ஞாயிறு, 30 ஜூன், 2019

118. . (697) மழலையின் மனிதம்






மழலையின் மனிதம்

அம்மா உணவு கொடுப்பதைப் பிரதிபலித்து
அம்சமாய்ப் பறவைக்குணவு கொடுக்கிறாள் மழலை.
அம்முவுக்கும் உலகினனைத்துக் குழந்தைகளுக்கும் 
அன்புறவுகளும் பெற்றோருமே மாதிரிப் படம்

புனிதப் பாசமும் பாசாங்கும் கூட
இனிதான கண்ணாடி மனதில் பதிகிறது.
மனிதமும் அங்கிருந்து எழுந்து விரவுகிறது.
மனித மனச் சட்டியிலிருந்து குழந்தையுள்ளே ஊடுருவுகிறது.

3-2-2018




செவ்வாய், 25 ஜூன், 2019

117. (696) புதிதாய் ஒரு விதி செய்வோம்.






புதிதாய் ஒரு விதி செய்வோம்.

சுதந்திரக் காற்று சுகமாய் வீசிடவும்
சுந்தரக் குழந்தைகள்  சுத்தமான விதிகளையும்
மந்திரமாக சிறு மழலையில் தொடங்கியும்
சிந்தனையில் ஏற்றிட சீரான வழி எடுப்போம்.
ஐந்தில் வளைவது ஐம்பதில் வளையாது.

விதியே  இதுவென்று  விடாது தொண்டு 
மதியோடு புதிய முறை கொண்டு
புதிதாய் ஒரு விதி கண்டு
நிதியாக நல்ல நம்பிக்கை கொண்டு
நதி போல பாதையை  செப்பனிடுவோம்.

கல்வியாம் அரிய கற்பகத்தை ஊன்றுவோம்.
செல்வமாய்க் கடமை செய்யெனப் பதிப்போம்.
நெல் வளமுயர  நெஞ்சார முயலுவோம்.
மெல்லின மங்கையரை மதிக்கப் பழக்குவோம்.
முல்லை மலராய் மழலையைப் பேணுவோம்.

முத்தான தமிழை முடக்காது காப்போம்
உத்தமப் பெற்றோரை உறவுகளை மதிப்போம்.
மொத்தமாய்க் கையூட்டை முழுதாய் அழிப்போம்.
சொத்தாம் குளங் புதிதாய் ஒரு விதி செய்வோம்.
களின் சேறு வாருவோம்.
அத்துமீறி மரம் அரிவோரை அறிவுறுத்துவோம்.

இத்தனைக்கும் நல் விதி செய்வோம்.

13-7-2018



திங்கள், 24 ஜூன், 2019

116 . (695) என் மனச் சிறையில்.







 என் மனச் சிறையில்.

நன்றாகவும் தீதாகவும் எத்தனை எத்தனை!
சொன்னதும் சொல்லாமல் இருப்பதுவும் எத்தனை!
சொன்னால் துடிப்பார்கள், வெறுப்பார்கள், மகிழ்வார்கள்
சொல்லாவிடிலும் மனம் அமைதியில் மூழ்கும்.

திருடன் திருடியதை மனச் சிறையில்
திறந்து பேசினால் பிடிபட்டுச் சிறையில்.
திருமணம் செய்ததை மனச் சிறையில்
தில்லுமுல்லாக மறு திருமணங்கள் உலகில்.

பெற்றவர் காலம் முடிந்தும் நாளும்
பெட்டகமெனும் என் மனச் சிறையில்
கொற்றவராய் வீற்றிருந்து வழி நடத்தும்
பேறு கொண்டது என் வாழ்வு.

பால காலத்து முழு நினைவுகளும்
பாடமாக மனச் சிறையில் திரும்ப
நீளப் படற்களாக ஓடுவது மறக்க
முடியாத உயர் நினைவுகள் வாழ்வினிலே.

3-6-2016





115. (694) உன்முகம் அறியாமலேயே







உன்முகம்  அறியாமலேயே

உன் தமிழென்னை வியக்க வைத்தது.
என்ன ஒரு தமிழென்று அசந்தேன்.
உன் நட்பு தேவையென்று உணர்ந்தேன்.
என்னொடு இணைத்து மனம் மகிழ்ந்தேன்
என் போன்று தமிழில்  ஆழ்வோனென்று
இன்ப இலக்கிய நண்பனென்று மகிழ்ந்தேன்.

அத்தனையும் பொய்யாகி  கனவு ஆனதேன்!
உத்தமப் பிரபல கவிஞர் வரிகளையுன்
சொத்தென்று போட்டிகளிற்குச் சமர்ப்பித்தாய்  ஏன்!
இத்தனை பெரிய ஏமாற்றம்  ஏன்!
சித்தம் கவர்ந்த நட்புகள் வரிகளையன்றோ
எடுத்தாண்டுள்ளாய் உன் சிந்தனை என்று.

நட்புகளிற்குத் தெரிவித்தால் நீதிமன்றம் போவார்களோ!
எவ்வளவு இலகுவாக இணையத்தில் எடுத்தாய்!
இதற்கு இன்னொரு பெயர் உள்ளதறிவாயா!
எத்தனை பாடுபட்டுச் சொந்த வரிகளுருவாகிறது!
சுத்தமான கள்ளமற்றதுன்  தமிழென எண்ணினேன்
உள்ளிருந்த உன் முகம் அறியாமலேயே.

(ஏமாந்துவிட்டேனடா உன்முகம் அறியாமலேயே!)

 27-12-2017





ஞாயிறு, 23 ஜூன், 2019

114. . (693) கை.







 கை.

இடது கைப் பழக்கம்
வலது கைப் பழக்கமான
கையெழுத்து பல நேரங்களில்
கை கொடுத்து உதவும்.

இடது கையை வலப்புறமும்
வலது கையை இடப்புற
மூளையின் அரைப் பகுதிகள்
கையாளுவது உடல் இயக்கம்.

கையெனும் கரம் வரம்.
கைப்பலம் பத்து விரல்கள்.
கை வைத்தியம:; தரமானது.
கைரேகையால் பலன் அறிவோம்.

எதுகை மோனை இணைத்து
கைதேர்ந்த பண் எழுது.
கைவரிசை தமிழில் காட்டி
கைப்பற்று ஒரு நற்பெயரை.

30-7-2016



சனி, 22 ஜூன், 2019

113.. (692) யாருக்கும் வெட்கமில்லை





  யாருக்கும் வெட்கமில்லை


வெட்கம் நாணம் கூச்சம்
கட்கத்தில் வைத்தோர் ஏராளம்
கெட்ட நாடகங்கள் அரங்கேற்றம்
போட்டிகளில் விதிமுறை இருந்தும்
வெட்கமின்றித் தலைகீழாக நடக்கிறார்.

அநீதியாக நேர்மையின்றி வெட்கமின்றி
மானமிழந்து. அட்டூழியம் செய்கிறார்
கெட்ட அரசியல் நடத்துகிறார்
வெட்கமின்றிப் பெண்ணை அழிக்கிறார்.
கட்டான காதலைக் காமமாக்குகிறார்.

கடமையில் கருத்து கண்ணில்லை.
தேடல்கள் தேவைகளில் அளவில்லை.
அன்புக்கு நல்ல நண்பரில்லை
உமிழ்வது எதிலும் உண்மையில்லை.
இதனால் யாருக்கும் வெட்கமில்லை.

தமிழ் தொலைக்காட்சியில் தமிழில்லை.
ஆங்கிலப்புலமை தமிழில் ஏன்
அதுபற்றி யாருக்கும் வெட்கமில்லை
தமிழைக் கொல்வதுபோல் மனிதக் கொலையும்
இதனால் யாருக்கும் வெட்கமில்லை

13-7-2016




112. (692) காயா பழமா





காயா பழமா

கன்று மனதில் ஊன்றிக் கலகலத்த
அன்றைய குழந்தை விளையாட்டு இது.
வென்றால் பழமும் தோற்றால் காயுமென
நன்றாகப் பல நிலையில் பாவித்தோமிதை.

