வியாழன், 26 மார்ச், 2026

568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

 

    


        




 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!  


- ( தேன்தமிழ்க் கவிவனம்.

சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.)

00

(குமைதலின்றி – குமைந்திடாது)


அமைந்த வாழ்வை அற்புதமாக்கும் வித்தைக்காரி!

குமைந்திடாத ஞானத்தால் அத்தர் வாசனையாகிறாள்

சமையல் மட்டுமல்ல சம்மேளனத்திலும் நட்சத்திரமாகிறாள்

சுமைதாங்கியாக யாதுமாகி நின்றவள் பெண்ணே!

00

பிறந்தகத்து முத்து மனைவியாகி அம்மாவாகிறாள்!

சிறந்த பிள்ளையைத் தானம் செய்கிறாள்

புறக்கணிக்க முடியாத உறவாய்ப் பேரர்கள்

பாட்டியாகப் பாசத்தில் பரிணமித்துப் பூரிக்கிறாள்!

00

ஒருத்திக்கு ஒருவன் என வாழ்பவள்

கரும்பு மனதால் மன்னிக்கும் தென்றலாகி

கருணைச் சாரலாகி இரும்பு மனதை

உருகச் செய்து திருக்குறளாய் வாழ்கிறாள்

00

வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 5-3-2026



            



      


செவ்வாய், 24 மார்ச், 2026

567 (1067) அடுக்குமாடி 14 AUH

 

     



     



  அடுக்குமாடி 14   AUH

00


அறுவை சிகிச்சைப் பிரிவாம் அந்த

ஏழாம் மாடியில் இருந்து பார்த்தால்

அடுக்குமாடி 14 ஓகுஸ் யுனிவாசிட்டி கொஸ்பிட்டல்

எந்தளவு பிரமாண்டம் மண்ணிற நிறம்.

00

பறவைகள் குறுக்காகப் பறப்பது பசிய 

பச்சை மரம் தேடலாக இருக்கலாம்!

பரிபூரணனின் இயற்கைப் படைப்பின் அதிசயம்!

பல் சிந்தனையின்றி நிதானமாகப் பறக்கிறது.

00

வானம் தொட சிறகசைக்க  வில்லை

வசமாகிறேன் வெண்மை சிறகசைப்பின் அழகில்

வயப்படுத்தும் எண்ணமற்ற  அதன் முயற்சி

வானுயர் சுவரின் மௌனம் பறவை

என்னை மறக்கிறேன்.

00

கவிச்சாகரம் வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் -24-3.2026



     



ஞாயிறு, 22 மார்ச், 2026

566 (1066) பெண்ணெனும் பேராற்றல்

 

    

      





      பெண்ணெனும் பேராற்றல்    தேன் தமிழ்க் கவி வனம்.

00

பெண்ணெனும் பேராற்றல் உன்னத மாதவம்!

பெண் விடுதலையால்  மண் விடுதலையாகும்

மண்ணில் மார்தட்டிய  வேலுநாச்சியார் குயிலி

விண்ணேறிய கல்பனா எண்ணற்ற சுடரிகள்!

00

கொண்டாடி மகிழ  சந்ததி உருவாக்குவாள்

கண்ணெனப் பேணுவோர்  மாநிலத்தில் குறைவே!

கண்ணாடி மனதாள்  ஆராட்டிக்   காத்திடுங்கள்!

உண்மையில் அழகியின் அதிகாரம் பெருமிதம்!

00

தண்மைப்   பிறவியைப் பாலியலால் பழிவாங்கல்

கண்ணாகப்  போற்றாது  சிறுமியை  வன்புணர்தல்

திண்மையான ஆண்மைக்கு  மகா களங்கமே!

வண்ணமான சிறப்பைப் பண்பாகப் பேணுங்கள்

00

வேதா. இலங்காதிலகம்.  தென்மார்க்-    2-3-2026



          



புதன், 18 மார்ச், 2026

565 (1065) sanrithal - (penmai)அகிலம் சமைப்பவளே

 

       

        




     மணலை தீந்தமிழ் பாரதி அறக்கட்டளை  கவிதைத் தலைப்பு.

        

         அகிலம்   சமைப்பவளே அன்பின் பேரழகே!

00

அகிலம் சமைப்பவளே அன்பின் பேரழகே!

