ஞாயிறு, 17 டிசம்பர், 2023

421 (954) இருத்தல் காட்டும் பனுவல்

 



                



          இருத்தல் காட்டும் பனுவல்


குளிரின் போர்வையில் நடனம்.

தெளித்த மழையில் துளிரிலைகள்

எளிமையாய்க் காற்றை முத்தமிடுகிறது.

இளிதலற்ற இயற்கை மிளிர்விது

00

பூமியோடு ஒட்டும்  பனி

சாமியோடு முட்டும் பூவாகி

சேமிக்கும் திமிராகி மௌனிக்கிறது

பூசிக்கும் கவிதையாய் நிறைகிறது

00

கம்பர் கவிதைத் தாகத்தால்

எம்பிய அறிவு மோகம்

கம்பீரமாய் எழுந்து பொங்கி

கம்பக்கூத்தாகி மொழி பறையாகிறது.

00

இல்லாமற் போகும் வாழ்வில்

இருத்தல் காட்டும் பாக்கள்

செருக்குடை எண்ண மகரந்தப்பொடி

விருப்புடன் திண்மையாய்ப் படிகிறது.

00

வேதா. இலங்காதிலகம்   தென்மார்க்   17-12-2023









செவ்வாய், 14 நவம்பர், 2023

420 (953) மாயவாழ்வு

 



             



மாயவாழ்வு


வெற்றி எண்ணங்களையே சிந்திப்பதால்

வெற்றிக்கு மனமே திறவுகோல்.

கடிவாளத்தைச் சரியாக இயக்கி

சிகரத்திற்கும் ஆழத்திற்கும் செலுத்துங்கள்.

பலமாக உங்களை நம்புங்கள்!

பல குதிரைச் சக்தி மனதிற்கு.

00

அதிகாரிக்கு அதிகாரி ஆகும்

ஆட்டி வைக்கும் அதிகாரி.

அலையைச் சிறைவைத்த காற்றே

அலையை விடுதலை செய்கிறது.

இரவுக்குள் புகுந்த நிலவுக்கு

பகலுக்கான போராட்டம் இல்லை

00

மாதவமான உண்மை அன்பும்

மாறுவது புதுமை அன்று

மாறுவது தான் உலகம்

மாயாசால உலகினிலே இந்த

மாயவேடம் மாற்றாவிடில்

மாய வாழ்வும் இறங்கிடுமே!

00

வேதா. இலங்காதிலகம்  தென்மார்க்  14-11-2023






வியாழன், 2 நவம்பர், 2023

419 (952) மனிதப் போக்கு

 


             



    மனிதப் போக்கு


பொறுப்பைக் கழட்டி வீசுவதும்

உறுப்பைச் சேதப்  படுத்தலும் ஒன்று.

மறுப்பற்ற உதவி அன்று

வெறுப்பின்றி விருட்சமானது இன்று

00

செய்  நன்றியைக் கொன்று

உய்யல் (வாழ்தல்) இறை வரமா!

கொய்யாவில் உறவு தலைகீழாகிறது.

பொய்யா மொழியே மறைகிறது

00

மனித  வாழ்வில் உறவு

புனிதம் இழந்து பொசுங்குகிறது

இனிது புகழென அணைப்பது

இனிது   அற்ற சுயநலத்தால்

00

வேதா. இலங்காதிலகம்  தென்மார்க் 30-1-2023







சனி, 28 அக்டோபர், 2023

418 (951) அன்பெனும் சுடர்.

 


            




    அன்பெனும் சுடர்.


(திகம்பரன்-கதியற்றவன்-சிவன்)

00

முன்னம் செய்த தவமென்பேன்

மூத்தோர் தந்த வரமென்பேன்

கன்னி நீயென் கை சேர்ந்தால்

கணமே உயர்ந்த பிறப்பென்பேன்

00

மின்னல் அன்ன பூஞ்சிரிப்பில்

மீளாதென்னைச் சிறையிலடை

கன்னற் செம்மை நிறங்காட்டி

பின்னும் உலகைச் சிறப்பாக்கு.

00

இணைந்தாடி ஒன்றாகும் இதயம்

இடைவெளி களைந்து இசையுமிழும்

பிறப்புடன் திறமை பிறக்கிறது

மெருகூட்ட சாம்பிராணியாய் மணக்கிறது.

