இந்த மனம் ஓய்வதில்லை
அரிய இன்பம் உலகில் எது!
சரிய வைக்கும் இதயத்தை எது!
பெரிய துன்பம் உலகில் எது!
உரிமைப் பெற்றவர் உடன் பிறப்புகளை
பிரியும் துன்பம் உலகில் எட்டும்
பெரிய துன்பம் பட்டதால் அறிகிறேன்.
கூடிய உறவு பிரியும் போது
வாடிய மனம் தேம்பி யழுகிறது.
சொந்தம் இணைந்து பிரிவால் கலங்குவதில்
இந்த மனம் என்றும் ஓய்வதில்லை.
சொந்த பந்தம் என்றும் அழிவதில்லை.
சிந்தும் துன்பம் என்றும் தீர்வதில்லை.
இணை(இரயில்) வண்டிப் பெட்டிகளாய்க் காயம்
இணைவதும் பிரிவதும் ஒரு மாயம்
தாமரையிலையின் நீர் போன்ற மனம்
தாங்கிடும் சாரமிகு துயரின் கனம்.
ஈரமிகு மனம் தேனில் ஈயாகிறது
பாரமிகு பிரிவில் உறவு நெகிழ்கிறது.
அயர்வின்றி மீளவும் இணைவுகள்
துயர் மேலும் சுழன்று வதைகள்
இந்த மனம் என்றும் ஓய்வதில்லை
பந்தம் அந்தம் வரை சாவதில்லை
பிரிவில் இணைவில் உழல்வதில் இம்மனம்
ஒரு போதும் ஓய்வதில்லை ஓய்வதில்லை.
17-12- 2002
(ரிஆர்ரி தமிழ் அலையில் கவிதை நேரத்தில் ஒலிபரப்பானது.)
**************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக