சனி, 16 நவம்பர், 2019

222. (ஆன்மிகம் - 30 ) புதிய சகலகலாவல்லி மாலை







புதிய சகலகலாவல்லி மாலை

(ஆயகலைகள் அறுபத்தி நான்கினையும் ..என்ற இராகத்தில்..)

அறுபத்தி நான்கு கலைகளையும் அகல
அறிவிக்கும் அருள்நிறை தாயே - என்
அம்மை பராசக்தியே உன்னை நிதமும்
அஞ்சலிக்கிறேன்   சஞ்சலம்   தவிர்ப்பாய்
உள்ளத்   தூய்மையும்  உருகும் மனமுமாய்
உன்னதமானவளே உன்னைத் துதித்தால் - உலக
உயர் கலைகள் உறவாகி உவப்பாய்
உள்ளத்தில்  படியாதோ தாயே!

(வெண்டாமரைக்கன்றி நின்பதம் தாங்கவென்  வெள்ளையுள்ளத்
தண்டாமரைக்குத் .... -  எனும் இராகத்தில்..)

1. இதயத் தாமரையில் உன்னை
இருத்தி நாளும் தொழுதிட
இகமும் எனக்குத் தூசாகும்
இதமாய் அருள் தர 
இரங்கிடு தாயே  என்
இதயத்துச் சொத்தே இரத்தினமே
இணையில்லாக் கருணைத் தாயே!
சகலகலாவல்லியே!

2. கவியும் கவின் மிகுந்த
கருத்தும் கொலுவிருக்க
கருவியுடன் இசை கலக்கும்
பெரும் திறன் பொலியும்
பலன் அருள்வாய் தாயே!
பத்மாசனவல்லியே! உன்
பாத கமலம் பொற்பாதமே
சகலகலாவல்லியே!

3.இலக்கியம் இலக்கணம் தமிழுடன்
இணைந்து கலக்க அருள்வாய்
இவையில்லாத் தமிழ் தமிழல்ல
அவையில் அனைவரும் நாண
அவைப்புலமையில் அடியெடுக்க
அருமைத் தமிழ் தருவாய்!
அலை  மலர்த் தாயே
சகலகலாவல்லியே!

4.  பேச்சும் பொருளும் கலந்து
ஓச்சும் வாக்குத் தருவாய்.
சூட்சும அறிவுத் தீயே
தீட்சண்ய  கல்வித்  திருவே!
தாட்சண்யத் தாயே! தமிழே!
மாட்சிமையுடைய மலர் மகளே!
மாதவச் சுடரே அருளே!
சகலகலாவல்லியே

5.   கேட்டு  அறியும் திறனும்
பாட்டும், அவதானமும், பேச்சும்
தீட்டும் ஓவியமும் திருவாய்
கூட்டி அருள்வாய் புவியில்
கேட்டு, பார்ப்போர் வியந்து
பணித்திடும் பலன் அருள்வாய்
பங்கஐவாணியே! செல்வமே
சகலகலாவல்லியே!

12-10-2007

(நயினை விஐயன் ஐரிஆர்  வானொலியில் 2-10-2008ல:வாசித்தேன்.
இலண்டன் தமிழ் வானொலிக்கும் எழுதியது.)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு