வடுக்கள்
வடுக்களைத் தடுக்க யாரால் முடியும்!
கடுகாக, மலராக நெடிதான வடுக்கள்
காலடிச் சுவடுகளாக மண்மீதாயிரம் கோடி.
நிலாவின் தீராத வடு போன்று.
சுடுவதிலும் ஆறாத நாவடு கலங்கி,
குலுங்கி, அதிர்ந்தோடி வன்மமாகிக் காத்திரமான
மாரடைப்போடிணைந்த பாரிய தாக்கமும் தரும்.
அன்பெனுமகல்விளக்காய் மயிலிறகுத் தடவலே மருந்தாகும்.
தவழ்ந்து வரும் குழந்தை போன்று
அவிழ்ந்து மடிந்து எழுந்து மீண்டுமாய்
கவிழ்தல் நிமிர்தலான அலைகளிற்கு மட்டும்
குமிழாகவோ தட்டையாகவோ வடுக்களே இல்லை.
மூன்று தசாப்த யுத்தம் தந்தது
மூடுமந்திரமற்ற மாற்றுத் திறனாளி ஆக்கப்பட்டவர்கள்.
மூலாதாரமான மாற்ற முடியாத வடுக்கள்.
மூங்கையான (ஊமையான) காலம் காலமான துன்பமிது.
அன்பு ஆழக் கனிந்தொரு வைரமாய்
அழகுத் துளி வயிற்றில் புரளுது.
அடக்க முடியாத மசக்கையில் அவள்
அமுதமெனத் தவிர்க்காது கடிப்பது மாம்பிஞ்சு (வடு)
நிர்வாகச் சிறப்பிற்கானதே உயர் விதிமுறைகள்
நேர்மையற்று ஏதோ காரணங்களால் ஒட்டைகளாலான
சீர்கெட்ட நிர்வாகம் மாபெரும் வடுக்களே
தர்மமுயர்ந்தால் போர் பயங்கரவாத வடுக்களழியலாம்.
தக்காளிப் பழமரைத்துத் தயிர் கலந்து
தடவிய பத்துநிமிடத்தால் முகம் கழுவ
தழும்பு மறையாத காரணமம்மா சொன்னது
முன்பு மழலையில் பொக்கிளிப்பான் வந்ததாம்.
விண்ணுலகேகிய பெற்றோர் உடன் பிறப்புகளோடு
அண்மையாய் வாழ்ந்த அனுபவமான அன்பாளுமைகள்
கண்களில் நீரிடும் காத்திரமான தருணங்கள்.
வண்ணங்களாய் புண்களாய் நெகிழ்வான வடுக்கள்.
17-7-2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக