செவ்வாய், 30 ஜனவரி, 2024

425 (958) அன்பாதரவை நிறையுங்கள்

 


     




அன்பாதரவை நிறையுங்கள்


ஆணும் பெண்ணும் ஒன்றாகித் தம்

சுயம் மழுங்க ஒருவரில் ஒருவர்

கரைந்து அழகாய்க் குடும்பம் சமைக்கிறார்கள்.

பிள்ளைகளுக்காகவும் நாளும் தேய்கிறார்கள்.இதை 

மதித்துப் போற்றினால் அன்பாளராகிறார்கள் அன்றி

அவமதித்து அடிமையாய் நடத்தினால் விலகி

ஆக்கினையால் ஓடுகிறார்கள் பிரிவினைப் பாலைவனம்.

புரிந்துணர்வு  புனிதமாகினால் புகழ் பூக்கும்.

00

திறமையெனும் புதையல் வறுமையின்றி    மனிதனையாக்கும்.

பிறவியில் அன்பாதரவு நிறைந்தவன் பிழைப்பான்.

அல்லாதவர் முன்னேற்றம் இழந்து துன்புறுவார்.

தேடலே மனநிறைவு  கூடலே உறவு.

வாடல் ஏமாற்றம் பாடல் கலைகளாக

நாடலே வாழ்வாகி ஆடலாய் ஆனந்திக்கலாம்.

சாடுதலில் மனம் வெதும்பி  நாளை

மூடுதலில் என்ன இன்பம் காணலாம்!

00

திருமதி வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் - 30-1-2024






வெள்ளி, 26 ஜனவரி, 2024

424 (957) ஒளி வழிப் பாதை

    


     




         ஒளி வழிப் பாதை



தாழ்வில்லாப் படிப்பினையை வாழ்வில்

ஆழ் சுழியோடிப் பெறுதல்

ஏழ்மையற்ற ஓயா முனைதல்

விழ்ந்து உழல்வதாலும் எழுகை 

கீழ் விழாத நம்பிக்கை

சூழ்ந்து  ஒளிர்தல் தீவிகை(விளக்கு)

00

ஒளித் தல்லிகை(திறப்பு)அமைதிக் 

களி(தேன்) விசிறி  - உற்சாக

உளி  கையளிப்புச் சாதனைக்கு.

எளிதல்ல உயர்வும் தாழ்வும்

ஒளிந்தாடும் இன்பமும் துன்பமும்

களியாட்டும் நிலையே வாழ்வு.

00

எண்ணில்லாக் கனவுகள் காலத்திற்கும்

பண்ணிசைத்து  யாழிசையாய்நிறையட்டும்.

கண்ட  வாழ்வின் பாடங்கள்

தூண்டும் கேள்வி நம்பிக்கைகளாய்

நீண்டு துயர்களை அழிக்கட்டும்.

ஆண்டவன் ஆற்றலைக் குவிக்கட்டும்.

00

(களியாட்டு - கள்ளுண்டு ஆடும் நிலை)


வேதா. இலங்காதிலகம் -தென்மார்க்- 26-1-2024 







புதன், 24 ஜனவரி, 2024

423 (956) கிளப் எதற்கு?

 


         



(யாரோ  இந்தத் தலைப்பு தந்தனர் 

எழுதிப் பார்த்த தலைப்பு)


கிளப் எதற்கு?


திருமண இணைகளாய் உலகில்

ஒருமன வாழ்வை வாழ்ந்திடு!

அருமையாய்த் தொழில் புரிந்திடு!

பெருமையாய் பிள்ளைகள் பேணிடு!

00

வீட்டரசி நீ  தான்

நாட்டரசிக்கு இது சமன்.

கூட்டாட்சியே இல்லறக் கூடு

கோட்டாட்சி  அல்ல வாதாடிட

00

வீட்டிலே விவசாயம் ஓவியமாய்

நாட்டிலே பிள்ளைகளைப் பெருமையாக்கு!

போட்டிக்குப் பொழுதைப் போக்கும்

நாட்டமுடை ஒன்று கூடலெதற்கு! ( கிளப்)


வேதா.இலங்காதிலகம்  - தென்மார்க்   25-7-2022






திங்கள், 22 ஜனவரி, 2024

422 ( 955) நான்- 1- 2

           


               




    நான் - 1


நான் யாரெனும் தன்னறிவு நன்மை.

நான் முயல் நான் எறும்பு

நான் திமிரற்றவள் மானம் உள்ளவள்.

நான் படித்தேன் யாழ் கோப்பாயில்.

நான் கட்டுரை கவிதைகள் எழுதுகிறேன்.

விண்மீன்களாய் என்னை சுற்றுது அவைகள்.

நான் உன் அன்பை நினைத்து

என்னை மறக்கிறேன் இது காதல்.


இயற்கை அழகில் தொலையும் நான்

இசையும் கவியில் மயங்கும் நான்

அசையும் மழலையில் உருகும் நான்

அகவும் மயிலை ரசிக்கும் நான்

நான் (தன்)முனைப்பு நீக்கும் நான்

தன்னான்ம உணர்வு பெறுவது தெளிவு.

தான் என்ற கர்வ அழிவில்

நான் என்பது இனிமை கீதமாகும்.


பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம் -டென்மார்க் - 9-9-2015

-----------------------------------


நான் - 2


நான் ஒரு மனிதனின் நாண்.

நான் எனும் உணர்வற்றவன் வீண்.

நான் எது! நானிந்த உடல்

நான் யார்! நான் மனச்சாட்சி.

நான் தலைக்கன அகந்தையுடன் இணையின்

ஊன் தான் ஒரு மனிதன்.

நான் பிரமம் என்கிறான் வேதாந்தி

நான் பிரமம் என்பது யோகநிலை.


நான் என்பதன் அடையாளம் நாமமாகிறது.

நான் தன்னம்பிக்கைத் தூண் ஆகிறது.

நான் எனதென உரிமை கொண்டாடுகிறது.

நான் நீ சேர்ந்தால் நாமாகிறது.

பெயர் அழைத்து யார் என்பது

துயரின்றி சிலிர்ப்பாய் தான் ஆகிறது.

நத்தை ஓட்டினுள் ஒழிய இயலாது

செத்தை தான் நானற்ற பதிலானது.


நான் கட்டுப்படும் நேர்மை பண்பில்.

நான் விட்டுக் கொடுக்கும் அன்பினில்

மன்னிக்கும் மனம் கொண்ட நான்

மின்னிடும் சூரியக் கதிரான வான்.

நான் நீ சேர்ந்தால் காதல்

என் பெற்றோரின் நல் வளர்ப்பிலும்

வீண் வம்பற்ற சூழலாலும் பண்புடன்

நான் நல்லவன் ஆவது திண்ணம்.


பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம். - டென்மார்க். -22-9-2015






428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...