வியாழன், 28 ஜனவரி, 2021

333. (896) 1. நலங்கிட்டு அழகூட்டுவேன் 2. மானுடவீதி

 

பா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் கவிதைகள் இரண்டு! (geotamil.com)



1. நலங்கிட்டு அழகூட்டுவேன்


கவிதை எழுதுதல் மகிழ்வு

கவினுறும் ஆய்வும் உயிர்ப்பு

கவிந்த பவளப்பாறையாம் படிமங்கள்

குவிந்த அறிவால் ஒளியாக்கமாகிறது.


கலைமொழியாம் தமிழ் வலைமொழியாகிறது

அலைபோற் பெரும் பயணமாகிறது.

விலையில்லாச் சாகர சம்பத்தாகிறது

கொலையிட எவராலும் முடியாதது


உணர்ச்சியெனும் உருவத்தை வார்த்தை

உளியால் செதுக்குதலே கவிதை

கவிதையுரு வடிக்கும் வரை

குவியும் அவத்தை ஒருவிதமானது.


தமிழாற் பொலி மனதார்

அமிழ்தாய்க் கழிபேருவகை கொள்வார்

சொற்களின் சிம்மாசனம் மகுடவாசகமாய்

இதயம் குளிர்த்தும் மழையாகும்


நாளும் எழுதும் சொற்களே

மீளும் அலங்கரிப்பில் புதுப்பெண்ணாக

ஆளுமையோடு கிறங்கும் மாயவுருவாகிறது

மூளுதலாகிப் பலரை ஈர்க்கிறது.


சொல் அதை வேற்றுருவாக்கி

பல்லாக்காக,   லோலாக்காக சொர்க்கமாக

வில்லாக ஏழு வண்ணங்களோடு

நல்லாக வளைத்தலே கவிதை

விலங்கிடாத பறவையே சொல்

நலங்கிட்டு அழகூட்டுவதென் பணி


10-1-2021


2.   மானுட வீதி


தன் மதிப்புத் தலையிலேற

தன் அங்கவியல்பு தானாயாட

தன் அங்கவுரு பரகசியமாக

தன் செயலே தடுமாறும்

தன் கட்டுப்பாடு கண்ணியமிழக்கும்.


எது மனநிறைவுக்கு ஏவுகிறதோ

அதுவால் மனநிறைவு அள்ளலாம்.

பொதுத் திருப்தியின்றித் தூக்கம்

ஒதுக்கப் படுதல் பெருந்தாக்கம்

புது முயற்சி தீர்வாகலாம்.


தோரணப் புகழ் தேடுதல்

ஆரணமாகும் (வேதம்) திருப்தியற்ற இதயத்தில்.

வாரணமான நிம்மதி வழுகிடும்

காரணமே தூக்கம் கழலுதல்

நாரணியருளட்டும் மாரணம்(மரணம்) தவிர்க்க.


பகலிரவாய்ப் பவித்திரப் படிகளில்

தகவுடன் அடியெடுத்தல் தாராளமானதே

முகம் மலரச் சுகசேமம் கேளாராகி

அகம் மூடி வாழ்த்தொலிகள் தூவாராகி

தகவிழக்கும் மானுட வீதி


10-1-2021



https://www.geotamil.com/index.php/2021-02-11-18-02-23/6440-2021-01-24-06-22-59





சனி, 23 ஜனவரி, 2021

331. (894) கறைபடியும் நட்பூக்கள்.

 




கறைபடியும் நட்பூக்கள்.


வாழ்வினிலே இனிதாம் நட்புப் பூக்கள்.

ஆழ்ந்து மனதில் மல்லிகை வாசமாய்

சூழ்ந்து கணங்களை உயிர்ப்பிக்கின்றன. அது

கவிழ்ந்திடில் கறை படியும் நட்பூக்களாகின்றது.


செதுக்கிய அழகுச் சிலையாகும் மனதில்

பதுக்கும் அமுத உயர் நட்பு.

மதுர மோகன முறுவலாக வானத்து

மீன்களாக ஜொலிக்கும் அற்புத நட்பு.


கைதவறி உடையும் கண்ணாடி போன்றது

மை சிந்திக் கறையாவது கூடாநட்பு.

தர்ம மனங்களின்றி அதர்ம மனங்களில்

நல்ல நட்பு நிர்வாணமாகிப் பல்லிளிக்கும்.


பொறுமை துருவ நட்சத்திரமானால் நட்பு

புன்னகை தேசமாகும். ஆத்திர அஸ்திரம்

மின்னலாய் வந்தால் நட்பெனும் பிரகாச

நிலவில் கருமேகம் பரவி இருட்டாகும்.


ஆரத்தியெடுக்கும் மேதகு நட்புகள் பட்டுக்

கம்பள வரவேற்புப் பெறும். ஆதரவாகப்

பேணாவிடில் சிலை மேல் விழுந்த

எச்சமாகிடும் உன்னத இன்ப நட்பு.


நம்பிக்கைத் துரோகங்கள் நங்கூரம் இட்டால்

நட்பு அலைந்து அல்லாடும். சூர்ப்பநகையின்

கூரிய நகங்களாய் ஆகவிடாது அன்பொளியால்

நட்பூக்களிற்கு நன்கு உரமிட வேண்டும்.


  3-8-2016







ஞாயிறு, 17 ஜனவரி, 2021

330. (893) சங்கினில் மூழ்கும் சமுத்திரங்கள்.

 




சங்கினில் மூழ்கும் சமுத்திரங்கள்.


சங்கமத்தில்  இதயச்சங்கினில் மூழ்கும் சமுத்திரங்கள்

எங்கள் ஐம்புலன்களால் அனுபவித்த காதல்

சங்கை மேவிப் பொங்கியின்று நுரைத்து

கங்கு கரையில்லாமல் மங்காது தங்கி

பொன் விழாக் கண்டு நீளுகிறது.


தீய உள்ளத்தில் நிறையும் சூதுஇ

காயும் வஞ்சம்இ  இலஞ்ச ஊழல்

நோயாய் உலகிற்குக் கேடு  விளைவிக்கம்.

ஓயாத மனச்சங்கினில் மூழ்கும்

மாய சமுத்திரங்களிவை மனிதரையழிக்கிறது.


பெருகிய சாதி சமயக் கொடுமை

ஒரு ஓடு மூடிய ஆமை

பெரும் பாடுபட்டும் அழிக்கவியலாத

கருமையிது சமுதாய வறுமை மனித

மனச்சங்கினுள் மூழ்கும் சமுத்திரங்கள்.


பெண் ஆணாதிக்கம் என்று மோதி

கண் மயங்கி ஒருவரையொருவர் தாக்கி

புண்ணாகி நொந்து தன் மேன்மை

எண்ணத்தால் பெருமை வாழ்வு கீழாகி

அண்ணித்த சங்கினில் மூழ்கியிவை சமுத்திரங்களாகிறது.


இலங்கைத் தமிழர் என்ற சங்கு

உயிரற்று உலகநாடுகளும் மறந்த புளஇளியானது

உயிர்கள் மக்கள் வாழ்வும் பலியானது

தமிழர் உரிமைச் சங்கினுள் மூழ்கும்

மக்கள் என்ற மகா சமுத்pரங்கள்.


20-3-2016 





வெள்ளி, 15 ஜனவரி, 2021

329. (892) அழகின் எல்லை இதுவோ

 




அழகின் எல்லை இதுவோ


அழகின் எல்லை இதுவோ! எல்லையுண்டா!

அமைதியாய் ஒளிப்பாதையில் நடந்தால்

அழகிற்கு எல்லை உண்டோ அறியலாம்

அந்தமற்ற அழகுப் பாதையது


ஆசுவாசமாய் நீரில் இறங்கி முதலில்

ஆசைதீரக் கால்களை அசைத்து நனைக்கலாம்

ஆதவன் சுடமுதல் அமுங்கி எழலாம்

இந்தக் குளிர் நீராடலுக்கேது எல்லை


இவ்வண்ணம் செப்புதலில் பெருநிறைவு...

எவ்வளவு ஆழமாக உள்ளெடுப்பாரோ

ஒவ்வொன்றும் தாமரையாய் நெஞ்சிலமரும்.

ஒளிவுமறைவற்ற அற்புத இயற்கையனுபவம்.


பச்சையம் தரும் பரிதி ஒளியே

இச்சையுடன்   பரவசமாய்  இதமுடன்

உச்சமான   கோடையீந்து  உயிரினங்களை 

மகிழ்விக்கு;ம் உயிரை   வருடுமின்பமே



2016





328. (891) எனக்கு வேணும் இந்த வீடு! - பொய்க்கால் குதிரை

 


எனக்கு வேணும் இந்த வீடு!

நான் வாங்குகிறேன் இந்த வீடு!
நாட்டுப்புற வாடையோ டமைந்த கூடு!
நானிலத்தி லொரு நிலமிது பாடு!
நாற் பொருளையும் அனுபவிக்க ஏற்ற வீடு!
துளசி மாடத் துணையோடு வயற்காடும்
துள்ளும் உள்ளத்தோடு வரப்பு ஆசனமும்
துணையாய் எழுதுகோலும், துயிலா மனமும்
துயரமின்றித் தொடுப்பேனே கவிதை நாணை!
23-3-2016
(நானிலம்:- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்.
நாற்பொருள்:- அறம், பொருள், இன்பம், வீடு.)









பொய்க்கால் குதிரை

பொய்க்காலில்  நடப்பவரே படும்பாடு!
பொய்க்கால் குதிரை ஆட்டம் கலை
புறத்தோற்றம் குதிரையாலான மரக்காலாட்டம்
புரவியாட்டம், புரவிநாட்டியமெனவும் அழைப்பார்

இராசா இராணி வேடத்தில் ஊர்வலத்தில்
இசைக்கருவி  நையாண்டி மேளத்தில்
இரசித்து ஆடுமிது தஞ்சாவூரில் பிறந்ததுவாம்
இரசிக்குமொரு கிராமியக் கலையாம்.

2018










புதன், 13 ஜனவரி, 2021

327. (890) ( பெண்மை . 38 ) பகலில் ஒரு வெண்ணிலா

 



பகலில் ஒரு வெண்ணிலா 


வெண்ணிலா வந்ததும் வெளிச்சம்

கண்ணிலே மாதிரியே உற்சாகம்

மண்ணில் அனைத்தும் பொன்னிறம்

விண்ணின் இரவுக் கவிதையது

வெண்ணிலா நீயெனக்கு பகலிலடி


சந்தனத் தென்றல் சாமரமே

வந்து சாயும் பார்வையுமே

எந்தனின் ஊக்க மாத்திரையே

விந்தையடி உன் நெருக்கம்

வித்தைகள் செய்யத் தூண்டுதடி


காதல் முகம் காணாவிடில்

கூதல் இருளோடு பிணையுதே

நாதம் உன்மொழி என்னிதய

தாகம் தீர்க்குதே நீயென்

பகலின் வெண்ணிலா தானடி;


சிற்பியமைக்காத செதுக்காத சிலையே

அற்புத ஒளி சிந்துகிறாய்

நற்தவம் நான் செய்தேன்

கொற்றவளேயென் வாழ்வின் திருவே

தற்புகழ்ச்சி இது இல்லை


பகலிலொரு வெண்ணிலா பகட்டானவள்

நகலில்லை நீயடி அசலென்னுயிரே

அகம் நிறைந்தொளி வீசும்

திகட்டாத தமிழ்ச் சுவையே

தகதகக்குமென்  தங்கச் சிலையே


19-3-2016






செவ்வாய், 12 ஜனவரி, 2021

326. (889) இமைக்க மறந்த விழிகள்......

 



இமைக்க மறந்த விழிகள்......


சமைக்க மறந்த வனிதையினைத் தீர்க்கமாய்

இமைக்க மறந்தான்இ புதினமாய் பார்த்தான்.

சுமையென எண்ணாமல் அவள் கர்ப்பமென்பதை

இமைக்க மறந்து விழிகளை விரித்தான்!


யார் தான் ரசிக்கார் மழலையை!

பார் அளக்க ஆரம்பிக்கும் முதலடியை

நீர் வழி கண்டு ஓடுவது போல:

தீர்க்கமான காலடி இமைக்க மறந்தோம்.


மீனாக நீந்தக் கற்றது போல 

நாமாக எடுத்து ஊட்டாமல் உணவை

தானாக எடுத்துண்ணும் துருதுருப்பு

தேனாக இனிக்கிறது இமைக்க மறக்கிறேன்.


புலம் பெயர் இளையவர் திறமையின் 

பலம் வியக்க வைக்கிறது. தமது

நலம் தேடும் சாதனை வழியின்

பலத்தில் நாமிமைக்க மறந்த விழிகளாய்!


 பா வானதி    வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்   13-3-2016





325. (888) நடைபழகும் வண்டி

 




நடைபழகும் வண்டி


படுத்திருந்து விரல்கள் சூப்பிய பிள்ளை

அடுத்து காலுதைத்துக் கைகளாட்டி விரல்களைத்

தொடுத்து ஆராய்ந்து மெல்லப் பக்கம்

படுத்துப் புரண்டு கால்கள் இணைக்கும்


மெல்லத் தவழ்ந்து பிடித்து எழுந்து

வல்லமையாய்ச் சிற்றடியைக் கை பிடித்து

செல்லமாய்த் தொடர ஆதரவு தருவது

நல்ல ஒரு முச்சக்கர நடைவண்டி


நிதானமென்ற தடை தாண்ட ஆதரவும்

அவதானமாய்ப் பிள்ளை நடக்க வலுவானதும்

முச்சக்கர பிள்ளை நடைவண்டியாம்

அச்சங்க காலம் முதல் இருந்ததாம்


பழங்கால மரபு இந்த நடைவண்டி

புழங்குதலில் கேடுடைத்து நலீன சுழல் வண்டி

விழல் எழுதல் இயற்கையான படி

மழலைக்கு ஆரோக்கியம் வலிமைப்படி


இடுப்பு முதல்  கால் தசைகள்

எடுப்பாய் வலுப்படும்  இந்த  நடைவண்டியால்

கொடுப்பனவு கை காலீறாக வலுப்படும்

தடுப்பின்றிக் காலூன்றத் தன்னம்பிக்கையும் உயரும் 


பிள்ளை தானாகத் தனது அவயவங்களையும்

பிணைத்து நிதானத்தைக் கற்க உதவும்

இணையற்ற சாதனம் முச்சக்கர நடைவண்டி

துணையாகும் நடை பலமடையும் வண்டி.


4-3-2016





324. (887) (என் மன முத்துகள் - 15)

 





என் மன முத்துகள் - 15

13-3-2005.

 மறைந்திருந்து மரத்திற்கு உதவும் வேர் அஃறிணை. மறைந்திருந்து மனிதனை உதைக்கும் மனிதன் உயர்திணை. உயர்திணை செயலினால் அஃறிணையாகிறது. அஃறிணை தன் செயலினால் உயர்திணையாகிறது. படைப்பினால் ஏற்பட்ட தவறல்லவிது. கடக்கும் மனித வாழ்வில் நிழும் மனிதத் தவறு இது.

மழலைக்கு நடை பழக நடை வண்டி பலம். மழவனின்(இளைஞன்) நடை தொடர தன்னம்பிக்கை பலம். நடுக்கும் குளிரில் உழைக்க ஆரோக்கியம் பலம்.நாவறியா மொழி சரளமாக் பேச்சுப் பயிற்சி பலம்.

 - வேதாவின் மொழிகள் - 5-2-2012


வேதாவின் மொழிகள்.

 23-3-2005.

உங்கள் பிள்ளைகள் எல்லை மீறும் போது நீங்கள் எப்படி எடுக்கிறீர்கள். தாங்கிக் கொள்ள,  எற்றுக் கொள்ள முடிகிறதா?