அகில் போல் மணப்பவளே! அறிவரசியே!

முகிலென ஓயாது முயற்சி செய்பவளே!

முகூர்த்தம் இன்றி மனைக்காக உழைப்பவளே!

முகிழ்த்தலான புன்னகை திருவாசகமாய் ஏற்றவளே!

00

கருவறை தொடங்கிக் கல்லறை ஈறாகப்

பெரும் ஆதரவான கைப்பிடி தாய்மை!

பெருகும் நேசம் இங்கு பேராறாகும்

பொல்லாத எல்லைகள் வகுக்காது வாழ்வை

தொல்லையின்றி உரிமைகள் உருவாமல் நீட்டுவாய்!

00

வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 6-3-2026



    



 

சமை

வியாழன், 12 மார்ச், 2026

564 (1064) புறக்கணிப்பைப் புறக்கணி!

 

       


             

  


புறக்கணிப்பைப் புறக்கணி!

00

புறக்கணிப்பு(த்தல்) புறவாயிலால் வெளியேற்றுதல்

புறம் போக்குதல் நிலையிலிருந்து

இறக்குதல் தாழ்த்தல் எனலாமோ!

உறவாடுதலை உரித்தல் புறக்கணிப்பு.

00

புகலிடம் தன் மனமே

அகலிடம் என்றும் இதுவே

தகர்த்திட யாராலும் இயலாது.

புறணியும் புறக்கணித்தலும் எம்மாத்திரம்!

00

கவிதை வரம்! கணக்கற்றுக்

குவியும்! பிரியாது ஒருவனை

புவியில் நம்பிக்கைச் சிறகு!

தவிக்கவிடாது புறக்கணிப்பானாலும்!

00

மங்கையர் தாரகை – வேதா. இலங்காதிலகம் - 12-3-2026


      



செவ்வாய், 10 மார்ச், 2026

563 (1063) சிறகை விரி! சிகரம் தொடு!

 

      


(செறிமை –நெருக்கம். திறலோன் -வல்லமையுடையோன்.  திறவானாய் - வல்லவன்.  தெறிகெடா – நிலைகுலைதல்.  நிறக்கேடு – புகழ்க்குறைவு.

பெற்றிமை – பெருமை. நெறிகேடு – தீயொழுக்கம்.)


சிறகை விரி! சிகரம் தொடு!

00

நறவுடை அறிவை நற்பேறாய் உயர்த்தி

துறத்தலைத் தூரத் தள்ளி துணிவாய்

திறமை திறமாகத் திறவுகோல் எடு!

சிறகை விரி!சிகரம் தொடு!

00

உறவை வளர்த்து சிந்தனை வளர

சிறப்புடை பாதையிட்டுச் செறிமை பெருக்கி

திறலோனாய் திருவுடை  வாரிசுகளைத் தினகரனாய்

திறவானாய் வளர வழித்துணை ஆகு!

00

தெறிகெடா நிலைக்கு நம்பிக்கை வளர்த்து

துணிவுடை பலவானாய் நிறக்கேடு இன்றி

நெறிகேடற்று நிறைகுடமாகப் பெற்றிமை பெறுவாய்!

பிறத்தலின் பெரும் பயன் இதுவே!

00

வேதா. இலங்காதிலகம்   தென்மார்க் - 15-12-2025


      



திங்கள், 9 மார்ச், 2026

562 (1062) ( பெண்மை ) மங்கையர் திருவிழா......

 

     


        


 சந்திரோதயம்  - 


மங்கையர் திருவிழா......

00

வெற்றிகளைத் தேடி அறிவில் நித்திலமாய்

கற்றிட குறுந்தொகை மொழி கொடுத்து

பெற்ற செல்வங்களையும் வித்துவான் ஆக்கி

ஏற்றிடும் வனிதைக்கு மாண்புறு நாள்

00

தாரமான விதை தாயாவது சரித்திரம்!

ஆரவாரமின்றி இல்லறம் வளர்ப்பவளைப் போற்றி

ஊரார் மெச்ச குடும்பம் அணைப்பவளுக்கு

சாரமுடன் இணைக்கும் மங்கையர் திருவிழா!