தலையா வாலா, ஒற்றையா இரட்டையா போன்று
காயா பழமாவும் சொக்கட்டான் ஆடியது.
லலி உன்னொடு கோபமாம் நேசமாக
காயா பழமா கேட்போமா நடுவரின் கேள்வியிது.

ஆழ நோவின்றி அன்றைய வயதில்
ஆடிய போர் சமரசம் இன்று குழந்தைகள்
அறிவாரோ வெளிநாட்டில்!  பழமென்றால் இனிக்கும்
விளையாட்டில் வெற்றியும் பழம் தானே என்றும்!


11-7-2016







புதன், 19 ஜூன், 2019

111. (690) உனக்கு நான்!






உனக்கு நான்! 

சௌபாக்கியமாய் பழத்தட்டோடு வெகு
சௌக்கியமாய் புன்னகைக்கும் சிலையே
சௌமியமான உன்னுருவில்   நான்
சமைந்தது உண்மையே மச்சியே

அமைதிக் கண் வீச்சில்
தூண்டில் மீனானேன். தந்தக்
கரங்கள் தாங்கிய தட்டுச்
சாயாது தங்கமே கவனமடி!

அத்தானுன் கண்ணிலிருந்து மறையேன்!
சித்தம் கலக்குமுன் புன்னகையில்
மொத்தமய் சிதறுகிறேனடி  சிங்காரியே!
அத்தை பெத்த இரத்தினமே!

உனக்கு நான்!  நீதானடி 
எனக்கு!  சீராக சீர்வரிசையை
கொண்டு சேரடி! மாலையில்
நான் வருவேன் மறக்காதேடி!

28-6-2016.-





திங்கள், 17 ஜூன், 2019

110 (689) நினைவில் நின்ற பயணம். .








நினைவில் நின்ற பயணம்.

வயது பதினைந்து பதினொராம் வகுப்பு
பாடசாலைச் சுற்றுலா இலங்கை முக்கிய
இடங்களை மல்லிகா வானில் அருமையாக
முப்பது இலங்கை ரூபாவில் சுற்றினோம்.- 1960

சிட்டுக்குருவிகளாகப் பெண்கள் கூட்டம்
பட்டாம் பூச்சியாகச் சிறகடித்தோம்.
விட்டு உயிர் பிரியும் வரை
கட்டிக்கரும்பாய் இனிக்கும் பயணம்.

கண்டிப் பேராதனைப் பூங்கா, நுவரெலியா
கக்கல  பூந்தோட்டம், சிகிரியா மலை,
தம்புல கற்கோயில் பெரும் பாக்கியமே.
பயணம் புது சக்தி தரும்.

நயனம் நிறைய மாறு காட்சிகள்.
வயணமான (விதமான) பல புரிதல்கள்.
சுகமான பல அனுபவங்கள்.
சுயமாய் எம்மைப் புதுப்பிக்கும்.

16-6-2016


சுற்றுலா

சுற்றுலா நோய் திர்க்கும் நல்லுலா..
.மனதும் உடலும் இயற்கையோடுலாவல் சுற்றுலா!
நல்ல சக்தி மனிதமூளை வேரைப் பலப்படுத்தும்
இவைகளைப் பார்க்கும் போது கவிதை பீறிடுகிறது...
சுந்தரனென் துணைவருடன் சுகமாயுலாவப் பேராசை.

2016






வெள்ளி, 14 ஜூன், 2019

109. (688) கவிஞர்கள் முற்றம் நிலாமுற்றம்.






கவிஞர்கள் முற்றம் நிலாமுற்றம்.

புவியில் பிரசித்தமாய் உலவும்
கவிஞர்கள் முற்றம் நிலாமுற்றம்.
உவிதலற்ற தமிழை ஊதி
கவியால் ஒளியேற்றும் உன்னத
சேவைக்கு உயிரீவோர் பலர்.

