நாகரிகம் உட்புகுந்த மானிடம்.
இலை உதிர்ந்த காலம் போன்று
கலைமிகு பழைய நகர ஒழுக்கம்
தலை குப்புறச் சாய்கிறது. மேலும்
நிலையுடைய துளசி மாடமும் மறைகிறது.
அதி காலை, மாலை இறை வணக்கம்,
ஆலய தரிசனம் அருகி வெறும்
அற்ப பகட்டு ஆடையலங்கார நடை
அரங்கமாக ஆலயம் அவலட்சணம் ஆகிறது.
வேக உணவுக் கலாச்சாரம் வியாபித்து
கேள்வரகு, கம்பு, தினையாம் சம்பத்துகள்
காணாமற் போயுடல் நோய்களின் சேமிப்புக்
கிடங்காக மாறியது பெரும் தவிப்பு.
கணனி முன் அமர்வும் கைபேசித்
தொண தொணப்புமாக புத்தக வாசிப்பு மயானம்
ஏகுதல் கண்கூடு, மழலையும் இன்று
கைபேசி அழுத்தும் கண்ணிறைந்த காட்சி.
உணவுகங்களில் உணவுண்டு ஆரோக்கியம் அழிகிறது.
பிள்ளைகளையும் அதே வழியில் இழுத்துச்
செல்லும் கொடிய பழக்கம் தீவிர
நோயாகிப் பற்றும் நாகரிகமுட்புகுந்த மானிடமின்றையவுலகு.
வாழ்வு நெறி, குறியற்ற நோக்கில்
தாழ்ந்திட பழைமைகளின் அழிவு காரணம்.
ஆழ்ந்த இறை பக்தி மூலாதாரத்தின்
அடிப்படையில் பழைமையைக் கட்டி எழுப்பலாம்.
5-6-2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக