புதன், 31 ஜூலை, 2019

152.. (726) சிறகடிக்க ஆசை








சிறகடிக்க ஆசை

தண்ணொளி நிலவாய், தரணியில் காற்றாய்,
மண்ணிலே கதிராய் மகிழ்ந்து சிறகடிக்கலாம்.
கண்ணிலே தோல்வி காணா இவைகளாய்
மண்ணில் புதையாத  மகாஞானச் சிறகடிக்கலாம். 
விண்ணெங்கும் அளந்து வித்தாரக் தமிழாடலாம்.

அரியவறிவுக் கர்ப்பமுடைய அர்த்த பதங்களில்
விரியும் கவிதை வீரிய  இறகுடன்
உரிமையாய்ச் சட்டமிடாத உயர் சுதந்திர
உரித்துடை வானில் உயரவேற ஆசை.
கரிசனையாய் என்றும் கருணையாய்ப் பறக்கலாம்.

செயற்கை மலிந்து சீரற்ற இடமின்றி
இயற்கை நிறைந்த இகலோகம் தரிசித்து
மயற்கை  இன்றி  மகிழ ஆசை.
முயற்சி ஆசைக்கு மும்மாரி பொழியும்.
தயக்கமின்றி வெற்றித் தரவு எட்டலாம்.

பால வயதிற்கு மறுபடி செல்ல
பார்த்து வளர்ந்த பாதமிட்ட வீட்டை
நேர்த்தியான உறவுகளை நேரிலெம் நாட்டில்
ஈர்த்திடும் பூங்கா கானக உலாவென
தீர்த்திட  வேண்டும் சிறகடிக்கும் ஆசைகளை.

13-4-2018






திங்கள், 29 ஜூலை, 2019

151. (725) முதலை வாய்.








 முதலை வாய்.

இன்புறவு (மகிழ்கை) இன்மையாக்கும் வன்மை
இன்னல் தரும் பேராசை
இன்னணம் சொத்துகள் இழத்தல்
சூதாட்டமென்ற முதலை வாயுள்.

பெரும்புள்ளி நாடி தொழிலுக்காய்
பெண் தனி வழியேகல்
கன்னிமை காவு கொள்வார்
காமக்கொடு முதலை வாயர்.

சோம்பலில் கண் மூடியசையாது
சேற்றிலே காத்திருந்து இரையை
சாகசமாய் 'லபக்'கென்று விழுங்கும்
சாதக பணப்பேய்களே முதலை வாய்.

குழந்தை உணவிலும் கலப்படம்
குடி கெடுக்கும் குணத்தடம்
வளர்ச்சி ஆரோக்கியம் விழுங்குதல்
பணப்பேய் முதலை வாயதுவே.

ஓரடி ஈரடியாய் வெளிநாட்டாசை
பேரடி தரகர் பின்னே
வேரடி மண்ணை விற்றேமாறும்
முதலை வாய் தரகரில்.

வாய் திறந்து உறங்க
பல்லிடுக்கு அழுக்கு உண்ணும்
குருவிகள் தான் ஏழைகள்
படிப்பிற்கு பணம் பிடுங்கிகள்.

கோவில்களில் சாமி தரிசன
பணம் பிடுங்கும் அசிங்க முறை
பணப் பேய்கிளின் முதலைப் 
பிடியாம் முதலை வாயதுவே.

வழக்கு வம்பு நகர
பாதுகாவல் அனைத்தும் சிபாரிசு
பண வட்ட வாசியன்றோ
முதலை வாய் தீனி தானே!

20-7-2016





ஞாயிறு, 28 ஜூலை, 2019

150 .. (724) கிணற்றைக் காணவில்லை.







கிணற்றைக் காணவில்லை.

ஊருக்குள் ஒன்று இரண்டு கிணறுகளே
உன்னத நன்னீர்க் கிணறுகள் ஆகிறது.

உவர்நீர்க் கிணறாவது மண்ணின் இயல்பு.
ஊரார்  நல்ல நீரே தேடுவர்.

எங்களுடையது நல்ல நீர்க் கிணறு.
எமிலி, பார்வதியென ஊராரும் வருவார்

காலை மாலையெனக் கூட்டுறவுக் கலகலப்பு.
அக்கா மாமியென அம்மாவோடு உறவாடுவார்.

கிணற்றடியில் பெரிய சீமெந்து வக்கு.
இணங்கி அப்பா தண்ணீர் நிறைப்பார்.

தொட்டியில் படுத்து குளித்து விளையாடுவோம்.
தொடருமின்ப அனுபவம் கனவிலும் இன்று.

கிணறு இறைத்துத் துப்புரவு செய்ய
கயிறு பிடித்துள்ளே அப்பா இறங்குவார்.

மஞ்சள் பாம்பு முட்டைகளும் இருக்கும்
பட்ட கிடங்கு துப்புரவு சாம்பிராணியுமிடுவார்.

பத்திர மனதுடன் பார்த்தபடி நிற்பேன்
பயத்தோடு அப்பா மேலேறும் வரை.

கிணறு தண்ணீரென்றால் வெகு பயமெனக்கு
முப்பதடி ஆழம் திடுக்கிடும் நினைவு.

சுனாமி வந்து இடம் பெயர்ந்தோம்.
படிப்பு, வேலை, வெளிநாடாய் ஆச்சு.

ஆமி பாதுகாப்பு எல்லையாச்சுது இடம்.
மாமி சென்று சமீபத்தில் பார்த்தார்.

வீடு இடிந்தாம். கிணற்றைக் காணவில்லையாம்.
காடாக வளவாம். '' ஸ்கைப்பில் '' அழுதிட்டோம்.

வீடுடைத்த கல்லும் மண்ணுமா! சுற்றியுள்ளோரின்
காணாமற் போனோரின் உடலம் கிணற்றிலா!

எப்படி அந்த ஆழக் கிணற்றை
எதைப் போட்டு மூடித் தொலைத்தார்!

செப்படி வித்தைக்காரரின் செயலானது அநியாயம்...
எப்படியும் கேட்பான் முனியாண்டி!....
உப்பு தின்றவன்......

18.9-2016




149 .. (723) வடுக்கள்







வடுக்கள்

வடுக்களைத் தடுக்க யாரால் முடியும்!
கடுகாக, மலராக நெடிதான வடுக்கள்
காலடிச் சுவடுகளாக மண்மீதாயிரம் கோடி.
நிலாவின் தீராத வடு போன்று.

சுடுவதிலும் ஆறாத நாவடு கலங்கி, 
குலுங்கி, அதிர்ந்தோடி வன்மமாகிக் காத்திரமான 
மாரடைப்போடிணைந்த பாரிய தாக்கமும் தரும்.
அன்பெனுமகல்விளக்காய் மயிலிறகுத் தடவலே மருந்தாகும்.

தவழ்ந்து வரும் குழந்தை போன்று
அவிழ்ந்து மடிந்து எழுந்து மீண்டுமாய்
கவிழ்தல் நிமிர்தலான அலைகளிற்கு மட்டும்
குமிழாகவோ தட்டையாகவோ வடுக்களே இல்லை.

மூன்று தசாப்த யுத்தம் தந்தது
மூடுமந்திரமற்ற மாற்றுத் திறனாளி ஆக்கப்பட்டவர்கள்.
மூலாதாரமான மாற்ற முடியாத வடுக்கள்.
மூங்கையான (ஊமையான) காலம் காலமான துன்பமிது.

அன்பு ஆழக் கனிந்தொரு வைரமாய்
அழகுத் துளி வயிற்றில் புரளுது.
அடக்க முடியாத மசக்கையில் அவள்
அமுதமெனத் தவிர்க்காது கடிப்பது மாம்பிஞ்சு (வடு) 

நிர்வாகச் சிறப்பிற்கானதே உயர் விதிமுறைகள்
நேர்மையற்று ஏதோ காரணங்களால் ஒட்டைகளாலான
சீர்கெட்ட  நிர்வாகம் மாபெரும் வடுக்களே
தர்மமுயர்ந்தால் போர் பயங்கரவாத வடுக்களழியலாம்.

தக்காளிப் பழமரைத்துத் தயிர் கலந்து
தடவிய பத்துநிமிடத்தால் முகம் கழுவ
தழும்பு மறையாத காரணமம்மா சொன்னது
முன்பு மழலையில் பொக்கிளிப்பான் வந்ததாம்.

விண்ணுலகேகிய பெற்றோர் உடன் பிறப்புகளோடு
அண்மையாய் வாழ்ந்த அனுபவமான அன்பாளுமைகள்
கண்களில் நீரிடும் காத்திரமான தருணங்கள்.
வண்ணங்களாய் புண்களாய் நெகிழ்வான வடுக்கள்.

17-7-2016





148. (722) முட்கம்பி.








முட்கம்பி.

கட்டுப்பாடு, காட்டுக்கூச்சல் கர்வம்
எட்ட முடியவில்லை அன்பால்.
சுட்ட தோசையும் சரியில்லையாம்.
பட்ட மனமெப்படி வந்தது!

சுட்டுத் தடுமாறியும் நிமிர
திட்டமிடுகிறது என் மனம்.
பட்டு அன்பற்ற வாழ்வு
வெட்ட வெளிச்சமற்ற முட்கம்பியே! 

பிள்ளையைக் கண்டதும் எகிறுகிறார்.
அள்ளி எடுத்தணைக்கும் பிள்ளை
அலறுகிறது அப்பனுருக் கண்டு.
அப்படியிருக்கு முள்ளாக அப்பனன்பு 

அயல் வீட்டு அண்ணாச்சியோடு
அன்பு பாசமாய் பேசேலாது
அடைச்சு வெச்ச ஆடாகநான்
உள்ளே முட்கம்பி யுள்ளே.

தம்பி வெளியே  போனாரு
வம்போ படலையைச் சாத்தவில்லை
தெருமாடு உள்ளே புகுந்தது
முட்கம்பி வேலி இருந்தும்

வளர்ந்த கீரைப் பாத்தியெல்லாம்
மிதித்துப் பசியாறிச் சென்றது
துட்டுத்தரும் கீரையெல்லாம் போச்சே!
முள் குத்தியதாயாச்சே!

முட்கம்பி இல்லாமலே பலர்
முள்வேலியுள்ளே! உறவு ஊர் 
பிரிந்த அவல வாழ்வதில்
புலம்பெயர்ந்த நாமுமொரு வகையே!

16-7-2016





147 . (721) என் உயிர் தங்கை.









என் உயிர் தங்கை.

நல்ல குணவதி. உதவும் குணம் கொண்டவள்.
அனைவரையும் அணைப்பாள்.  அழகிலவள் 
இராஜசுலோசனா போன்றவள். என் உயிர் தங்கை.

இறுதியாகக்  கொழும்பு சென்ற போது
மிக அருமையாகப் பார்த்துப் பார்த்து 
உபசரித்தாள் என்னை. இது தான் 
கடைசியக்கா  என்று  நினைத்தாளோ.

விடுமுறைக்கு  அவளை டென்மார்க் அழைத்து
விசாலமாகப் பேசி  மகிழ ஆசை 
கொண்டேன். விதி நோய் உருவில் வந்தது.

பணம் நீராக ஊற்றி இந்தியா
இலங்கையென  மருத்துவம் செய்தோம்
எதுவும் உதவவில்லை.

சற்றும்  எதிர்பாராதது. என் உயிர்
தங்கையின் இன்னுயிர்  வெண்மை முகிலினுள்.
புற்றுநோய் காவு கொண்டது.

