செவ்வாய், 26 நவம்பர், 2019

225 . (793 ) மனச்சுடர்த் தெறிப்பு (ஊடகம்)





மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும் காற்றுவெளி சஞ்சிகைக்கு.

மனச்சுடர்த் தெறிப்பு

களவொழுக்கம் களவாகத்தான் இருக்க வேண்டும்.
அளவின்றிக் கதவு திறந்தால்
பிளவுஇ இழவின் வளவே.
00
ஊனமனங்கள் சுதந்திர 
வானத்தை விரிக்க முடியாது.
ஈனப் பாதையை மறக்கவும் முடியாது.
01
ஒரு மனதாலும் உடலாலும்
ஒருவர் பிடிக்குள் அடங்குதல்
பெரும் சிறை தான்
அருமைச் சுதந்திரம் பேரின்பம்.
00
தொல்லையின்றித் தானாகக் காம்பு
தொடர்பு இழப்பது போல
சொல்லாமல் தானே வரும்
வெல்ல முடியுமா மரணத்தை!
00
உலகக் கடல் மொழியாக
படரும் பித்தலாட்டம்இ ஏமாற்று
சுடரும் சூரியனாய்ப் பிரகாசிக்கிறது.
00
ஓடி ஓடித் தழுவுமலை
நாடியும் ஏற்காத போதும்
தேடித் தேடி வருகிறதே பூமியை
வாடித் தளராதோ கோபத்தில்!
வாடினும் தூக்கம் வராவிடிலும்
தேடி உருள்வதேனோ நித்திரைக்காகவோ!
00

 11-11-2019




ஞாயிறு, 17 நவம்பர், 2019

224 . (792 ) மூளை.






மூளை.

கருவூர் அதிசய மந்திர   ஊர்.
குருத்தாக மூளையின் முதல் துளிரங்கு
கருவினுள்ளே  மனித மூளை வெகு
கருத்துடன்   விதைக்கப் படவேண்டும்.
உருவான  முதல் விளைச்சலின்  இயக்கம்
இரு நிலத்து அற்புதம் குவாகுவா சத்தம்

கால்கள் மடித்துத் தவழும் இயக்கம்
கால் எடுத்து மழலை நடத்தல்
கால   நேரத்தில் நிகழாவிடில்
பாலம் அமையுங்கள் நரம்பியல் வைத்தியருடன்.
நலமான மருத்துவச் சிகிச்சையிலும் மேலாக
சூழல் மூளையின் சிறப்புத் தோழன்.

மூளையின் மோசமான எதிரி சோம்பல்
களைவிடும் கோபம் வாழ்நாள்  விரோதி
மூளையிலிருந்து   வன்மம், பேராசை, பொறாமையைக் கிள்ளுங்கள்.
மூளைக்கு ஓய்வெனும் அட்சய பாத்திரம் வாசிப்பு.
காளை போன்ற சுறுசுறுப்பே நோயின் கவசம்.
மூளைக்கும் உடலிற்கும் ஆன்மிகம் சர்க்கரைப்பொங்கல்.

வரம்பற்ற மனவலிகள், இரத்த ஓட்டம்
நரம்புத் தொகுதியைப் பலிகொள்ளும்.
சரமான தலைவலி,   பக்கவாதம், வலிப்பிற்கு
உரமான  சிகிச்சையளித்தல்   மூளைக்கு நலம்.
நேராக மனம்விட்டுப் பேசுதல் பொன்.
பாராத தொலைபேசிப் பேச்சு பித்தளை.

யோகா, உடற்பயிற்சி மனவலிக்கு
யோகம் தரும் சுக நிவாரணி.
வருவது வரவே செய்யுமெனும்,
எல்லாம் நன்மைக்கே - எனும் மொழி
நல்ல மன ஒத்தடமாகும்.  பிரச்சனைகளை வெல்ல
மனஒத்தடற்களின் பின் அணுகுதல் சுலபம்.

29-3-2009.
ரிஆர்ரி தமழ்ஒலியில்  31-5-2009ல் வெளியானது.





223 (791 ) பிரதிபலிப்பு - தாக்கம்






பிரதிபலிப்பு  - தாக்கம்

துப்பாக்கித் திடீர்ச் சத்த வெடிப்பு
தூக்கி வருவது பயமுடை கணிப்பு
துளிர்க்கும் கவிதை வரிகளின் துடிப்பு
துஞ்சும் உணர்வுகளைத் தூண்டும் முனைப்பு
துலக்க வேண்டும் சமுதாயத் தூசிகளை
துழாவ வேண்டும்   இதயத்துச் சிந்தனைகளை.