00

கோபதாப மனச்சுழலைப் புறமுதுகிட

தீபமாவது அன்புச் சுடர்

திறமைகள் திகம்பரன் இரகசியமல்ல

அறிவில் உயர்தலே வாசித்தல்

00

கவித்தாமரை - வேதா. இலங்காதிலகம்.தென்மார்க் -28-10-2023







திங்கள், 23 அக்டோபர், 2023

417 ( 950) மதிப்பற்ற நிலவுகள் பூமியில் - ஆங்காரம்...

   


            



மதிப்பற்ற நிலவுகள் பூமியில்


முத்த இதழ்கள் பிரிந்து சிதறின.

சத்தம் வேண்டாம் பக்கத்துப் பேயின்

பித்துக் காதலன் தாங்க மாட்டான்.

அத்தனைபொறாமை அப்பிய உருவம்

00

பரவசம் எமக்கு!  அரவம் தீண்டுமவனுக்கு!.

சரசம் தாங்காத ஆற்றாமை மனம்!

பரதம் ஆடும்  வார்த்தைகள்!  ஊத்தை

நரகம் அவனுக்கு வரமான உதாரணம்.

00

பூந்தளிர் பரத்திய வானத்தை ரசிக்க

முந்தாத நெஞ்சு    கீற்று நிலாவை

பாந்தமாய் மனம் சந்திக்காத நிலை

சீந்தாத நிலவே  பூமியில் இவர்கள்.!

00

-----------

ஆங்காரம்...


ஆங்காரம் திமிரின் ஆட்டத்தைக் குறைத்தால்

ஓங்காரம் மனதுள் பாங்காக நுழையும்.

தீங்கான எண்ணத்துத் தீயின் ஆட்டம்

நீங்கிடும் நிலையாய் நிச்சயம் நிச்சயம்!

00

பெரியவர் நடத்தை பெருமையாய் இருந்தால் 

உரிமைகள் தானே உறைவிடம் நாடும்

பரிதாபம் பண்பைக் கைவிட்டு நழுவும்

மரியாதை நன் மனதால் உருவாகும்.

00

வேதா. இலங்காதிலகம்- தென்மார்க் - 23-10-2023








திங்கள், 16 அக்டோபர், 2023

416 (949) நன்நிலை ஒருமைப்பாடு.

 


      

நன்நிலை ஒருமைப்பாடு.


குறளே உலகப் பொதுமறை

திறனை நினைத்தால் மகாசக்தி

திறமை வினையாகில் மனிதமாவாய்

புறமாகிடாது நாளும் காத்திடும்

00

புத்துலகு அமைக்க நாதன்

சத்துத் தந்தான் ஞானமாக

உத்தமமாய் மக்கள் மகிழ

எத்துணை சிறப்பு வழி!

00

முத்தாக அமைந்து உயர

ஓளவை  தந்த  நன்நீதி

கௌவி நீயும்  வளர்ந்திடுவாய்!

கௌரவமாகும் உன் வாழ்வு

00

உனக்காக நிலவு காயவில்லை

எனக்காகவும் மலர் மலர்ந்து

தினகரனும் கதிர் வீசுகிறது

அனந்த வீரியமாக நடைபோடு!

00

உன் பாடு பொருள்களில்

உன் இரசனைக் குறிப்புகள்

இன்னிசை ஆலாபனை ஆகட்டும்

நன்நிலை ஒருமைப்பாடு வளரட்டும்

00

கனல்கவி -வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் -17-10-2023






சனி, 14 அக்டோபர், 2023

415 (948) நாண் (தூண்) நீ!

 



நாண் (தூண்) நீ!



உறவென்று நினைத்தால்  உள்ளம் மகிழும்

அறமற்ற உறவு அருவருப்புத் தரும்

திறம் எது! அன்பு செய்தல்

இறப்பு வந்தால் எது மிச்சம்!

00

எல்லையிட்டு வரையறை செய்தல் அச்சறுக்கை

தொல்லை  யில்லை  அன்பு மிக்கோர்

சொல் செயல் உறவாடும் ஒழுக்கம்

பல் நலம் உறவாடும் கோட்பாடு

00

குலம் விளங்க மனிதநேயம் பேணாவிடில்

பல கலைகள் கற்றும் பயனென்ன!

நலம் தரும் வெண்மை மனம்

பலம் தரும் வல்லவராய் வாழ்!

00

மாண்புறு மனிதனாய் வாழ முயலு!

காண்கிற மக்களைக் கவர்ந்து இழு!

தூண் போன்று பண்பாட்டைத் தாங்கிடு!

நாண் நீ நல்ல சமுதாயத்திற்கு!

00

கிட்ட மரணத்தைத் தொட்டவரையும்

எட்டி சுக நலன் விசாரி

தட்டி நலன் கேட்காதவன் மனிதனில்லை

எட்டிப் போவது நோய் மனம்

00

கவிச்சுடர்  -வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் -14-10-2023





வெள்ளி, 29 செப்டம்பர், 2023

414 (947) பிறனைப் பொய்யனெனும் உன் பொய்மையை அழி!

 


  




பிறனைப் பொய்யனெனும் உன் பொய்மையை அழி!
00

பிறரை ஏமாற்றி வயிற்றை நிரப்புதல்
இறப்பிற்குச் சமம்   அறமற்ற செயல்.
குறத்தனம் (கள்ளத்தனம்) வாழ்வில் குறளி ஆடல்
நிறம் மாற்றும் நல் மனித நேயத்தை.
00
பெரிய மனிதத் தன்மையாக அரிதாரமும்
சரியும் போலிக் கிரீடமும் எதற்கு!
அரிமாவாக  நிமிர்ந்து நிற்க மனிதனாகு!
இரிசல் (மனமுறிவு) புலம்பலை நிறுத்து! அறிவாளனாகு!
00
ஏமாற்றி வாழாதே! ஏமாளியாவது நீயே!
ஓமாக்கினிக்குச் சமம் துரோக சிந்தனை
கைமாற்று (விற்பனை) பெருமிதமாக  பேராவலாக  நடக்க
சீமானாகு! சீயென இழிவு படாதே!
00
அன்பின் இதய சிகரத்தில் ஏறு!
அப்பன் பெயரை அழகாகக் காப்பாற்று!
சுப்பன் கந்தன் முதலீட்டில் உயர்ந்தாலும்
திருப்பிக் கொடுக்கப் பேரம் பேசாதே!
00
அநீதியை அணைத்து அநியாயம் பெருக்காதே!
அழுக்கு எண்ணங்களை அடியோடு போக்கு!
அடுத்தவனைப் பொய்யனெனும் உன் பொய்மையை அழி!
இழுக்கற்று வாழ்!ஒருமுறையே வாழ்வு!
00
கனல்கவி  வேதா. இலங்காதிலகம். தென்மார்க் - 29-9-2023




புதன், 20 செப்டம்பர், 2023

413..(946) கடலோடு பேச்சா!

 





கடலோடு பேச்சா!


கடலோடு பேசுகிறானா! அங்கும் மௌனமா!

அட தனிமையா!  அடக்கும் கட்டுப்பாடா!

இடக்கு முடக்கான வாழ்க்கைத் துணையா!

இடமில்லையா உன் உறவுகளுடன் உறவாட!

00

முகநூலிலும் உறவை முகர்ந்திட முடியாதா!

அகமகிழ வாட்ஸ்அப்  உறவு இல்லையா!

அன்பு பொக்கிசம்! கொண்டாடத் தெரியாதா!

அன்பை உணரத் தெரியாத பிறப்பா!

00

கடற்   காற்றாய்த் தழுவிய அன்பு

தடமிட்டது    உண்மையாய்   உறுதியாய் அன்று

விடமாகி வேசமானதா காலூன்றியதால் இன்று!

கடந்திட்ட    தனிமைத் தீவா  இது!

00

அன்பு இவ்வளவு தானா! வேடம்

அருமையாய் கலைகிறதா! சிகரம் ஏறாதா!

பருமனாகாதா பந்தம்! மனநோயை மாற்று!

பெருமையாக மாற்று!  வழமையை மாற்று!

