உலகம் நம் கையில் -1
(தலகம் - தடாகம்
செலகம் - மல்லிகை)
வேடங்கள், பொய்மை, புரட்டுகளை அழியுங்கள்
சூடமாம் அறிவை உள்ளெடுங்கள் பரப்புங்கள்.
பாடங்களை எல்லோர் மனதிலும் ஏற்றுங்கள்.
மூடத்தனம் அவநம்பிக்கைகள் முற்றாக துடையுங்கள்.
தலகமாம் மனதில் தூய எண்ணங்களை
செலகமாய் அனைவரிடத்தும் ஓயாது தூவுங்கள்..
திலகமென வாழ்வைத் திண்ணமாய் அமைக்கலாம்.
கலகமற்ற உலகம் நம் கையில்.
ஆத்திசூடி, ஒளவை மொழி திருக்குறளாம்
ஆராதிக்கும் நல்வழி அறிவு நூல்களையும்
ஆரம்ப அரிச்சுவடி வகுப்பில் சிறுவருக்கும்
ஆசையாகக் கற்பித்தல் அதிக அவசியம்.
அவ்வழி வந்த நாமிங்கு இன்றும்
செவ்வழி செல்லுதலொரு நல்ல உதாரணம்.
சிறுவயது உரைகள் பசுமரத்தாணி இதயத்தில்.
சிறுமையல்ல சீருலகு நம் கையில்.
பண்பாடு பழக்கமெனும் அரிய நமது
மண் மணக்கும் வழக்குகளை விட்டொழித்து
கண்ணெனும் மூத்தோரை மேல் நாட்டினது
கலாச்சாரக் காதலில் எமை மறந்து
பெயர் கூறி அழைக்கும் பீடைத்தனங்கள்
பெயர்த்தல் பெற்றவர் கடனென இயங்குங்கள்.
முறை சொல்லிப் பண்பாக அழைத்தால்
குறையற்ற பண்பாட்டுலகம் நம் கையில்.
5-2-2016.
உலகம் நம் கையில் 2
நாடுகளை ஆக்கிரமித்து ஆண்டார் அன்று
கோடிட்ட பொருளாதாரத் தடையாட்சி இன்று.
மதம், இன, மொழி வெறியென்றும்
விதவிதமாய் வன்முறைகள் ஆண் பெண்ணென்றும்.
சூதுடை சதுரங்கப் பொய்மைகள் அழித்தால்,
சூடமாய் அறிவொளி உலகத்தில் ஒளிர்ந்தால்,
வஞ்சக எண்ணங்கள் மாறி மறைந்தால்
நஞ்சில்லா உலகம் நம் கையில்.
ஆணும் பெண்ணுமாயாக இரு ஜாதி
ஆணவத்தால் ஆக்கினார் பல ஜாதி
மதம் கொண்டு ஆடும் மூடரும்
சதமென்று மனிதநேயம் உணர்ந்து நடந்தால்
குண்டென்ன கூச்சலென்ன உலகில் நீதி
கண்டு வாழ்ந்திடல் நல்ல சேதி.
ஒருமைப்பட்டு அனைவரும் இன்பமாய் வாழ்ந்தால்
அருமை உலகம் நம் கையில்.
அறவழியேக சிறாருக்கு அறிவுடை திருக்குறளாம்
அறிவு நூல்கள் புகட்டலாம். செவ்வையாம்
நல்ல தொழிற் கல்வி பெருக்கலாம்.
கொல்லும் வேலையின்மை பசிப்பிணி அழிய
பாராளும் தடைகள் விலகும், இயற்கையை
ஆராதிக்க விவசாயம் பெருகும். பொருளாதாரம்
நிறையும். சுவர்க்கம் கீழிறங்கி வரும்.
குறையற்ற உலகம் நம் கையில்.
5-2-2016.
அருமை நன்றி
பதிலளிநீக்குMikka nanry
நீக்கு