கிரமமாய் எழுதிக் கிரீடம்
அரவணைப்போர்  பலர். திறமையை
வரமாக்குகிறார் நற் பயிற்சியால்.
தரமேற்றுங்கள் தங்கக் கையிணைத்து.
பரவலான வாழ்த்துகள் முற்றத்திற்கு

10-10-2017




கவிஞர்கள் முற்றம் நிலாமுற்றம்.

கவி விளையாட்டும் இப்படித்தான்!
கருத்தாய் சொற்களை விசிறியடி!
மட்டையாய் எழுதுகோல் எடு!
வீதியானாலும் பயிற்சி முக்கியம்!
எழுத்து கருத்து பிரதானம்.

ஏழையும் பணக்காரனும் விளையாடும்
மட்டைப் பந்தும் எழுத்தும்
மதியைப் பாவித்து வெல்லலாம்!
உடலிற்கும் மனதிற்கும் உதவும்
பாடமெனும் நிலாமுற்றப் பயிற்சி!

10-10-2017

108.. (689) ( uudakam -kolusu ) தாழிடாக் கவிச் சுவடு.






தாழிடாக் கவிச் சுவடு.

(தாலவட்டம் - விசிறி)

தாழிடாத கருத்துகள் கவிதைகளாக வேண்டும்.
தாக்கம் தரும் போட்டிகள் தகுதியற்றவர்களால்
தாபிக்கப்பட்டு நடுநிலைமை சரிவது பரிதாபம்.
தாக சாந்தி தீராது  தரக்குறைவினால்.

அகரம் நுகர்ந்து மெல்ல மெல்ல
நகரும் உயிர்மெய்யின் உலா எனும்
சிகரப் பாதை வழியோடி நுண்மையாய்
முகரும், உருகும் இது தமிழ்த்தேன்.

தாழ்வாரத்தில் ஒதுங்காத தூவானமாகத் தலைகோதி
தாராள மயில் தோகையாய் விரிந்த
தாரகை நினைவுகள் நெஞ்சில் ஒளியேற்றி
தாலவட்டமாய்த் திறமை அழகு காட்டும்.

விசனமற்ற வித்தகமிகு வியக்கும் குமிழ்
வியன் தமிழாம் நல் விவசாயம்
பசப்பில்லா நாட்களின் உயர் ஒளியில்
வசமாக்கும் வசியத்தின் திறமை மயக்கம்.

சிற்பியின் மாய உளிப் பொலிவில்
அற்புத உரு ஆனந்த விழியில்
கற்பாறையல்ல பவளப்படுகை நேசத் தமிழ்.
உற்பத்தி முத்தப்பொளிவு  கவிதைச் சுவடு .


ஆவணி-2018.






Thank you for KOLUSU




107.. (686) மௌனத்தின் மொழி யாதெனில்....






 மௌனத்தின் மொழி யாதெனில்....

சயனமான முக்தி நிலையோ.!.
கவனமான இசையின் இரசனையோ.!.
நயனம் மூடிய காதலோ.!.
வயனம் (பறவை) போல பறத்தலோ!
மயான அமைதித் துன்பமோ!
தியானம் இவை மௌனமொழியே!

மௌனத்தின் மொழி அமைதி
மயக்கத்தில் நிலையை அசையிடுதலும்
இரவு வரும் மாலையும்
இரவு போகும் காலையும்
கரவற்ற காற்றின் மொழியும்
தரளமான (முத்து) மௌனமொழியே.

ஞானம் என்ற வழியால் 
ஞாயிறாய் விழி வழியால்
உயிரின் மொழியான உறவால்
இயல்பாய் சத்தமின்றி எழுவதால்
உணர்வின் சைகையும் இயற்கையின்
இன்பமான மொழியாம் மௌனமொழியே

இசைந்தால் இரசித்து மகிழ்!
கண்ணாடித் தொட்டியுள் மீனும்
காதல் பேரின்பமும் மௌனஇருளில்
கன்னத்தில் வெட்கமாவதும் பேசாதமொழியே.

