தோதாவானோ மனிதன்!....
நாலாபுறமும் பொன்னிலைகளாய் நழுவி
காலாவதி ஆகிடாது மரக்கவிதைகள்
மேலாக விழுந்தினி மேவிடும் பனி
சூலாயுதமாய்ப் புத்திலை சூடிட
கோலாகலமாகிறது மறுபடி துளிர்த்து
பிரபஞ்சத்தின் சுவாசமோ செம்பொற்சருகு
வரமாம் பிறப்பும் இறப்பும்
காலக்கிரமத்திலிக் காலச்சுவடு காலடிமேற்
காலடி சூரியனதுவாகிச் சீரியமுறைச் சேவையாய்
பாரிய காலநிலைப் பெயர்ப்பாகிறது
உதிர்ந்த சருகுகள் இயற்கை வண்ணத்துகிலாய்
அதிர்ந்திடாது புற்களில் உறைவிடமாகிறது
ஒதுக்கிடப் புல் சிலிர்க்கிறது பழுப்பு, சிவப்பு,
அழுக்கில்லா மஞ்சளாய் புனையா ஓவியமாகிறது.
மரங்கள் பறவைகளின் மாடமன்றோ!
விழுந்தவைகள்! இஃதென்ன விருட்சத் தியானமா!
அழுவதில்லையா இவ்விழப்பிற்கு!
சாதுவாகி ஞானம் போதிக்கும்
சூதுவாதற்ற மரக்கவிதை உரக்களஞ்சியம்
தோதாவானோ மனிதன் மரத்திற்கீடாக!
(தோது – ஆவானோ)
பா வானதி வேதா. இலங்காதிலகம். தென்மார்க் 20-11-2020
000
•
பதிலளிநீக்குo Leela Ammu
Author
அட்டகாசம்
5-11-2021