பற்று மிகுதியில் பித்துப் பிடித்து 
நான்  என்னை மறந்தேன் சோகத்தில் வீழ்ந்தேன்.

எல்லாம் கடந்து போகும்.என்னுயிர்
உன்னுயிர்  என்பதெல்லாம் அன்னியம்.பொய்.
ஆசை வைக்காமை ஆதி வரை 
காக்கும். ஏமாற்றம் தொலைதூரம்  ஏற்றுமதியாகும்.

13-7-2016







வியாழன், 25 ஜூலை, 2019

146 ( என் மன முத்துகள் -8-9-10 )





8
என் மன முத்துகள் 

26-11-2017

மனிதனுக்கு மனிதன்நேரம் செலவிடவோ
நட்பிற்கு நட்பாக  நேரம் செலவிடவோ 
மனிதனுக்கு நேரமே இல்லை.
சொந்த புத்தியில் நடப்பதிலும் குழுநிலைச்
சிந்தனைகள் மேலோங்கி  உறவுகளை நொறுக்குகிறது.


9


எனக்கு முடிந்ததை நான் செய்யலாம்

என் திறமையை நான் காட்டலாம்
என்பதைவிடஇ அவன் செய்கிறான் 
அது போலவே நானும் செய்ய வேண்டும்
என்ற மனநிலை ஆபத்தானது. தனது 
வாரிசு வரை அசிங்கமாக இழுத்துச் செல்லப்படுகிறது.

14 – 10 - 2010

10

பெற்றோர்பாச இரசமற்ற கண்ணாடிகளாகச் சில பெற்றோர்கள்.
சிறகொடிந்த பறவைகளாகத் தேடுவாரற்ற சில பிள்ளைகள். பெற்றோரை விட சிறந்த ஆதரவு யார் கொடுப்பார்கள்.
பணப்  பவிசிலும் உலகத்திற்கு மினுக்கம் காட்டவும் 
கவனத்தை கூட்டிப் பெருக்குவதில் பெற்றவர் சிந்தனை.
சொந்த பிள்ளைகள் வேதனையில் மூழ்க பெற்றவர்
பந்தம் அறுத்து வாழ்தலும் ஒரு வாழ்வா!

2018







145 . (என் மன முத்துகள் 5-6-7 )




5

என் மன முத்துகள்


பனியில் விறைத்த நிலம்
அனித்தியம் வாழ்வெனக் காட்டி
கனிவற்ற மனிதர் போலக் 
கவிழ்த்து விடவும் பார்வைக்கு
 கண்ணிற்கு விருந்தாகவும் ஒரு
எண்ண மாயம் காட்டுகிறது.

 8-1-2018


6

10 - 12 -2012 

புனைமொழியல்ல மனைய(வாழ்வ)றத்தில்
நினைப்பதைச் சாதிக்க மானிடன்
தினையளவும் தயங்கமாட்டான்.
அனைத்துமே செய்யத் துணிகிறான்.
(புனை - அலங்கார)


7

2-12-2017
ஆணிவேர் அடிப்படை ஆதாரம்
ஏணிவேரான மரத்தின் ஊன்றுகோல்.
கோணிடாது மரமுயரும் அத்திவாரம்.
நாணமிதை மனிதர் மறப்பதுண்டு.









புதன், 24 ஜூலை, 2019

144. (720 ) தூரிகை






 தூரிகை

(1. சாரிகை - கவசம் .2. பேரிகை - முரசு .3. பூரிகை - ஊதுகுழல். 4. சேரிகை - ஊர். 5. தூரிகை - எழுதுகோல்.)

தூரிகையால் வண்ணச் சாயமிடும் ஓவியன்
காரிகையை,   கவின் இயற்கையை கருவாக்குவான்.
தூரிகை எழுத்தாளன் படைக்கலம். சமுதாயச்
சாரிகையாகவும் சமயத்தில் சுழலும் கோல்.