00

ஊரைக் கூட்டி மாங்கனித் திருவிழா

காரைக்காலில் நடைபெறும் பெண்கள் (மங்கையர்) திருவிழா

காரைக்காலம்மையார் கணவருக்கு மாங்கனி

படைத்த நிகழ்வின் கொண்டாட்டமும் இதுவே!

00

வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 6-3-2026


       


   


561 (1061) இந்த வலையில் 2வது பட்டம் - மங்கையர் தாரகை

 

       https://www.facebook.com/groups/1617989741545239/permalink/26798779653039567/?rdid=PEwoCtOS2tLsZSZA#


இந்த வலையில் 2வது பட்டம் -





சனி, 7 மார்ச், 2026

560 (1060) எனது பட்டம் இந்த வலையில் - 1- 2026. முத்தமிழ் தாரகை

               முத்தமிழ் தாரகை--விருது

       குயில்களின் கூடாரம்  - கவிக்குழுமம் எனக்குத் தந்த விருது. -   முத்தமிழ் தாரகை- 2026

 மனமார்ந்த நன்றியைச் சொல்லுகிறேன்.

அனைவருக்கும் மகிழ்வான பெண்கள் திருநாள் வாழ்த்துகள்.

       


            



     


புதன், 4 மார்ச், 2026

559 (1059) uudakam - இலங்கை மாத சஞ்சிகை ஞானம்

 

     


இலங்கை மாத சஞ்சிகை ஞானம்

இதழில் எனது கவிதை     4-3-2026

00  


           


   

அற்புத அகத்திய தாகம்.

00

விழியில் விழும் விம்பங்களை

வரைந்து காட்டும் சாதனமாக

வண்ணமான எண்ண எழச்சியை

வரிசையாகப் பரப்பும் ஆயுதமாக

வானவில்லாகச் சேர்த்து உலகை

வனப்பாக மாற்றும் ஓவியமாக

வையகத்தில் விளைந்தவற்றை வரைபடமாக

விளக்கும் வெள்ளித் திரை கவிதையே!

00

வார்த்தைகளில் அடங்காத கனகதும்பி

வாக்கியமான எழுத்தெனும் பூக்காட்டு

வாசாலகமான(சொல்வன்மை)கவிதையில் நனைந்து

விளாவினால் கவிதையொரு போதையே 

நீ தொலையாதிருக்க நாட்டு

நினைவு ஓவியங்ளை அழகாக!

அறிவு நதியில் அழியாதது

அற்புத  அகத்திய தாகம்.

00

புதுமைக்கவி  வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் 14-1-2026



     




திங்கள், 2 மார்ச், 2026

558 (1058) ஊதுபத்தியான கவி வரிகள்!.....

 

       





 ஊதுபத்தியான கவி வரிகள்!.....

00

பூக்கள் அணிவகுத்த அழகிய மாளிகை

பாக்கள் புனைய வைக்கும் செடி கொடி

பச்சைக் கடலில் மிதந்து சுகிக்கிறேன்

இச்சையோடு எழுதுகோல் விழிக்கிறது மொட்டவிழ.

அச்சமின்றி உயர எண்ணுகிறது கவிதை

மெச்சும் என் உயிரான பனுவல் அரண்மனையை

உச்சமாக இரசிக்கிறேன் இரசனைத் தேனீயாக

உச்சி குளிருது பறவைகளின் ஆர்மோனியத்தால்

00

இதயமாம் என் வானக் கிண்ணத்தில்

பதமான தாரகைச் சொற்கள் நிறைத்து

விதவிதமாகக் காதல் விளக்கு ஏற்றினேன்

மிதமாக நரைத்த மலைத்தலை பாலருவியாக

நிதமும் பாய்கிறது பூமி குளிர

மழையின் இசையென்று மலர் தலையாட்டுது

இழைந்த நீல இரவின்நீள் முத்தமாக

குழைந்த கவி வரிகள் ஊதுபத்தியாக.

00

கவிச்சுடர் - வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 26-2-2026



     




      



568 (1068) sanrithal - (பெண்மை) யாதுமாகி நின்றவள் பெண்ணே!

                 (பெண்மை)    யாதுமாகி நின்றவள் பெண்ணே!   - ( தேன்தமிழ்க் கவிவனம். சர்வதேச மகளிர்தினச் சிறப்புப் பேட்டி.) 00 (குமைதலின்றி – ...