00

இன்ப  உணர்வு  இதம் தரும்

இந்த வெள்ளிகளுடன் உறவாடு! அது

சொந்தங்கள் போன்ற சுகம் தரும்!

பந்தமென மண்ணை அளைந்து மகிழு!

00

வேதா. இலங்காதிலகம்  தென்மார்க்   20-9-2023


வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

412. (945) இயலாத கனவு

 







இயலாத கனவு
00

தேவதையால் மீட்சி வரும் நம்பிக்கையில்
பூவிதையும் சொரியாத ஏமாற்றம்
சீவிதம் ஏமாற்றத்தால் விலை போவதா!
சேவிதம் கூடக் கை கொடுக்காதா!
அவள் உதவுவாள் நம்பிக்கை!
எவற்றையும் பொருட் படுத்தாது
கவனிப்பற்ற ஏழைக் கனவாகக்
கவளம் கூடக் கிடைக்கலை
00
கவறலால் இதயம் பலவீனமானது.
திவலை இரக்கமும் அற்ற
புவன வாழ்வால் என் 
சுவரற்ற சுவர்ணபூமி ஆனது.
கிராமம் படிப்பகம் சுமப்பதான
இராசாங்கக் கற்பனை ஒரு 
மிராசுகுடிப் பெரும் நினைப்பு
மனிதநேயம் ஒதுங்கும் நிலை 
00 
புனித தவம் மனிதநேயம்.
வனித ஓவியங்களைப் பொறாமை
மைனிகன் ( கறையான்) அரித்து அழிக்கிறது.
மேனிலை வெற்றுக் களவாகிறது.
மனிதன் ஏன் மாறுகிறான்!
இனிய உறவை மறக்கிறான்
நனி வாழ்வு இழந்து
தனியே தானே அழிகிறான்!

00
வேதா. இலங்காதிலகம்- தென்மார்க்-  6-2023


செவ்வாய், 20 ஜூன், 2023

411 (944) பிறை முழுமதி ஆகும்

 





பிறை முழுமதி ஆகும்

00


ஏன் மாறினாய் தேன் அன்பை

ஏன் விலக்கினாய் உன் பாதையில்!

வன்மை வாழ்வு வழி மாற்றியதா!

இன்ப துன்பக் கட்டில் புரளுதா!

00

அள்ள அள்ள உறவு இனிக்கும் 

உள்ளம் அள்ளிட மறுப்பது காலம்

பள்ளம் இது பரவசமோ வாரிசுக்கு!

கள்ளமற்ற பாதையில் தொடர ஏறு!

00

நிறை அறிவு பழி வாங்காது

அறைகூவாது ஆத்திர மிகுதியில்

இறையாக உறை! கறை களரும்.

பிறை முழுமதி ஆகும் வழமை.

00

வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் - 20-6-2023

செவ்வாய், 13 ஜூன், 2023

410 (943) வானிலை அறிக்கை போல... வாழ்க்கை அறிக்கை உண்டா?.

 





வானிலை அறிக்கை போல... வாழ்க்கை அறிக்கை உண்டா?.

00


தந்திரம் கொண்ட மனநிலையால் விலகி

மந்திரமான மனிதநேயம் அணைப்பது நலமிகு 

சுந்தரமான பிள்ளை வளர்ப்பில் உருவாகும்.

தன் காரியம் முடிக்க ஏமாற்றும்

பின்னோக்கும் சூறாவளி மனநிலை அறிய

சின்ன வானிலை (வாழ்க்கை) அறிக்கையும் வராது.

பின்னிப் பிணைந்து தீக்குச்சியாய்ப் பற்றும்.

அன்ன மனித மனம் புரியாதது.

ஒவ்வொரு விநாடியும் வௌ;வேறு முகங்களில்

அவ்வொரு மனிதரில் பூக்கும் வஞ்சம்

பூசல் மழையும் பூகம்பமும் மன

பூஞ்சணங்களும் பூங்கணையும் ஒன்றாகிறது பூவுலகில்.

00

மீன்கள் நீரில் உறங்குமா!

ஊன் தேடி அழுதிடுமா!

நோன்பில் மந்திரம் செபிக்குமா!

வானம் அதனைப் பார்க்குமா! 

நானும் பார்த்திட ஆசை.