 ஆதலால் முதலில் பெரியவர்கள் உங்கள் எல்லைகளை        நீங்கள் அறியுங்கள். உங்கள் எல்லைக் கோட்டை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். எதிலும் அளவுடன் இருத்தல் சிறந்தது.

மயிலிறகு ஏற்றும் வண்டியானாலும்இ அதையும் அளவோடு ஏற்றாவிடில் அச்சு முறிந்து விடும் என்று திருவள்ளுவரும் தனது குறளில் ' வலியறிதல்' எனும் அதிகாரத்தில் கூறுகிறார்.


 எந்த வழி எமக்குச் சிறந்த வழியோ அவ் வழியைத் தெரிவு செய்யலாம். ஒருவரின் எழுத்துத் திறமை  சிறப்புற இல்லைஇ கோர்வையாக  எழுத முடிவதில்லையெனில்இ தன் பேச்சுத் திறமையில் கவனம் செலுத்தலாம். மிக நல்ல முறையில் பேச்சு வன்மையை வளர்த்து முன்னேறலாம். அது போலப் பேசுவதற்குக் கோர்வையாகச் சொற்கள் வரவில்லையாஇ குரல் கீச்சுக் கீச்சு என ஒத்துளைக்க மறுக்கிறதா! பிறருக்குக் குரல் இனிமை தரவில்லையா? இருக்கின்ற எழுத்துத் திறன் மூலம் சுய திறனை வெளிப்படுத்திப் பிரகாசியுங்கள். இதுவே அறிவுடைமையயாகும்.








திங்கள், 11 ஜனவரி, 2021

323. (886) ஓலைக்குடிசை

 







ஓலைக்குடிசை


நம்பிக்கை உயர்வு உழைப்பு நிறைவு

தும்பிக்கையாகுமொரு  ஏழைக்கு சொந்தக்குடிசை 

அம்சமது! ஓலைக் குடிசையானாலென்ன  வெற்றி

துவம்சம் செய்யாதோ உலகத் துன்பங்களை


உள்ளம் குளிரும் மனவமைதி எளிமை

அள்ளி மெழுகிய காணியின் பசுமை

கிள்ளித் தூவிய கோலத் தூய்மை

துள்ளும் உள்ளம் வெள்ளிச் சாரலாய்


மாமர நிழல் மாலையின் மருதம்

மாமண்டப உணர்வாளன் ஏழை பங்காளன்

மாகாணம் ஆளும் மானஸ்தன் மனதினில்

மாரியில் வேதனை மாமழை தரும்.


30-11-2016





சனி, 9 ஜனவரி, 2021

322. (885) எதிர்நீச்சல்

 



எதிர்நீச்சல்


மேடையில் கவர்ச்சியாம் மொழிகளுடன்

மேதகு சிறகுவிரித்துப் பேசியும்

மேதையாக எழுதி மேன்மக்களாயூர்வலம்

மேம்பாடு நடைமுறையில் பூச்சியம்


மனத்தூய்மை அறங்களில் முழுமை

மனமாசற்ற வாழ்வு மேன்மை

மனமாண்பில் தலையானது வாய்மை

மனமகிழச் சொல்வதுபோற் செய்யலாம்


கரும் ஓவியம் நிறைமனம்

பெரு விருப்பாய்ச் சுடராது

அருமை வாசனையும் படராது

அருவருப்புக் குரூரமே இதழ்விரிக்கும்


மாசற்ற நெஞ்சுடையாரைத் தேடி

ஆசற (குறையற) அமைதியான ஏக்கம்

தூசற பழகுவாயா என்னிடம்!

நீசமற்ற உறவு தேவை.


தமிழை மொண்டு பசியாற

அமிழ்கிறேன் மொழிக் கடலுள்

அமிழ்தினுமினிய எந்தப் புகாருமற்ற

தமிழுறவு  தேவை சாத்தியமா!


வன்மம் நிரம்பாத குவளையில்

உன் தேநீரை ஊற்றுவாயா!

நன் மரகதவீணை மனதை

வன்மை வீராப்பு வீம்பாலழிக்காதே.


7-1-2021 





428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...