பற்றையுள் ரோசா  பலரைக்கவரும்
சொற்களின் கூட்டம் மனதில் உரசும்
அற்புத எழுத்து மொழிப் பல்லக்கேறி
முற்போக்கு  வீதியில்  பவனி வரவேண்டும்.
கொற்றமாய்  சமூகத்தில்  முடிசூட வேண்டும்.
கற்பூரமாய் மனங்களில் மணக்க வேண்டும்

 17-11-2019




சனி, 16 நவம்பர், 2019

222. (ஆன்மிகம் - 30 ) புதிய சகலகலாவல்லி மாலை







புதிய சகலகலாவல்லி மாலை

(ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும் ..என்ற இராகத்தில்..)

அறுபத்தி நான்கு கலைகளையும் அகல
அறிவிக்கும் அருள்நிறை தாயே - என்
அம்மை பராசக்தியே உன்னை நிதமும்
அஞ்சலிக்கிறேன்   சஞ்சலம்   தவிர்ப்பாய்
உள்ளத்   தூய்மையும்  உருகும் மனமுமாய்
உன்னதமானவளே உன்னைத் துதித்தால் - உலக
உயர் கலைகள் உறவாகி உவப்பாய்
உள்ளத்தில்  படியாதோ தாயே!

(வெண்டாமரைக்கன்றி நின்பதம் தாங்கவென்  வெள்ளையுள்ளத்
தண்டாமரைக்குத் .... -  எனும் இராகத்தில்..)

1. இதயத் தாமரையில் உன்னை
இருத்தி நாளும் தொழுதிட
இகமும் எனக்குத் தூசாகும்
இதமாய் அருள் தர 
இரங்கிடு தாயே  என்
இதயத்துச் சொத்தே இரத்தினமே
இணையில்லாக் கருணைத் தாயே!
சகலகலாவல்லியே!

2. கவியும் கவின் மிகுந்த
கருத்தும் கொலுவிருக்க
கருவியுடன் இசை கலக்கும்
பெரும் திறன் பொலியும்
பலன் அருள்வாய் தாயே!
பத்மாசனவல்லியே! உன்
பாத கமலம் பொற்பாதமே
சகலகலாவல்லியே!

3.இலக்கியம் இலக்கணம் தமிழுடன்
இணைந்து கலக்க அருள்வாய்
இவையில்லாத் தமிழ் தமிழல்ல
அவையில் அனைவரும் நாண
அவைப்புலமையில் அடியெடுக்க
அருமைத் தமிழ் தருவாய்!
அலை  மலர்த் தாயே
சகலகலாவல்லியே!

4.  பேச்சும் பொருளும் கலந்து
ஓச்சும் வாக்குத் தருவாய்.
சூட்சும அறிவுத் தீயே
தீட்சண்ய  கல்வித்  திருவே!
தாட்சண்யத் தாயே! தமிழே!
மாட்சிமையுடைய மலர் மகளே!
மாதவச் சுடரே அருளே!
சகலகலாவல்லியே

5.   கேட்டு  அறியும் திறனும்
பாட்டும், அவதானமும், பேச்சும்
தீட்டும் ஓவியமும் திருவாய்
கூட்டி அருள்வாய் புவியில்
கேட்டு, பார்ப்போர் வியந்து
பணித்திடும் பலன் அருள்வாய்
பங்கஐவாணியே! செல்வமே
சகலகலாவல்லியே!

12-10-2007

(நயினை விஐயன் ஐரிஆர்  வானொலியில் 2-10-2008ல:வாசித்தேன்.
இலண்டன் தமிழ் வானொலிக்கும் எழுதியது.)





வெள்ளி, 15 நவம்பர், 2019

221. (790 ) பக்குவ மனம்







பக்குவ மனம்

சங்கீத மனதின் அபசுரம் 
சங்கடமாக்கும்  சுப சுரத்தை
சந்தேக சுரம்  கீதம் சிதைக்கும்.
சுக தேகத்து ஆரோக்கியம் பகைக்கும்.
நம்பிக்கை கீதம் ஆரோகணிக்கட்டும்.
அவநம்பிக்கை நாதம் அவரோகணிக்கட்டும்

அனுபவத்தோடு அறிவு பிறக்கும்.
அகங்காரமழிந்து  அன்பு  தவழும்.
அறங்கள் கூடுமென்றால் மனிதம்
சிறந்ததைத் தினமும் கைப்பற்றலாம்.
உறவாடும் வழியில் குறளியாடும்
உறுத்தல்கள் முற்றாக அழிக்கலாம்.

பிரேமையானவன் பிரேமை தேடுவான்.
பிரச்சனையானவன் பிரச்சனை தேடுவான்.
பிரயோசனப் பொழுது நற் பிரசாதமாகும்.
பிரதிக்னையோடு பக்குவம் பெறலாம்.
பிரயோசன வாழ்வின் பிரார்த்தனைகள்
பிரவாகமாகி நற் பலன் பெறும்.

விலங்கிலிருந்து விடை கொடுக்க
கலங்குபவனுக்குக் கை கொடுக்க
பலவீனனுக்குப் பலம் கொடுக்க
பக்குவ மனது அடியெடுக்கும்
பக்குவ மனதுப் பதறாத நிதானம்
சிக்கலின் போதும் சிதறாத விதானம்.

  2004

In tamil authors.com




Thank you...



220. (789 ) அன்பின் தேடல் 14.11-19 குழந்தைகள் தினம்





குழந்தைகள் தினம்

பிள்ளைக் காதல் செம்மை.
கொள்ளையடிக்கும் தினமெம்மை.
கிள்ளை மொழி துள்ளி
 சொள்ளையின்றி நீராட்டும்.
அள்ளிப் பருகி ஆனந்திப்போம்

 (செம்மை - அழகு பெருமை. 
சொள்ளை – சொத்தை,  இழுக்கு, செயற்கேடு.)
14-11-2019






அன்பின் தேடல் 

ஊன்உயிராய் உலவிக் கலக்கும் 
தேன்மொழி மாந்தரும், இயற்கையில்
தேன் மாந்தும் வண்டுகளும்
ஒட்டி இணையும் உலக இயக்கம்
ஒட்டி உறவாடும் உன்னத அன்பு

தென்றலின் தடவலில் துய்க்கின்ற உலகம்
கன்றின் உரசலில் சிலிர்க்கின்ற தாய்மை
நீரின் தழுவலில் துளிர்க்கின்ற  பூஞ்செடி
அன்பின் ஆதரவிற்கு ஏங்கும் ஜீவஉயிர்கள்
இத்தேடலில் தானே உலக இயக்கம்
இவ்வாடலில் தானே பிரபஞ்ச மயக்கம்.

15.9.2002





வியாழன், 14 நவம்பர், 2019

219 (788 ) தடுப்புகள் தடையில்லை.









தடுப்புகள் தடையில்லை.

ஊற்று  நீரை அடைப்பதுவும்
காற்றைப் புட்டியில் அடைப்பதுவும்
கற்பனை ஊற்றைத் துடைப்பதுவும்
விற்பன்னராலும் இயலாதது.

பூமி வெடித்துப் பிளப்புதுவும்
பூம்பம் சடுதியாய் உருவாவதும்
பூஞ்சணமெனும் பற்றுநோய்பீடிப்பதுவும்
பூரணமாய் யாரும் அறிவதில்லை

தானே இயற்கையாய்த்  தோன்றும்
தானே இயற்கையாய் அழியும்.
வீணே போடும் தடைகள்  காலத்தில்
காணாமற் போகும் காற்றின் ஓட்டமாய்.

சாயாத நம்பிக்கை உயிரின் தெம்பாய்
ஓயாத முயற்சி வாழ்வின் பயிற்சியாய்
தீயாத இலட்சியத்தை வாழ்விலடைந்தால்
தேயாத இன்பம் வாழ்வில் தொடரும்.

in tamilauthors.com






ஞாயிறு, 10 நவம்பர், 2019

218.. (787 ) செம்புலம் சஞ்சிகை - கோப்பாய்க் கோட்டை....




கோப்பாய் செம்புலம் சஞ்சிகை உள்ளே....




இந்த மலரில் கோப்பாய்க் கோட்டை பற்றிய எனது...வரிகள்-








கோப்பாய் கோட்டை. கோப்பாயில் கோட்டையா! வியப்பு! உண்மை! எப்பக்கம் உள்ளது! பார்த்தீர்களா! அறிவோம்! செப்புவேன்! செங்கற் கோட்டையல்ல! அகழி சுற்றுச் சுவர் கொண்டதல்ல. செப்பரியதே! கற்பனை, கனவு, காதற் கோட்டையல்ல ஒற்றுமை செழிக்காத துரோகத்தின் அடையாளம். அற்புத நிர்வாக அரச இராசதானியின் உற்சாக ஆட்சியின் பாதுகாப்பு அரண். அற்றைநாளின் தமிழின சரித்திர ஆதாரம். ஓற்றுமையுடைந்த காட்டிக் கொடுப்பால் பறங்கியர் எற்றுதலாகி அழித்திட்ட பழைமைக் கோட்டையிது. நல்லூரிராசதானி உப தலைநகராக கோப்பாயிருந்ததாம். கோப்பாய் கோட்டை பெருமைக்கு உரியது கோ - என்றால் அரசன் என்றும், பாய் - என்றாலிருப்பிடம் என்று கோப்பாய் அரசனின் இருப்பிடமெனும் அரிய கருத்துண்டு. கோப்பாய் பதி யாழ் - பருத்தித்துறைவீதியில் பாய் விரித்ததாகவிரு பக்கமும் பதினெட்டு சதுரமைல். கடல் மட்டத்திலிருந்து இருபதடி உயரம் கிழக்கே செம்மணிக்கடல், வடக்கே நீர்வேலி தெற்கே நல்லூர், திருநெல்வேலி உடன் மேற்கே கோண்டாவில் இதன் எல்லைகளாகும். கோப்பாய் சந்தியின் வடக்கேயிருநூறு யாரிற்கு அப்பால் நீராடு தடாகமும் கோட்டையுமிருந்ததாம். இலங்கையினிறுதித் தமிழரசர் ஆரிய சக்கரவர்த்தி இலங்கிய காலத்தில் புகழ் பெற்ற இராசதானியாக நல்லூர் சிறப்புப் பெற்றது. நல்லூரின் பாதுகாப்பரணாக உப அரசாக வல்லவொரு பதியாக கோப்பாய் மிளிர்ந்தது. நல்லூர் . கோப்பாய் கோட்டைக்கு சுரங்கப்பாதையுமிருந்ததாம். கோட்டை அழிந்திப்போது கற்கள் துருத்தியபடியுள்ளதாம் குதியடிக் குளமென்பது நீராடுதுறைப் பெயராம். சங்கிலியன் செகராசசேகரன் சிறையிலிருந்து தப்பி சுரங்கப் பாதையூடாகக் கோப்பாய் கோட்டையையடைந்தானாம். காக்கை வன்னியன் சூழ்ச்சியால் சங்கிலியன் பிடிபட்டான். நல்லூர் மந்திரிமனையிலிருந்து தூர்ந்தநிலையில் சுரங்கமாம். சங்கிலியனை கோவாவிற்கு அழைத்துச் சென்றனர். நல்லூர் கோப்பாய் கோட்டைகளை பறங்கியரிடித்தனர். அரசனடிக்கடி வந்து தங்குமிடமான கோப்பாய் கோட்டை ஆதி சரித்திர முக்கியத்தின் எச்சமே தெற்கு எல்லைக் கோட்டை வாய்க்காலே இன்று பழைய கோட்டை நினைவுச்சின்னமாகிறது. நல்லூரின் யமுனா ஏரி போன்றே குதியடிக்குளமும் இங்கு நீராடு தடாகமானது. அழிந்து மண்ணுளாழ்ந்த கோப்பாய் கோட்டை காலத்தில் தனிச் சிறப்புப் பெற்றது. குதியடிக் குளம் 1955ல் ஆழமாக்கப்பட்டதாம். அமிழ்ந்தவை ஆராய்வோடு வெளியுலகிற்கு வரவேண்டும். வேதா. இலங்காதிலகம். (பெட்டகோ) டென்மார்க். ஆவணி. 2017 ஓய்வுபெற்ற முன் பாடசாலை ஆசிரியர்.