00

பூமிக்கு மட்டுமா பொறுமை!

வானுக்கும் சொத்து பொறுமை.

தனதென எதையும் பார்க்காது

தனதான பாதையில் பயணம்.

மனமார மகிழ்வுடை பயணம்.

00

வேதா. இலங்காதிலகம்.  தென்மார்க்.  23-5-2023


செவ்வாய், 23 மே, 2023

409. (942) பெருந்தகவுடை மனிதம்....

    



        




பெருந்தகவுடை மனிதம்....

00

பொறுப்பைக்   கழற்றி  வீசுவதும்

உறுப்பைச் சேதமாக்கலும் ஒன்று

வெறுப்பின்றி பரவி விருட்சமாகிறது  

மறுப்பற்ற உதவி வென்று

00

செய்ந் நன்றியைக் கொன்று

உய்யல்   இறை  வரமா!

கொய்யாவில் உறவு தலைகீழாகிறது.

பொய்யா மொழியே மறைகிறது.

00

மனித   வாழ்வில் சொந்தம்

புனிதமிழந்து சுயநலத்தால்  பொசுங்குகிறது

இனிது புகழென அணைத்து 

இறுதியில் கொண்டேகுவது  எது!

00

வெறும் கையோடு வந்து

பெறும் அனைத்தும் விட்டு

பெயர்தல் ஆகிறோம் உருவின்றி...

பெருந்தகவுடை மானிட வாழ்வு!

00

வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 8-3-2023

வெள்ளி, 19 மே, 2023

408. (941) அச்சறுக்கை (பாதுகாப்பு)

        



               




அச்சறுக்கை (பாதுகாப்பு)
00

காடு போன்று பற்றை
ஓடு களன்ற வீடு
கேடு அற்ற கவனிப்பிற்கு
கோடு போட்டது மனது
00
நாடு விட்டு வந்தும்
பாடு இன்றிப் பாதுகாக்க
தேடுதலாய் நம்புவது யாரை!!!!
வீடென அச்சறுக்கை தேவையே!!!!
00
வேதா.இலங்காதிலகம் -டென்மார்க் - 19-5-2023

வெள்ளி, 24 மார்ச், 2023

407. (940) விருது.

 


     




விருது.

00


விருதுகள் பொழியும் காலமிதா!

அருச்சனை மொழிக்காய்  அமைவதா!

உருவாகும் உயர்விற்கு விருதா!

எருவாகச் செழித்திட உதவுமா!

00

மொழி   நேசர் பூசித்து 

வழி சமைப்பார் விருதிற்கு.

அழிமதியோர்   இலஞ்சத்திலும்  வளர்ப்பார்

விழியாகவும் நேர்மையாளர் காப்பார்

00

மொழி நேசருடன் வாழ்தலினிமை

எழிலான தாயகமும்   அயலிடமான

தொல்காப்பியத் தோன்றல்  இடமாம்

நற்பாரதமும் விருதின் விளைநிலமோ!

00

நேர்மை நியாயம் கொண்ட

கோர்வை விருது  மதிப்படைத்து

போர்வைச் சமூக சேவையும்

தீர்வாகும் ஒரு விருதிற்கு.

00

வேதா. இலங்காதிலகம் -  தென்மார்க் - 22-3-2023







சனி, 11 மார்ச், 2023

406. (939) ஊடகம் - எண்ணப் பிரவாகம்...



 














