திங்கள், 29 நவம்பர், 2021

368. ( 941) நேர்மை

 





                                            நேர்மை



நேராக உண்மையாக நடத்தல்

நேர்மை - அவனே நேர்மையானவன்

சீர்மிகு மானிட குணவியல்பு

சார்பான மனிதப் பண்பு

00

பார்வைக்கு இது தெரியாது

பேரெடுக்கலாம் வாழ்விலும் மறைவிலும்

தருவதைச் சமனாகச் சீர்தூக்கும்

தராசுக்கோல் என்பது நேர்மையாம்

00

யார் இவ்வழி தெரிவாரவர்

பேர் சொல்லிட வாழ்வார்.

சீர் பெறுவார் பாராட்டில்

ஊர்போற்ற வாழ்தல் உயர்வு

00

உண்மை நேர்மை  மனதின் 

வெண்மை,   ஒரு வகையில்

உண்மை இயற்கை நிலை

வெண்மை பலருக்கு ஒவ்வாமை

00

                 சாரல் குயில்  -  வேதா. இலங்காதிலகம் - டென்மார்க்  29-11-2021








ஞாயிறு, 21 நவம்பர், 2021

367. (940) கடப்பாடுடன் கடைத்தேற வேண்டாமோ!!!!!

 




கடப்பாடுடன் கடைத்தேற வேண்டாமோ!!!!!

00


தீர்க்க அறிவின் நுண்ணுனர்வின்

கோர்க்கும் அதிகாரம் கோணலாகும்

பார்க்கும் பார்வைத் தெளிவுடன் 

நீர்க்கும் விவாதங்கள் தகர்ந்திடும்.

00

வண்ணங்களாகட்டும் மன எண்ணங்கள்

திண்ணமாய் மாறும் தடுமாற்றம் நிலைமாற்றத்தால்

எதையும் மனங்கொண்டு ஏற்று 

எதிர்நிச்சலாடலாம் நல்லதை விதைத்து.

00

போதிமரம் ஆகலாம் பனுவல்

சோதியெழும்  கவி தவமாகலாம்

பாதியெழுதிய இதுவும் தவமாகுமோ!

பார்க்காது நீவிட்டால் அவமாகாது

00

தமிழீயும் போதை கவிதை

நிமிர்ந்திடும் மாருதமாயுன் பாதையில்

நருமதையாய்த் தொடர்!

பெருநிதியாய் வியாபிப்பாய் உயர்!

00

ஊரெல்லாம் ரீங்காரமிடுமோவென் கவிதை

ஊஞ்சலாடுமோ இறக்கை விரித்து!

ஏ! என்னைப் பாரென்று

ஊற்றுக்கண் திறக்குமோ ஊன்றுகோலாகுமோ!

00

கவிதையென்னுள் பூத்துக்கொண்டிருப்பது

உவிதலற்ற இன்பம் ஊர்தலாக

விதவிதமான சொற்பிழைகளால் வேதனை!

பவித்திரம் தமிழில் பழுதடையுதே!

00

எழுத்துப் பிழை எழுந்தால் 

கழுத்து இறுகுவதான கடுப்பு!

கடைத்தேற வேண்டாமோ கடப்பாடுடன்!

களிம்பேறாமல் மொழியைக் காப்பாற்றுங்கள்!

00

நிலாக்கவிஞர் - வேதா. இலங்காதிலகம் டென்மார்க் - 21-11-2021








வெள்ளி, 12 நவம்பர், 2021

366, (939) புது விழிவாசல்

 




புது விழிவாசல்

00


திருத்திய கண்களில் ஒளிக் கூச்சம்

பொருத்திய புதுவில்லையின் சக்தியது.

இருத்திய ஈரக்கணம் - ஒளடதம்.

அருத்தமானது  மூவேளைத் துளிகளால்

00

பார்வை மங்கல் பயணஈரத்தில்

பாங்குடன் சிறகுலர்த்தும் பறவையாய்

பாசுரமாய் ஆசுவாசமாய்  மைவிழியில்

வடம் பிடிக்கும் ரசனையின் உச்சம் (கண்கள்)

00

மனிதனை மனிதனாக மனிதனுக்கு

மதித்திடவும் தேவை கண்கள்.

ஓவியம் எழுத்து சிற்பத்திற்கு

ஆவி  ஈவது நயனம்.

00

குடித்தனமாகும் புது விழிவாசல்

படிப்படியாகப் பார்வைத் தெளிவு

அடியொற்றி மன  நிருத்தம்

விடிவெனும் மருத்துவ அதிசயமிது!

00

மெத்தெனச்  சிலிர்த்துச் செழித்த

புத்திறகு! கனவுகளின் தொடர்ச்சியிது

பொத்தெனும் மழைச்சிறகுகள் மனதுள்

புத்திளம் மலர்களை மலர்த்துகிறது.

00

எண்ணியாங்கு எழிலாய் வாழப்

புண்ணியம் சூனியப் போர்வையில்லை

கண்ணெனும் கவிதையாம் ஆகாயவீடு

கண் துடித்துயிர்க்கும் வேர் மானுடர்க்கு!

00

கவியருவி – வேதா. இலங்காதிலகம் 

டென்மார்க்   5-11-2021








428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...