகைப்பும்.

கடவுச்சீட்டின்றி பிராங்பேட் விமான நிலையத்தில்
கைது – நிலக்கீழ் மறியல் _ உயிரினும் மேலான 
பிள்ளைகள் ஒரு கணத்திலன்று  திடுக்கிட்டேன்.
நிலைமைக்கேற்ற நடவடிக்கையென் பெற்றோருக்கு நன்றி.

26-8-16.




வியாழன், 8 ஆகஸ்ட், 2019

159. .. (732) ஓளித்துக் கண்டுபிடித்தல்








ஓளித்துக் கண்டுபிடித்தல்

பட்டுப் பாவாடைச் சிட்டு
வண்டு போல நிற்கும் 
குண்டு மாம்பழம் முழித்துப் 
பதுங்குகிறாள் சுவரின் பின்னால்.

தளிர் பிஞ்சுக் கால்களால்
ஒளித்துத் தேடிப் பிடிக்கும்
கண்ணாமூச்சி ஆட்டம்
எனக்கு நன்கு பிடிக்கும்.

அப்பா தான் முதலில்
என்னைக் கண்டு பிடிப்பார்.
வருகிறாரோ! கண்டுபிடித்திட்டேன் என்பாரோ!
என்னைத் தோளிலும் தூக்குவார்.

’’மாலை முழுதும் விளையாட்டு’’
பாரதித் தாத்தா சொன்னாராம்.
அண்ணா அம்மாவோடு விளையாடுவார்.
நான் அப்பா செல்லத்தோடு இன்று

20-8-2016








158 . . ( 731 ) விரகதாபம்.







விரகதாபம்.

விரகதாபம் மேவக் கண்கள் மேய்வது
வராத துணையின் படகிற்கா 
அன்றித்  தாங்காத வெப்பம் 
குளுமை நிலவால் கடற்காற்றில்  
தணியுமாவென்ற ஏக்கமா!...

பார்! கடலை நாயகியாக்கிய
சந்திர முத்தத்தை. அங்கம் 
மின்னக் கடல் நங்கை நெளிகிறாள்! 
நீயும் பொறுத்திரு!  உன் 
நாயகன் வருவான் இன்பமள்ளலாம்!

காற்சிலம்பொலிக்க அன்ன நடையிடும்
அழகுத் தேவதையே உன்
மின்னலிடையும் கன்னக் கதுப்பும்
அன்னத் துகிலுமழகிய கூந்தலும்
நிலவொளியில் மயக்குதே! காத்திருப்பாய்

13-8-2016





புதன், 7 ஆகஸ்ட், 2019

157 . (730) சுதந்திரம்.






சுதந்திரம்.

அடடா! எத்தனையோ பாடுபட்டே
பத்தரைமாற்றுச் சுதந்திரம் கிடைத்தது!
சுதந்திரம் கிடைத்தென்ன! இங்கது 
இதந்தரும் நிலையிலின்றியொரு
தந்திரமாகவன்றோ செயலாகிறது.
மக்களெல்லோரும் சமமென்பதுறுதியில்லையே!

பறவைகளின் பறப்பும், மலர்களின் 
மலர்வும், பட்டுப் பூச்சிகளுக்குமுள்ள
சுதந்திரம் மனிதனுக்கு அறுந்ததாகவேயுள்ளது.
வல்லரசென்ற முத்திரையும் சொந்த
சுதந்திரக் கொடியும் தவிர, ஆங்கிலம் 
பேசியே ஆனந்த சுதந்திரம் அனுபவிக்கிறார்கள்.

குடியரசு வல்லரசானாலும்
குடிப்பதற்கு நீரில்லை. வெள்ளை 
முதலைகள் போக கறுப்பு முதலைகள்
பெருகியேழைகளின் இரத்தமுறிஞ்சி
சுகபோகமனுபவிக்கின்றன.....

14-18-2016


வேறு 

கிடைக்காத சுதந்திரம்.

கிடைத்த சுதந்திரத்தைச் சுயநலம் 
படைக்கவில்லை. 
நகரபாதுகாவலர் நிலையம், வங்கியில்
இலஞ்சம் கொடுத்தாலெண்ணம்
நிறைவேறும் நிலை, பெண்கள் 
கற்புடன் திரும்பிவரும் உறுதியற்ற நிலை

நேர்முகப் பரீட்சை, கல்லூரியில் 
இடம் பெறக் காவு கொடுக்க
வேண்டியவை அதிகம்! காலாற
தெருவில் நடப்பதே கேள்வியான
வாகன சாரத்தியங்கள். 
பொறுப்பற்ற நிலைமை

நீதி நேர்மை கடை வீதியிலும்
விற்பனையில் இல்லை. பல
மனிதருக்கு இது என்னவென்ற
விளக்கமும் கேள்விக் குறியே


14-8-16


சுதந்திரம்

சுழலும் உலகில் ஆனந்தமாய்
சுதந்திரச் சிறகு விரித்துச்
சுடரொளியாய் பரவுதல் இனிமை.
சுருங்கி நத்தை ஓட்டினுள்
சுகமென்று வாழ்தல் சிலருக்கு
சுண்டெலியாகப் புதுங்குதலும் சுகமே

2021



156. (729 ) அறிவியல் பயணிகள்






ப்ராக், My Prague 1992- பயண படங்கள்.

அறிவியல் பயணிகள்

கள்ளிக் காட்டிதிகாசம் படைப்பார்களோ
கணக்கியலதிகாரி ஆவார்களோ யாரறிவார்
இவ்வறிவியல் பயணிகளின் எதிர்காலம்!

வெற்றுப் பாதம், காலணியோடுமெத்தனை
ஏற்றத் தாழ்விலே ஒருமுகப் பயணம் 
கல்விக்காய்.

விளையாட நேரமின்றி வீரும்பாத 
சுமையோடு களைத்து அடக்குமுறையுள்
அறிவுப் பயிர் வளர்ப்பில் வென்றிடவும்
தோற்றிடவுமேராள வளைவுகள்.

முத்துக் குளிக்க ஆழ்ந்த 
சேற்றிலழுந்திப் புரண்டெழுந்து பெறும்
ஆற்றலாளுமைப் பயணமே கல்வி.
குறி வென்றிடலொன்றாக போட்டி பொறாமைத் 
தீயுள்ளும் கல்விப் பயணம் வெல்லட்டும்.


13-8-16







செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

155. . (728 ) பிறப்பில் ஊனம் நான்.....







பிறப்பில் ஊனம் நான்.....

பிறப்பில் ஊனம் நான்
பெற்றவர் கல்லறையில்,!...தனிமையில்
இங்கே!...அழுவதற்கல்ல மனிதம்!
பொங்கும் உற்சாகம் கரைபுரட்டு!
வங்கக் கடலாக நுரையெழுப்பு!

பட்டுவிட்ட அங்கம் தவிர
கட்டமைப்பாய் மறு அங்கங்கள்!
கட்டு உன்னுயர் நம்பிக்கையை!
வட்டமிடக் கண்கள் உண்டன்றோ!
எட்டு ஆனந்த முனையை!

கேட்டிடு இசை வழியவழிய!
பாட்டுப் பாடு முடிந்தால்!
கேட்பவர் இனிக்கப் பாடலாம்!
பட்டுத் திறமைகள் எல்லோரிடமும்!
கிட்டும் வல்லமையை வசியமாக்கு!

சோதிடம் கற்றால் ஆர்வமிருந்தால்
சோதிடம் கூறலாம் பிறருக்கு!
தீதை விலக்கியே வாழ்ந்திடு!
ஓதிடு நல்லதை பிறரிற்கு!
கோதிடு அன்பால் அடுத்தரை!

உன் திறமையை அடையாளமாக்கி
உயர்த்திடு! ஊனத்தை அல்ல!
சொந்தக் காலில் நின்றிடு!
முடியாததை மீண்டும்  செய்ய 
முடியுமென்று முயற்சி செய்!

வாழ எத்தனையோ வழிகளுண்டு!
வாழ வழியில்லையென்று மொழியாது
வாகை சூட, நம்பிக்கை
வானம் தொட முயலலாம்!
வாசம் வீச வாட்டமழி!

கலையாக்கம் கைவேலை நன்று.
ஓலைப் பாம்பு தெரியுமா!
ஒரு காத்தாடி செய்து
ஓரமாயிருந்து சிறுவருக்கு விற்கலாம்!
பங்கமற்ற மனமுண்டுன்னிடம் அங்கவீனமானாலும்!

தனிமையில் பிறந்தோம் எவரும்
தனிமையாய் போவோம் பழகிடு!
இறைவனே பழக்குகிறான் இதையெமக்கு
சொல்லத் தேவையில்லை இதை 
'' உறவுகளும் என்னை ஒதுக்கியது ஏன்! ''

5-8-2016





திங்கள், 5 ஆகஸ்ட், 2019

154.. (பெண்மை - 33 ) மனவலிமை அதிகமுள்ளவர்கள் பெண்களே






மனவலிமை அதிகமுள்ளவர்கள் பெண்களே

நெருப்பு, பெருங்காற்று, வெள்ளம்  பேரபாயமாக
நகரும் பகலவன், நிலவு, நட்சத்திரங்கள்,
மேகம் அழகு  ஆச்சரியமாக, மழையில்
விதைகளின் துளிர்ப்பு,  நெருப்பால் மரங்களழிதல்
வியப்புயர்த்த, மானுடவுடல் மாற்றம் ஆச்சரியமாக்க
உருவாக்கும் திறனால் பெண்ணியற்கையினமாக உருவாகினாள்.

பெண்ணின் கருவுருவாதல் மாதாந்தர சுழற்சி,
தண்மையான  முலையூட்டலும் இரகசியம் பொதிந்திருந்தது
அச்சம் நாணமுடைய மடந்தை மணமானதும்
உச்சமான புரட்டும் மாற்றமாகப் புகுந்தவீடு.
உடல், மனத்திட இல்லத்தரசி ஆகிறாள்.
திடமான நிர்வாகத்தில் சுயமாய் இயங்குகிறாள்.

பெண்ணேயுயிர் உருவாக்கத்தின் மூலம், கடவுளல்ல,
புண்ணிய  இயற்கையின் அங்கம் பெண்ணென 
அன்று சுமேரியர் நம்பினர் பெண் 
தானே தன்னை வலுப்படுத்தி வாழ்கிறாள்.
பாரதிக்கொரு நிவேதிதா, அதியமானுக்கொரு ஒளவை
விவேகானந்தருக்கு ஒரு சாரதாதேவியாக வாழ்வில்
தாக்கங்கள் ஏற்படுத்தினர், பெண்கள் காற்றிலும்
கடுவேகமுடைய எண்ணங்களுடையவர்கள்.

19-5-2018



153. . (727) கவிதைகள் மூன்று!- pathivukal web site





http://www.geotamil.com/index.php…


கவிதைகள் மூன்று!

3ம் பதிவுகளில் )
முகவரி.

திமிராகக் கம்பீரமாகக்
கரையொதுங்கும் அலைகளின்
நுரைச் சதங்கைகள் அமைதியாகின.
ஆர்ப்பரித்தலும் அடங்குதலும் அதன் விதி.
சங்கு சிப்பிகளை அள்ளி வருதலே அதன் முகவரி

கடல் மொழியின் கிளை உச்சாணியில்
காத்திருக்கும் பறவையாக அல்ல
சிறகு விரிக்கும் கவிதைப் பறவையாக நான்.


வாழ்வு முழுதும்...

கெட்ட வார்த்தைகள் மொழியும் ஒருவன்
கெட்ட வார்த்தைகளால் வளர்க்கப் பட்டிருப்பானோ!
கொட்டிப் பின்னப்பட்டு குட்டுப்பட்டும்
கெட்ட வார்த்தையோடு அமர்ந்திருப்பது
பட்ட மரத்தினடியில் இருப்பது போன்றது.
கெட்ட கனவுகளின்  கிண்ணமே  அவள் வாழ்வு முழுதும்.

ஆட்டம் ஏன்!!

பெரிய மனிதக் கடலில்
நரி போன்ற திமிங்கிலங்கள்
செரிக்கச் செரிக்கக் குட்டிமீன்களை
அரித்து அரித்து உண்டன.

மனிதப் பாறைகளும் பார்த்தபடி
அநியாயங்களை வெகுவாக  இரசித்தபடி
குறியான போதை பெருகியது
வெறியாக உலகை மிரட்டுகிறது.

உயிர் பிளக்கும் அநியாயம்
துயரம் வார்த்தைகளும் ஊமையானது.
உயர்ந்து கடலலைகள் அடித்தது.
அயர்ச்சியின்றி அனைத்துமடங்கியது! மௌனம்!!


30-7-2019

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5260:2019-07-31-03-29-06&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23




439 (983) தமிழன் மானம் அழிக்காதே!

                  தமிழன் மானம் அழிக்காதே! (இக் கவிதை   அலைகள் இணையத் தளத்தில் 18-12-2012ல் பிரசுரமானது.) அழகிய கண்ணால் பார்த்திடு! அழகுடன்அர...