இலங்கைச்   சஞ்சிகை - ஞானத்திற்கு மிக்க நன்றி
00

எண்ணப் பிரவாகம்...
00

எண்ணப் பிரவாகம்  நல்
வண்ணப் பழந்தமிழ்ச் சொற்தொடராய்
திண்ணமாய்க் குவித்தல் என்னாசை
மண்ணிலே தமிழ் நிலைக்கட்டும்
00
கடுந்தாக உதடு நனைத்து
கடும் கனவுத் தென்றலாகி
ஓடும் என் விழிகளுக்குள்
ஊடும்தமிழ் வைரமாய்ச் சிதறட்டும்
99
தொல்காப்பியப் பழந் தமிழ்
நல் காப்பியத் தேனூற்றை
வெல்லமாய் மாந்தித் துளிர்த்திட
நல்லருளாகட்டும் தித்திப்புக் கனிரசமாக
00
முதுமைத் தேகமெங்கும் நாலடி
புதுமைச் சீரடியாய் இறங்கி
மதுரமுத்த வெறியாய் கொட்டட்டும்
விதுரனாய் (அறிஞனாய்) மாசற உலகறியட்டும்
00
விரல் எடுக்கும் அதீதத்தால் (எட்டாதது)
விளையும் முத்துகள் ஏராளம்
விழுதற்ற தமிழ: செய்து
வரலாறு படைக்க வேண்டும்
00
கவிதையும் தமிழும் குருதியுடன்
கனதிப் பொருளாய் தசையோடு
கதை பாடட்டும் நீளகலமாய்
விதை விளையட்டும் விண்ணெட்ட
00
 - 10-9-2022






ஞாயிறு, 5 மார்ச், 2023

405. ( 938) ஊடகம் - சந்திரோதயம் முகநூல் இதழ் - மதிமலர் March

சந்திரோதயம் முகநூல் இதழ் - மதிமலர்   March




மாற்றம் வேண்டும்   (புதுக் கவிதை)

00


அந்தம் வரை தனிப்பாதையாய்

சொந்தப் பாதைநடையில் அவதானமாய்

பந்தமான பிற உறவுகளை அலட்சியமாக்கும்

இந்த உலகு மாறிவிட்டது

00

குழந்தையாய் அணைக்கும் புத்தகம்

குடமுனி (அகத்தியர்) போல் அறிவீந்திடும்

திடமாய் மயக்கும் சுவகை (கள்)

விடமல்ல பெருநிதியாகவும் பேரறிவீயும்

00

இஞ்சேருங்கோ! இஞ்சேருங்கோ!

ஆமையோட்டில் தலை யடக்குவதாய்

ஐக்கியமான புலனடக்கம் தேவை

ஐம்பொறியாவும் தீப்பந்தம் தான்

00

கற்றவர் நடத்தை கருணையோடு கலந்தால்

சுற்றம் சூழும் செழித்து.

முற்றுப்புள்ளி  அரைப்புள்ளி   ஒற்றிக்காட்டல்

நற்றமிழ் என்றும் நலமுறவைக்கும்

00

வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 6-2-2023

-----------------------


2

சந்திரோதயம் முகநூல் இதழ் - மதிமலர் - காதல் கவிதை

00


அவனியடங்கலும் காதல்

00

உன் மௌனத் தியானத்தில்

என் காதல் கருவெழுகிறது.

உன் கண்களின் அசைவில் 

சின்னக் கவிதைகள் நெடுங்கவிதைகளாகிறது.

சின்னக் கிள்ளலில் உவமையணியும்

பென்னம் பெரிய உருவகமும் உருவாகிது.

00

ஆக்கிரமிப்புக் குணமேன் காதலின்றி

உக்கிரமாய் மாறுகிறது. அதனால்

கூக்குரலிடுகிறது வேதனையின் மௌனம்.

பூக்களின் தேன் ருசித்த

ஊக்கம் எங்கு மறைந்தது. 

திக்கெட்டும் பரவுமா காதல்!

00

இனிமை எண்ணங்கள் திகட்டட்டும்

தனிமைக் கடலில் காற்று

தனியாக நதியிலாடும் காற்று

எதுவும் சொல்லாது சிறகுவிரித்து

எவரையும் கணக்கெடுக்காது அவனியடங்கலும்

இனிய காதலாய் வீசுகிறதே!.

00

 6-2-2023


செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

404. (937) கண்ணாடிச் சாடி

 




    



கண்ணாடிச் சாடி


பெருங்கடல் தொலைத்த மீனாக

அரும் தாயகம் தொலைத்தோம்.

இருப்பு ஐரோப்பிய  மண்ணெனும்

பெருங் கண்ணாடிச் சாடிக்குள் நாம்.

00

குழலும் யாழும்   குரலோடிணைந்த

மழலை மொழியே மகத்தான  இன்பம்

பஞ்சுப் பொதியானபிஞ்சு முகமே

அஞ்சுகமே மானுட  அரிய பொகிசமே!

00

- 20;2;203

428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...