திங்கள், 19 ஏப்ரல், 2021

346. (909) (என் மன முத்துகள் - 16)

 





(என் மன முத்துகள் - 16)


சிந்தனை

 நல்ல  சிந்தனை என்பது ஒரு கவர்ச்சிக் காந்தம் போன்றது.

வெல்லும் மனிதனாக மனிதனை இது ஆக்கும்.   உலகில் ஒருவனை 

நல்ல மாமனிதனாகவும்,    முட்டாளாகவும் ஆக்குவதும்   இந்தக் காந்தமே.  எண்ணங்களில் கட்டுப்பாடுகளே எம்மை மேம்படுத்தும்.

ஒரு நிமிடக் கெட்ட எண்ணம் கட்டுப்பாடின்றி உருளுவதால் பல நல்லவை  இழக்கப் படுகிறது.

குரோதத்தில் மனிதன் மதியை இழக்கிறான்.  உறவுகள் பிறரால் முறிக்கப் படுவதிலும் மனமெனும் இந்தப் பெரிய எதிரியே உறவுகளை முறிக்கிறது எனலாம். 

என்னை விடப் பெரியவன் யார்! நானே பெரியவன் எனும் எண்ணமே மனிதனைத் தாக்கி,  தூக்கிப் பந்தாடுகிறது. பணிந்து போய் உறவுகளைப் பலப்படுத்தும் எண்ணத்தைத் தூக்கிப் புசிக்கிறது.

கொதித்துக் கொப்பளிக்கும் உறவுகளுடன் தொடர்பு கொள்ளல் அதே நிலையை தனக்குள்ளும் ஏற்றும் சக்தியுடையது.  அதனாலேயே பலர் விலகி நடக்கிறார்கள். அதைப் புரியாது மேலும் மேலும் கொதிப்படைந்தே பலர் எரிமலையாகிறார்கள்.

நல்ல நட்பு அமைதி,  ஆக்கம்,   இன்பம் தரும். 

அனைவரும் அறிந்த உண்மையிது.  சுய வாழ்வின் கொந்தளிப்பே பல வெறுப்பு நுரைகளைப் பிறர் மீது கொட்டி அழுக்காக்குகிறது என்றும் கூறலாமோ! அன்றி இது தவறோ!

பிரியம்,  நேசம், அன்பு யாரும் அழைத்து வருவதல்ல. அது தானாக மலரும் அற்புத உணர்வு.  விருப்பத்துடன் உறவு கொள்ள எந்தத் தடையும் பெரிதல்ல. அணையை உடைக்கும் நீர் போன்றது.

வாழ்வே இன்று நடிப்பாகும் போது  காதல்,  கடமை,   கல்யாணம், கண்ணியம் எங்கு போகுமோ!


வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.  19-4-2017


(இந்தச் சிறு தொகுப்பிற்குப் பொருத்தமான ஒரு முன்னைய பதிவின்   இணைப்பு 1-4-2011ல் பாருங்கள்  (first web)






 

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

345. (908) தமிழ் பிலவ வருடம் - 2021

 



தமிழ் பிலவ வருடம் - 2021


(குதுகுதுப்பு –ஆவல்)


புதுவருடம் அடைகாத்த குஞ்சாக

அதுவாக வரட்டும்! தடுப்பாரெவர்!

ஒதுக்கம் ஏது உனக்கு!

குதுகுதுப்பாய் வா! வா!

பொது எதிரி கொரோனாவைக் கொலைத்திட வா!

எதுகையாக என்னிடம் வா!


சதுக்கலற்ற ஆண்டாக வா!

ததும்பும் குதூகலத்தோடு வா!

மதுகையோடு புதுமையாய் வா!

பதுமநிதியாய் இன்பம் தா!

மதுரவாக்குடை கவிதை தா!

பொதுவாயுலகு சிறக்க வா!


வார்த்தைகளில் அடங்காத பேரழகில்

கோர்த்ததுத் தமிழ் கவிதையெழுதி

ஈர்த்திடும் மனங்களை இணைத்து

வார்த்திடும் கருத்துகள் வாழ்த்துகளை

நேர்த்தியாய் இரசிக்கும் மனம் தா!

பூர்த்தியுடை நலங்களோடு வா!


13-4-2021






ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

344. (907) இரகசியங்கள்

 




இரகசியங்கள்


காதுக்குள் சொல்வது, யாரும்

காணாமல் சொல்வதுவும் இதுவே!

இரகசியம்  இல்லாதவர் எவருளர்!

இரகசியமும் வாழ்வைப் பரகசியமாக்கும்.


கடின உழைப்பே வெற்றிக்குக்

கருவாகப் பற்றும் இரகசியம்.

