செவ்வாய், 30 ஏப்ரல், 2019

79. (660) என் மகள் எனக்குத் தாயானாள்










என் மகள் எனக்குத் தாயானாள்


கருவறைச் சித்திரமெம் இரண்டாம் மாணிக்கம்
மனவறையிலெம்மை நித்தம் ஏந்தும் தாயானாள்.
இனம் புரிந்து துன்ப ஈரம் துவட்டி
கனம் முழுதும் காற்றில் எறிவாள்.

அவ்வளவு தன்னம்பிக்கை, அளவற்ற துணிவு
எவ்வளவும் சுயமாகத் தூணாகத் தாங்குதல்
அனுபவக் கோர்வைகளால் நிலைத்த உள்ளம்
தெளிந்து நெளிந்தோடும் நதியான தாயவள்.

மருத்துவ நிலைய வரவேற்பாளர், உயர்வால்
சிகிச்சைப் பகுதிப் பொறுப்பாளர், படிப்பால்
பெண்கள், பெரியவர்கள், குழந்தைகளுடன் செய்யும்
மனவியல் ஆலோசனைச் சிகிச்சையாளர் பணி..

பிரிவு ரேகை பதித்துக் கடல்கடந்தாள்.
பரிவுடை தொலைபேசித்   தாய்மைத் தத்துவம்
நித்தியம் பேசும் மனுநீதித் தாய்மையுடைய
மகத்துவமான எம் மாபெரும் சொத்தவள்.

பதினெட்டு வயதிலேயே மாற்றான் பிள்ளையைத்
தத்தெடுத்துப் படிப்பு பராமரிப்பை ஏந்தி
மானசீகத் தாயானவள், எமக்குப் பேரன்பீய
ஏது தடை! இயல்பு இறைவன் கொடையே!

முதுகு நீவி, கால்கள் பிடித்து
முறையான பயிற்சியைச் செய்து காட்டி
கணனியிலும் வாசித்து விளக்கம் தந்து
கருத்தாகக் கவனிக்கும் பாதுகாப்புத் தாயவள்.

உயிரணுக்கள் இணைந்து அணைக்கும் மென்மையாம்
உயிர்ப்புடைய அவளன்புப் போர்வை எம்
வயோதிப மனதிற்கு இதமுடை கதகதப்பு.
குளிர் சந்தனம் பூசிய உணர்வு.

ஊன்றுகோலானவள் வெற்றிக் கனி பறிக்கும்
எம்பும் மனத்தாள்! அழகால் அறிவால்
எம்மைக் கட்டியன்பு மலராலெம் கண்ணொற்றுபவள்.
ஆணிப்பொன் என் மகளெனக்குத் தாயானவள்!

 17-8-2016. 




திங்கள், 29 ஏப்ரல், 2019

78. (659) யார் குற்றம்!







யார் குற்றம்!

பூக்களின் தோரணம், பூவிரித்த பஞ்சணை
பாக்கள், பால் செம்புக் கலவியல்ல
முறிந்த கரும்பு வில்லின் கணையால்
அறிவு தொலைத்து அருவருத்த காமம்.

தொப்புள் கொடியறுத்து ஏற்க மனமனமற்ற
பாதுகாப்புச் செய்யாத புணர்தல் கொடுமை.
காமச் சூறாவளியில் சிக்கிப் பிடுங்கிப் 
போட்ட கனவுகளற்ற சுந்தரப் பூச்செண்டு.

பிச்சை எடுப்போரும் கந்தலில் சுற்றி
பச்சை மண்ணைப் பேணி வளர்ப்பார்.
உடலிச்சை தீர்த்த விடையறியா நிலை
கொச்சைக் காமம் புரிந்தவர் குற்றம்!

கருத்தடையற்ற உடற்பசிக் குற்றம் இது!
கருவின் வாழ்வின் வண்ணங்கள் முகிழ்த்திட
விரும்பாத இருவர் காக்காத சிசு
தெருவோரக் குப்பைத் தொட்டியில் சமர்ப்பணம்.

எதற்காக ஆடையணிந்து மானம் மறைக்கிறார்!
எதற்காக பிடுங்கிக் குப்பையோடு வீசுகிறார்!
பண்பு தவறி நெறி தவறுமுலகோர்,
சுயநல ஊனமனங்கள்! என்று திருந்துவார்!

வெற்று வயிறாய் கருக்கட்டாதேங்கும் நிலையில்
எற்றும் புயல் மனதோடுலகில் பலர்!
பொற்பத தென்றலும் பூக்களும் அணையாது
அற்புதக் குழந்தைப் பாக்கியமிங்கு நரகத்தில்.

வாழ்வின் தோல்வியிங்கு இரத்தமும் சதையுமாய்
தாழ்வினும் கீழாய் இழிவு நிலையில்
கைதவறிய இந்நிலையுயிர் பிரியும் வரை
குற்றவாளிகள் மனதறுக்காதோ! தப்புவரோ மனச்சாட்சிக்கு!

தேசிய காமக் குற்றம் உலகெங்கும்!
மனித இலட்சணம், மனித நேயமுள்ளவன்
பாதையடைத்த காமப் பயணம் செல்லான்!
முறையான உறவால் பெண்மையை கொளரவிப்பான்!

2-8-2016






77 (658) காதலும் கசந்து போகும்.








காதலும் கசந்து போகும்.

ஏம்மா சரியாத் தானே ஓஞ்சேலை 
கழுவினேன்! நூல் துண்டிலே 
அழுக்கென்று நூல் புடிக்கிறியே தாயே.
பழுதில்லாமல் ஆக்கிய சாப்பாட்டில்
வழு சொல்லுறியேம்மா

புழு போல நானொரு பிறவி
புருசனும் சரியில்லாத வாழ்வு
புத்திரர்கள் இரண்டு பேரும் காவாலிகள்.
ஓன் வேலை தானே எனக்கு உசிர் கம்பு.
ஓன்னைய எதிர்த்துப் பேசவும் முடியலைம்மா.

இந்த மாதிரிப் போச்சுதுன்னா
இத்தினூண்டு பிரியமும் ஒம்மேல
இல்லாம என் காதலும் கசந்து போகுமேம்மா
என்னைப் புரிஞ்சுக்கோயேன் ஏம்மீது
கொஞ்சூண்டு கருணை காட்டேன்.

காந்து காந்தென்று காந்துறியே
கருணையே ஒனக்கு இல்லையா!
கதறி அழணும் போலிருக்கு.
கடவுளை நெனச்சு மவுனமாகுறேன்.
ஓம்மீதுள்ள காதலைக் 
கசந்து போகச் செய்யாதேம்மா

நீ கொஞ்சம் இறங்கி வரலைன்னா தாயே
நிர்கெதியான எனக்கு நிம்மதி தரும்
நிமலன் மீதுள்ள காதலும் கசந்து போகும் -

(ஒரு வேலைக்காரியின் புலம்பல்)

8-7-2016 



76. (657) நினைவெல்லாம் நீயே






நினைவெல்லாம் நீயே

உறவுகள் கைவிட்ட போதும்
துறவு மனமாகி மனதிலொரு வெறுமை
இறங்கிய போதும் தூணாக
உன்னைப் பற்றிடத் துணையாகிய சக்தியே!
எதையும் அலட்சியமாக எண்ணினுமுனை
மலையாகி நம்பித் தொடருவேன்.

நம்பிக்கைச் சுரங்கமே! தோண்டத் தோண்ட
மனபலம் புத்துணர்வுச் சாரலாக உயிர்ப்பு 
உருவாக்கும் உந்துசக்தியே உன்னதமே!
பால வயதிலிருந்து நினைவெல்லாம்
நீயானாய்! தொடர்ந்து தொடரும்
நித்திய சோதியே!

பெற்றோர் குருவானவர் அறிமுகமாக்கினார்.
அவர்களிற்கும் அதிபதியே! அன்பு கருணை
புனிதமென்பவற்றின் மறு உருவமென 
போற்றப் படும் தன்னம்பிக்கைத் தந்தமே!
தும்பிக்கையென நான் துவளாது துணை வரும்
தற்பரனே தாள் பணிகின்றேனுன்னை.

பேரர்களோடு இன்று உன் புகழ் பாடுகிறேன்
தாளம் தட்டித் தாமுமென்னுடன் மகிழ்திணைகிறார்.
என்றும் எல்லோருக்கும் துணையாகும் இறையே
இணையில்லாதவனே நினைவெல்லாம் நீயாகி
அனைவருக்கும் துணையிருப்பாய்.

7-7-2016


சனி, 27 ஏப்ரல், 2019

75 . (656) காற்று நிரப்பிய கனவுகள்






(இறுதி வரி)  

காற்று நிரப்பிய கனவுகள்

வெற்றிடத்துக் காற்றைக் கருவியுள் புகுத்தலாய்
அற்புத எண்ணங்களை மூளையுள் ஏற்றுதலின்
சொற்பதம் கனவு!  எண்ணக் கனவு!

கனவுகளுக்கும் பலன் உண்டாம் என்று
இனம் இனமாய் எழுதுவார்கள், கூறுவார்கள்.
கனமென்று கருதாது நிதானமாய் மேலே யனுப்பலாம்.

காற்றடித்த  உறையால் வானம் புகலாம்.
ஆற்றலுடை எண்ணங்களால்   அணை தாண்டலாம்.
ஊற்றுத் தானே கனவுகள் இறுதிவரை

அப்துல்கலாமின் அருமை மொழி தானே
தப்பின்றி இளைஞருக்குமாக  ஓயாது உயர
' எப்போதும் கனவு காண்! ' என்பது.

கருவறையும் இன்றெமக்குக் கனவு தேசமே!
ஒருமுறையும்  திரும்பிச் செல்ல முடியாதது!
ஒரு கண்ணாடிப் பிரதி பிம்பமே கனவு!

பற்று நல்லவனாய் வாழும் கனவை!
முற்று முழுதான சுகவாச மாளிகை
காற்று நிரப்பிய கனவுகள்.

 7-12-2017




வெள்ளி, 26 ஏப்ரல், 2019

74. (655) முகம் தெரியட்டும்







முகம் தெரியட்டும்

முகநூலில் முத்து முத்தாக எழுதுங்கள்.
அகம் விரும்பி அனைத்துக் குழுவிலும்
தகவோடுதனித் தனியாய் எழுதுங்கள்
நகம் தேய போட்டிகளிலும் எழுதுங்கள்.

பரிசுகள் பட்டங்கள் வாங்கிக் குவியுங்கள்
விரிந்த அளவில் முகம் தெரியட்டும்
பிரித்து வீசலாம் பிரபலமான பின்பு.
சரித்துத் தள்ளலாம் சாத்தானோடு ஏணியை

சுய சிந்தனை உபயோகம் சிறப்பு.
மயக்கும் சாம்பிராணியும் தரும் வெறுப்பு.
வியக்கும் ஊதுகுழலும் தரலாம் வெறுப்பு.
நயக்க தினம் வாழுங்கள் சிறப்பு.

27-6-2016



வேறு





முகநூல் 

வளமாய்ப்   பயனாக்கினால்  முகநூலே
தளமான   ஒரு   வரப்பிரசாதமே!

இளக்காரச்   சிந்தை  இழிகுலத்தோர்,
உளம்    அமைதி    அற்றோர்,
களங்கம்   ஏந்துவோருக்கே   முகநூல்
விளம்பரம்   தீயவைக்கு    அறிவீர்!

களஞ்சியம்   நல்ல   சிந்தனைகளுக்கு!
விளக்குதலாக்குங்கள் தங்க மனதை!

2018




வியாழன், 25 ஏப்ரல், 2019

73. (654) கவிதாகம்







கவிதாகம்

கள்ளி வனத்து இந்தப் 
 '''''''பாலைவனச் சோலையில்
 உள்ளிருந்து வரும் உணர்வை 
 '''''''''வடிக்க வெப்ப
 மள்ளி வரும் காற்றே! இறந்தவரையா 
 '''''''''இருப்பவரையா எழுத!
 கிள்ளி மனம் கிளறும் 
 ''''''''''வானழகை வடிக்கவா!
 அள்ளித் தெளிக்க முடியுமா
 '''''''''எட்டு வரிகளில்!
 கள்ளனவன் காதலும் மனதில் 
 '''''''''கவண் எறிய
 துள்ளிக் குதிக்குது மனது
 ''''''''ஓ!...மனமே!
 தெள்ளு தமிழே வணக்கம்!
 ''''''''தீர்ப்பேன் கவிதைத் தாகம்!

5-4-2016



72. (653). சிரியுங்கள்!







 சிரியுங்கள்! 

  சிரியுங்கள்! சுய கவலையைச் சிரிப்பால்
 பிரித்துத் தூர வீசுகிறீர்கள் நீங்கள்.
 சிரிப்பு மனிதனுடன் கூடப் பிறந்தது.
 சிரிப்பால் மனித முகத்துக் கவலைகளும்
 உரித்தான நெஞ்சுத் தசைகளும் வலிமையாகிறது.
 சிரிப்பால் முந்நூறு தசைகள் அசைகிறது.
 அரிய நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
 துரித இரத்த ஒட்டம் உருவாகிறது.

சிரிப்பெனும் உணர்வு வெளிப்பட்டால் இனிதாகத்
 தரிக்கிறது உடலில் வேதியல் மாற்றம்.
 கரிசனமாய் உடல் மனம் வலிமையாகிறது.
 அரிக்கும் மலையாம் பிரச்சனைகள் பனியாகிறது.
 சிரிப்பில் பல! சாகசச் சிரிப்புஇ
 சங்கீதச் சிரிப்புஇ நையாண்டிச் சிரிப்புஇ
 அசட்டுச் சிரிப்புஇ ஆணவச் சிரிப்புஇ 
 ஏளனச் சிரிப்பு புன்சிரிப்பு

சனங்கள் மட்டுமன்று சில மிருகங்களும்
 மனமார அருத்தம் புரியாது சிரிக்கும்.
 பொருந்தாத சிரிப்பை பெரும் மனநோயும்
 பொருட்படுத்தாத சிரிப்பைப் போதைப் பொருளுமருளும்.
 கனம் தரும் முரண்பாட்டுச் சிரிப்பு
 தனமாகும் வரவேற்பறை ஊழியர் சிரிப்பென்று
 இனம் காட்டுவது விந்தை அல்ல.
 வனமான வாழ்வை நந்தவனமாக்கச் சிரியுங்கள்!

 28-5-2016  



சனி, 20 ஏப்ரல், 2019

71. சிறுப்பிட்டி அம்மன். ( ஆன்மிகம் -28)







சிறுப்பிட்டி அம்மன்.

சிறப்புடை யாழ்ப்பாண நகரிலே
சிறுப்பிட்டி சிற்றூரில் சீரோடு
சிவனோடு இணைந்திட்ட அன்னையாம்
சிவகாமி அம்மாளே பணிகிறோம்.  (சிறப்புடை....)

பசுமை கொழிக்கும் வயல்கள்
பரந்த வாழை, புகையிலையாம்
பல்லினப் பழச்சோலை நிறைத்தெமைப்
பரிபாலிக்கும் மனோன்மணித் தாயே!   (சிறப்புடை....)


கருணாகடாட்சி அம்பிகையே! உன்
கருணையாட்சி தெய்வீகமே! தொல்லைகள்
துடைக்கும் கிரியப்பை அம்மனே
வல்லையப்புலத் தாயே அருள்வாய்.   (பசுமை கொழிக்கும்....)


ஆதியில் இராமபிரான் அம்பூன்றிய
ஆழமறியாவூற்று நிலாவரை யருகே
ஆன்மபலம் தருகிறாய் இராஜேஸ்வரியன்னையே
ஆராதிக்கிறோமுன் அருளொளி வீசுவாய்.  (சிறப்புடை....)


15.9.2014



70. (652) (ஊடகம் - காற்றுவெளி) முதுமைப் பட்டயம்- 2







முதுமைப் பட்டயம்- 2

சுயகாலில் நிற்கும் நிறைகுடம்
சுயமாய் மானிடரிதை உணர்ந்தும்
அயர்ச்சியின்றி வாழ்ந்தால் இளமையிலும்
வயதேறினும் ஒரே நிலையாம்.

வளைந்த முதுகு வலிமை.
வளையாத மனம் பெருமை
களைப்பின்றி வாரத்திற்கொரு முறை
காவுகிறாய் விறகை திறமை.

தையலுன் குளிராடை பலத்தில்
கைகூடும் காரியங்கள்  தனிமையிலும்
கைத்தடி உன் நம்பிக்கையாய்
கைக்கெட்டும் திறமையுன்  வெற்றி.

தனியே பிறந்தோம்  மறைவோம்
மனிதமென்று  துணையை பிள்ளைகளை
இனியும் பேசிப் பலனென்ன!
குனிவின்றி வாழ இறையருளட்டும்.

பொதுமைத் தனிமை தொலைத்து
அட்டகாசமிட்ட அருமைக் கட்டுடலின்
எட்டு அவதானங்கள் அடங்கும்
கட்டமே முதுமை இராச்சியம்.

23-8-2018

மனுகுலப்  பொதுமைப் பட்டயம்.




                                   













Område med vedhæftede filer

69. (651) ஊடகம்-சுடரொளி - மனிதனாய் வாழ



சுடரொளி கலை இலக்கிய இதழ்  பிரசுரிப்பு
2005





https://kovaikkavi.wordpress.com/2010/09/28/101-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/  







https://kovaikkavi.wordpress.com/2013/01/13/261-%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/





திங்கள், 15 ஏப்ரல், 2019

68. (650) சிந்தனை கிழிக்கும் பேனா








சிந்தனை கிழிக்கும் பேனா

வந்தனை செய்ய  வேண்டும்
அந்தமின்றியென்னை  எழுத  வைக்கும்
அந்தரங்கமேதும்   இல்லை   பகிரங்கம்.
அந்தரிப்போர்  யாருக்கும்  குரலெழுப்பும்.
இந்தளவு    என்றில்லை  எவ்வளவுமெழுத
சிந்தனை   கிழிக்கும்  பேனா.

உந்துதலீயும் பிறர்  கருத்துகள்.
எந்திர    வில்   போன்றது.
ஐந்தெழுத்துத்   தொடங்கி   ஆதரவு
கொந்தளிக்கும்  பிரச்சனைகள்   அரிய
சந்தக்  கவிகள்  என்று  எத்தனையோ
சிந்தனைகள்  கிழிக்கும்   பேனா.

நீதிமன்றத்   தீர்ப்புக்     கிழிக்கும்;,
சாதிவெறி     கிளப்புதலும்,   தீர்விடுதலும்,
வாதிடலும்,  வாஞ்சையான  சிந்தனைகளும்
மோதி  முட்டுதலும்  ஒரு
தாதி  போலவும்  தீப்பொறியிட்டு
கோதுவதுமான   இராசாங்கம்  பேனாவினது.

10-5-2017









புதன், 10 ஏப்ரல், 2019

66. (648) அழகிய தேவதை






அழகிய தேவதை

கண்ணழகில் பெரும் கனவுகளின் விரிப்பு.
விண்ணழகின் அரும் வானவில் வனப்பு.
கண்ணிறையும் பசுஞ்சிறகின் கதகதப்பு
எண்ணத்திலழகிய தேவதை நினைவு சிலிர்ப்பு.

இன்னமுத அலங்கார மெழுகுவர்த்தியொளி குவிய
பனிப்பஞ்சு மனக்காதலை இன்றேனும் மொழிய
கனியிதழ் பிரிப்பாளா வெம்மைக் காதலடைய 
தனியே வருவாளா தாமரைச் செல்வியவள்.

 10-1-2018









65. (647) . முகவரி









முகவரி

என் வீடு,  என் கல்வி,
என் தொழிலென் கணவர், பிள்ளைகள்
என் குணம், நன்னடையால்   முகவரி.
தன்னாலே மாறும் பல தகுதியிணைய.

பெண் முகவரி பிரசவத்தில் அம்மா.
திருமணத்தால் முகவரி கணவன் மனைவி
முதுமை முகவரி தோலின் வரிகள்.
பதுமினி முகவரி இளமையில் தான்.

மழைக்கு முகவரி மண்மணம், மண்ணீரம்,
குழை நீர் இயற்கையான சுகவரிகள்.
பனிக்கு முகவரி பஞ்சான படிவு
இனிக்கக் குழந்தைகள் பந்தாக எறிவது.

அன்பான பெற்றோர் ஆசியுடை முகவரி.
பண்பான பிள்ளைக்குக் கல்வியகமும் முகவரி.
இன்தமிழால் எனக்கு இனிய முகவரி.
அன்பையள்ளித் தரும் என் துணைவர்.

26-12-2017





64. (646) குளம்பாதிரு மனமே!







குளம்பாதிரு மனமே!


தினங்கள் ஒரு திருமிகும் வரவாக
கனமின்றி ஏற்காது கலங்கும் நீராக
இனமெனும் குளப்பக் கறையான்கள் குமைந்து
அனந்தமாய்க் குறளியிட குளம்பும் மனங்களே!

கீறலிடும் இசைத் தட்டாக, கிடுகிடுத்து
கீழாகும் பந்தல் கொடிக்காலாக விசனமாகிக்
குளம்பும் மனங்களே! வீசும் காற்றில்
விளக்கமின்றி ஆடும் சுடராகும் மனங்களே

பூமி  கடல் மரங்கள் மாறவில்லை
பூக்கள்  காடுகள் களனிகள் மாறவில்லை
பூமியின் கவசமாகிக்  கருமங்கள் ஓயவில்லை
ஆறறிவாளன் மட்டுமேன் அமைதியழிகிறான் இலையுதிர்காலமாக!

26-6-2001



செவ்வாய், 9 ஏப்ரல், 2019

63 (645) . நாசகார மது








நாசகார மது

நவீன உலகிது நாம் 
நவதிறமைகள் கொண்டு
நலமான வாழ்வும் வாழலாம்
நாகரீக வாழ்வு வாழலாம்

நாகம் தீண்டுவது போல
நாசகார மதுவை அணைத்து
நாலுபேர் எம்மைக் கண்டு
நாணுகின்ற வழ்வு எதற்கு!

அறிவும் ஆற்றலும் உண்டானால்
அருமையாய் விற்பன்னர் உதவிடுவார்
அழைத்துச் செல்லலாம் பாதிப்பாளரை
அடம் பிடித்து மறுத்தால்

அது அவரின் தலைவிதி
இதுவே புத்தியுள்ளோர் செயல்
இகழ்ச்சிக்கு இடம் கொடேல்
இந்திரபோக வாழ்வு இங்குதான்! இங்குதான்!.


 8-4-2019



திங்கள், 1 ஏப்ரல், 2019

62. (644) .புரியாத எழுத்துகள் சிகரமேற….





புரியாத எழுத்துகள் சிகரமேற….

ஏக்கக் கோடுகள் தாக்கமாய் உருள
ஆக்கத்தின் அலட்சியம் ஆசாட பூதியாகிட
ஊக்கமாய் வரிகள் மேலும் சிறகுகளாய்
விரிக்க எழுத்து ஏகமாய் உயருகிறது…
பிரிக்க முடியாது முடிவற்று நீளும்
சிரிக்கும் சீராய் சமர்த்தாக நீளும்.

விடமாட்டேன்! திறந்த வானமாய் பரவும்!
அடர் எழுத்துக்கள் உன்னை மூடும்!
தொடர்! புரியாத எழுத்துகள் சிகரமேற!
படர்! மத்தாப்பு வானமாக சுடர்!
இடர் விலகவும் மனம் மகிழவும்
உடர் (உடல்) திடமாகிடவும் எழுது! எழுது!

புரியாத எழுத்துகள் சிகரமேறும் விசித்திரம்
சரியாது ஒப்பனையாய் எழுதும் கவிதை
விரியும் புதுக் கவிதையென்பது புரியாததோ!
வரிவரியாகவும் வலம் இடமாகவும் முழுவதும்
வாசித்தும் புரியாதது புதுக் கவிதையோ!
நேசிக்கும் கவிதை நிலை இதுவோ!

12-11-2017





428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...