24-7-2018



106. . (685) கல்லிலே கலைவண்ணம்






கல்லிலே கலைவண்ணம் 

கலைகளின் விளைநிலம் கல்லிலே கலைவண்ணம்.
காவிரி பாயும் சோழவள நாடு.
பாய்விரித்து வியக்கும் சிற்பக் கலை
நோய் தீர்க்கும் சுற்றுலா அலையோடிணைந்தது.

பல்லவ கலைச்சின்னங்கள் சரித்திரப் பின்னணியே
மாமல்லபுரம் சுற்றுலா மகிழ்வான இடமே
மாபெரும் தொழில் நுட்பம் அறியாதவர்கள்
மாபெரும் கலைஞரின் மாய நுணுக்கங்கள்.

விற்பன்னக் காவிய உலகக் கலைவண்ணம்.
சிற்றுளித் திறமைச் சிற்பங்கள் கருங்கல்லிலே
அற்புத உலகப் பெருமையாய் இந்தியாவை
பொற்பத நிலைக்குத் தந்தனர் மன்னர்கள்.

18-7-2018



105 . (684) சிந்தனை செய் மனமே






சிந்தனை செய் மனமே

கந்தனை கடவுளை இனிதாய்
வந்தனை எய் மனிதா
நிந்தனை எண்ண மின்றி
நொந்து உனை இழக்காது
சிந்தனை செய் நல்லதை.

சிந்தனையால் வாழ்வு சிறக்கும்.
சுதந்திரச் சிறகு விரிக்கலாம்.
தந்திரச் சினமொதுக்கி அன்பணைத்து
மந்திர நம்பிக்கை ஊன்றி
முந்திடலாம் நற் செயலாக்க.

மரங்களைப் பெருக்கிடு மழைக்காக
கரங்களை நீட்டிடும் கருமுகில்கள்.
தரமோடு சுகாதாரம் பேண
உரமான அறிவு பெருக்க
வரமாகட்டும் என்று சிந்திப்போம்.

22-6-2018

வேறு

மாயமாளிகை மனதைத்
தூயதாய் வைத்திருக்கக் கனத்த
ஆயனம் (கிரகணம்) பிடிக்காதிருக்க நல்
தூய சிந்தனையே தேவை
ஆர் வென்றார் மனதை
ஆய்வுக்கும் அப்பாற்பட்டது


25-20-2019



104 (683) ஆடி அடங்கும் மனிதன் வாழ்க்கை.






ஆடி அடங்கும் மனிதன் வாழ்க்கை.

ஆடி அடங்கும் மனிதன் வாழ்க்கை
தேடி நன்மை தேக்குதல் ஆளுமை.
ஊடி உலகை ஊனமாக்குதல் கீழ்மை.
கூடி மக்களுடன் குலவுதல் நன்மை.

கேடியாகி பெண்மையைக் கேவலம் செய்தல்
பேடிகள் செய்யம் பேதமைச் செயல்.
சூடுவோம் நற்பெயர் சூரியனாகி, சுடுவோம்
வேதனைச் செயல்களை. வெற்றி ஏந்திட

28-6-2018




திங்கள், 10 ஜூன், 2019

103. (682) தமிழரின் பொற்காலம். .







தமிழரின் பொற்காலம்.

முச்சங்கங்கள் தமிழ் வளர்த்த புலவர்கள்,
மங்காத நூல்களியற்கை வழிபாடு.
ஓங்கியுயர்ந்து மதுரை மையமாகி, யவனர்கள்
தங்கமீந்து மிளகெடுத்துப் பண்டமாற்றிய பொற்காலம்.


தலைமுறைகளாகக் குழுவாயிருந்த வீரம், பண்பாட்டு வாழ்வியல்
விலையற்ற கட்டிட, சிற்பமோவியக் கலைகளுயர்ந்து
நிலையான விவசாயம் பழஞ்சாதம் மோருடன்
வெலவெலக்கப் பச்சைமிளகாய் வெங்காயமுண்டது பொற்காலம்.


3-2-2018



ஞாயிறு, 9 ஜூன், 2019

102 (681) வீழ்வோமென்று நினைத்தாயோ !