வெள்ளி, 8 நவம்பர், 2019

217 . (786 ) பொய்









பொய்

பொய்யருக்குப்  பேய் முகம்.
தூய்மை அகம் பொய்யற்றது.
பொய் பேசலாம் நன்மை
பெய்யுமெனில்  என்கிறது பொய்யாமொழி

மெய் பேசும் குடும்பத்தவன் 
பொய் பேச   மாட்டான்
பொய் தன்னைத்தானே சுடும்
மெய்யர் ஒளிர்வார் சாந்தியால்

பொய்த்திடும் வானத்தால் பஞ்சமே
பொய் மாயை, போலி, நிலையற்றது.
பொய்க்கும் தன்னம்பிக்கை வீழ்ச்சியாகும்.
பொய்யாமை விளக்கே உவகிலுயர்த்தும்

பொய் ஒரு முகமூடி.
பொய்யின் கொடி அடங்காமை.
பொய் சொல்லாதது கண்ணாடியொன்றே.
வாய்மை எப்போதும் பயபபடாதது.

 8-11-2019







வியாழன், 7 நவம்பர், 2019

216. (785 ) அலைபாயாதே!







அலைபாயாதே!


(ஆடகம்- பொன், ஈடழிதல்-சீர்கெடுதல், யாப்பு-கட்டு)

ஊடக வெளிச்சத்தில் பெண்கள்
ஆடகப் பொற்பாவை ஆகலாமென
ஈடழிதல் நவீன உண்மையாக
நாடகங்கள் யுரியூப் ஊடகத்தில்.

பெண்ணின் மானத்தைச் சந்தியிலிட்டு
உண்டு இல்லையென ஆக்குகிறார்.
பெண்ணே தன்னைப் பவுத்திரமாகக்
கண்ணாய்க் காத்தல் அரண்.

பெற்றவர் கடன் நல்லவற்றைப்
பற்றுடன் இடித்துக் கூறுவது.
கற்று உயராது திமிரடைதல்
அற்ப ஊடகங்களால் சீரழிதலே!

யார் யாரைக் காப்பது!
யானே எனக்குக் காவலன்!
யாப்பு இறைவனும் தியானமும்
யானாகிய உன்னை நம்பு.

 10-10-2019




செவ்வாய், 5 நவம்பர், 2019

215. (784) வித்தியாசமா! ஐய்யைய்யோ!








வித்தியாசமா!  ஐய்யைய்யோ!


வித்தியாசமாகச்    சிந்திக்காதீர்!
வித்தியாசமாகக் கவிதை  எமுதாதீர்!
தத்தித்தத்திக்    கும்பலோடு  கோவிந்தாவாக
அத்தானே    அன்னக்கிளியே   எழுதுங்கள்.
பத்து     முறையுமதுவே    பழக்கம்
பித்தப்    பிடித்தப்     புதுச்சொல்
சத்தென்று   இணைக்காதீர்  அது
சத்தியமாய்     எடுபடாது.  பெரிய
மெத்தப்  படித்த   புலமையோவென்று
ஒத்ததாக  ஏற்க  மாட்டார்.

11-6-2017


In amirtham kulu









திங்கள், 4 நவம்பர், 2019

214. (783 ) கீழடி அகழ்வாய்வு -






கீழடி அகழ்வாய்வு -


கீழடியின் தாய்மடி குமரிக்கண்டமாம்.
கீழடி குமரிக்கண்ட மதுரையாம்.
வைகைநதி  சுமந்து சென்ற
வைர இரகசியங்கள் இதுவோ!

தமிழ் வரலாற்றின் நங்கூரம்
அமிழ்ந்திடாத நன்னம்பிக்கை முனை
இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டு
பழைமையான கீழடி நாகரீகமோ!

முழுமை நாகரீக வாழ்வினாதாரம்
யானைத்தந்தச்  சீப்பு, தாயக்கட்டை  
அணிகலன்கள்,   ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு 
காவிரிப்பூம் பட்டினத்திலும் ஆய்வு பெருமளவில்.

 5-10-2019

பானைகளில் பிராமிய எழுத்து
ஆதன், முயன், வேந்தன் 
பெயர்கள், வணிகம், தொழில்நுட்பம்
கலாச்சாரம் ஓங்கி  இருந்தமை
அறுபது விளையாட்டுப் பொருட்கள்
பேரினத்தின் ஆய்வுப் பேரொளி

நகரநாகரீக ஆதார அடி
ஆயிரத்து ஐந்நூறு தொல்பொருட்கள்
தலைநிமிரச் சொன்னது தமிழனை.
மொகஞ்சதரோ ஹரப்பா சிந்துவெளிக்கு
முந்தியவர்கள் வாழ்ந்த ஆதாரங்கள்.
மூவாயிரம் ஆண்டுக்கால நாகரீகம்.

3-10-2019




428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...