கடதாசி  உறைக்குள்  எத்தனையாம்!

கருமமாய்த் தபால்காரர் காவுகிறார்.


முத்தமும் காதலும் இரகசியம்

சத்தாகி நெழிந்து  பூமியை

முத்தமிடும் நதியின் இரகசியமென்ன!

புத்தியாய்   அனுப்பும் மலைத்தூதுவனோ!


மினுமினுக்கும் நட்சத்திரங்கள், கருமிருட்டு,

முணுமுணுக்கும் மரங்களினிரகசியங்கள்,  காற்றின் 

கிசுகிசுப்பும், கடலிற்குள்ளும்  எத்தனை

எத்தனை  மனங்கவரும்  இரகசியங்கள்!


ஒளிக்கும் பல எண்ணங்கள்

போற்றும் ஒரு இரகசியம்

ஆற்றலுடை அமைதி மாளிகை!

தோற்றுவிடும் பணத்தின் தகர்ப்பால்.


மனோசக்தியையுடைக்கும் மனோவசிய இரகசியங்கள்

ஆரோக்கியம், ஆன்மிகம், எண்கள்,

தியான இரகசியங்ளாக  வெற்றி

வாழ்வில் பல  இரகசியங்களுள


நிர்வாகத்துள் இரகசியம் அவசியம்

அரசாங்கம்  இதுவின்றேல் அம்பலமாகும்.

பனிக்குள்ளே குளிர் பரகசியம்

தனியனாகிலும் இரகசியம் போற்றி வாழ்!


 22-1-2021


                                                                              









செவ்வாய், 6 ஏப்ரல், 2021

343. (906) உலகு வெளிக்குமா!

 




உலகு வெளிக்குமா! 

0

கொடிய பகைவர்கள் தேவையில்லை

கொடுமையாய்க் காலங்களைத் திருடிய

கொரோனாச் சூரியனால் மனதுள்

கொந்தளித்து ஸ்தம்பித்தது வாழ்வு!

0

கொசுக்களை வேப்பமூட்டம் கொல்லும்

கொரோனா சுவரேறிக் குழந்தைகள்

கொஞ்சி விளையாடத் தடைக்கிறதே

கொலைக்கிறதே சமூக உறவை

0

தடுப்பூசி வரத் தாமதமாக

எடுப்பான குடும்ப நறுமணம்

படுபாதாளத்துள் நுழைவது கொடுமை

கடுப்பின்றி எழுத்துமட்டும் விமானமேறுகிறது

0

கல்மாளிகைக்குள் உணவு சமைத்தல்

கருத்தோவியம் வரைதலும் நிகழ்வு. 

கண்  தொடும் உறவில்லை

கரும பலனோ என்றுமாறுமிது!!

0

உறவு நுரையுள் தாலாட்டும்

உணர்வுகள் நொந்து உறங்குகிறது.

உள்ளம் மலர்வது எப்போது!

ஊற்றுச் சுரப்பது எப்போது!

0

உணர்வின்றி மனங்கள் மரத்திடுமா!

உன்மத்தம் மாறியுலகு வெளிக்குமா!

உலவுகிறதே நான்கு காலங்கள்.

வலம் வரட்டும் கொரோனா அழிவுக்காலம்.

0

 6-4-2021






திங்கள், 5 ஏப்ரல், 2021

342. (905) சந்தோசக் கணம்.....

 



சந்தோசக் கணம்....

0

சந்தோசக் கணம், 

மனம் நெகிழ்ந்த கணம்

அன்பின் ஈரக் கணம்

அலையாய் மீளும் குணம்

மாறாது ததும்பும் வண்ணம்

மனம் சிலிர்க்க மூழ்குதல்.

0

புpள்ளைகள், பேரர்களை

பாச நுரை ததும்பத் ததும்ப

நேசமுடன் ஊறும் இன்பம்

வாசமுடை சந்தோசக் கணம்

கொரோனாப் பாலைவனத்தின் 

ரோஜாக் கணங்கள்.

0

பதவி, பணம், திமிர் பகிர

உறவை உதற, நடைமுறைகளைக்

குரூரமாய் மாற்றி வாழ்வுப்

புத்தகப் பக்கங்கள் நிறைக்கிறது.

துருவங்களைத் தொடும் கடலாய்

சுகித்திருப்போம் நாம் அன்போடு.




5-4-2021




அன்பு சகோதரி கவிஞர் பலநூல்கள் வெளியீடு செய்த ஆசிரியர் #இலங்கை புலம்பெயர் #டென்மார்க்கில் வசிக்கும் எழுத்தாளர்
Vetha Langathilakam
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன் — with
Vetha Langathilakam
.









428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...