வீழ்வோமென்று நினைத்தாயோ ! 

அறிவு தேடல் அவசியமென்று உணராது
குறியின்றி அவலமாய்க் குற்றங்கள் செய்து
அறிவற்ற கதைகள் அளவின்றிப் பேசி
கறியுணவு தேடிக் கணக்கின்றித் தின்று
குறிக்கோளின்றிப் பலரை அழிக்கும் செயலைச் 
சிறியராகச் செய்து சீரின்றி வீழ்ந்திடோம்.

நரை கூடி முதுமை வரை
வரையின்றி நற்செயல்கள் வளர்த்து வாழ்தல்
தரையில் நாம் தரித்திடும் உயர்
வரையறை வாழ்வென வகுத்தால் விளைவினிது.
திரைமூடும் காட்சியாம் திடமற்ற பிறவியை
விரைவாக்கி உயராது வீழ்வோமென்று நினைத்தாயோ!

விளையாட்டு மனிதராய் வீழ்வோமென்று நினைக்காதே
விளைவுகள் பயனாக வினைத்தூய்மை பெருக்கி
விளைச்சல் உச்சமாய் வன்முறை அழித்து
விளைவு போராட்டமாயினும் வாழ்வை இனித்திட
விளை நீர்ப்பெருக்கி வினையை வெற்றியாக்க
சளைக்காது உயர்வோம் சாய்ந்திடோம் அறிவாய்!

25-5-2018



101. (680) மனிதனாயிரு!







மனிதனாயிரு!

பிச்சைப் பாத்திரமாகத் தினம்
மதுக் குவளை ஏன்!
நச்சு மதுவை அணைக்கும்
துச்சமான மனிதர் உறவு
மச்சு வீடல்ல! உறவும்
இச்சை கொண்டதல்ல!

அன்பு உள்ளங்களை வதைத்து
அந்நியோந்நியம் குலைத்து
அற்புத வாழ்வை,  உறவை
அந்தரிக்க வைக்கும் மது
வெந்தணல்!  வீசீடு!  மனிதனாயிரு!

28-5-2019



சனி, 8 ஜூன், 2019

100. ... (679) காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை








காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை

காலவுருவாக்கம் கோள்கள் நட்சத்திரங்கள் செயற்பாடு
காலத்திற்காய்க் காத்திருந்து தூற்றுகிறார் காற்றோடு.

காலம் நேரமற்ற இயக்கமில்லை உலகில்.

காலம் பொன்னே கருத்தோடு பயனாக்கினால்.


நேரங்காட்டியாய், நீராய் ஓடும் காலம் 
பிரசவம் மரணத்துள்ளே சக்கரமாகும் காலம்.
அரங்கேறும் காலக் குறியீடுகள் பிரதானம்.
வரலாற்றுக் குறிப்பிலிடும் அவசிய அங்கம்.


விநாடி, நிமிடம், மணி நாள்
விரியும் காலை, மாலை, பகல்
விதிக்கும் வாரம், மாதம் வருடம்
விரக்தி, ராகு, கேதுவாமேராளப் பகுப்பு.


பனிக்காலம் மெல்ல நகர பதுங்குகிறோம்.
வேனில் கோடையில் காதற் களிப்பாயுல்லாசிக்கிறோம்
வேதனை தீர்க்கிறதுழவனுக்கு மாரி காலம்.
வேம்பாகிறது நலமற்று நழுவும் காலம்.


காலமொரு கடமை வீரன்! தீமையும்
நன்மையும் பாராதது. காலத்தே பயிரிடலவசியம்!
நகரும் காலத்தால் வளர்ந்து தேய்கிறோம்.
நல்ல துணையிருந்தாலில்லறமும் நந்தவனக் காலம்.


காத்திரமான துன்பங்களைக் காலம் குணப்படுத்தும்
சூத்திரமாகவே நாளைக் காலமென்று எடுத்து
' நாள் செய்வது நல்லோர் செய்யா ' ரென்றார்.
காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லைநாமிருப்போம்.



 6-2-2018





428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...