பூரிகையாகவும் நீதிப் பேரிகை கொட்டும்.
தூரிகைத் தடமெழுத்தால்,    வண்ணத்தால் ஆழருத்தமுடையது.
சேரிகைக்கு வெகு ஆதாயமாகும் கருவி.
நாரிகையென் தூரிகை தமிழுக்காய் தமிழெழுதும்
.
14-2-2017








143. (719) ' ஏ '











' ஏ '

' ஏடா கால்சட்டை கழன்று விட்டதா!
ஏய்! சிறுநீர் கழிக்கிறாயாடா பாதையில்!
ஏழு தடவை சொன்னேன்! நல்ல
ஏச்சு தந்தேன் என்னோடு வராதேயென

ஏ! அண்ணா நில்லேன் என்று
ஏகமாய்க் கத்தாதேடா! சின்னப் பயலே!
ஏறுமாறாய் எனக்குக் காது வலிக்கிறதே!
ஏன் தொல்லை தருகிறாய் தம்பியே! '

(ஏகமாய் - மிகுதியாய்.
ஏறுமாறாய் - தாறுமாறாய்)

23-5-2017





வெள்ளி, 19 ஜூலை, 2019

142 (718) மனிதம் காத்திடு!









மனிதம் காத்திடு!

அழகிய கண்களால் பார்த்திடு
அழகுடன் அருளைக் காட்டிடு!
அழலாக அறிவொளி கூட்டு!
விழல் தொழில்களை விரட்டு!

நிலையற்று நாளும் அடுத்தவரது
நிலைப்பாட்டுயர்வைத் தாங்காது
அலைதல் - அலைக்கழித்தலென்ற
தலைகளன்ற நிலை மாற்று!

நிலைதடுமாறுவோர் சங்கமத்தில்
விலையற்ற விழலான ஒரு
வலையமைப்பு ஏன்! பெரு
கலை கலாச்சார அழிவேன்!

புத்திக்கு வேலை கொடு!
கத்தி – புத்தியழிந்தவன் பாட்டு!
உருகிடப் பேசு! வன்முறையோடு
உருக்குக் கருவியையும் வீசு!

தன் ஆக்கம் வேண்டாதோன்
பிறன் ஆக்கம் அழிப்பான்.
ஒரு தடைவ பிறப்பு.
கருமையாயேன் பெருமழிப்பு!

மூதேவியை அணைப்பது வீண்!
சீதேவியை அணைப்பது தேன்!
தமிழனே! அறிவால் வெல்லு!
தமிழன் பெயரைக் காத்திடு!

பொதியான அறிவைத் திற!
நிதியான தமிழன் கலாச்சார
மதிப்பை உயர்த்து! காலித்தன
கொதிப்பு, நோய் பாதிப்பு!

18-12-2012.





வியாழன், 18 ஜூலை, 2019

141. (717) கிறுக்கல் சித்திரங்கள்.







கிறுக்கல் சித்திரங்கள்.

சரிவாய், நேராய், வரிவரியாய் கற்பனைகள்
சரியிது என்று கிறுக்கும் கிறுக்கல்கள்
சிரிக்கும் குழந்தை மனதில் மத்தாப்பு
விரிக்கும்!  மகிழ்ச்சி ஊற்று சிதறும்!
தரித்து நிலைக்கும் தானொரு ஓவியரென!

உருவில்லாக் கிறுக்கல் கற்பனை முதலடிக்கு
பெருமூக்கம் கொடுத்து உயர்த்தல் ஏணியாகும்.
உருவகம் கொடுத்து விவரித்தால் கண்கள்
பெரிய முட்டையாக ஒளிரும் கவிதையுயரும்
அரும் கிறுக்கல் சித்திரமும் இரவிவர்மனாக்கும்.

பிள்ளைகளின் விரல்கள் இயங்கும் வலிமை
தள்ளும் விதமாகச் சித்திரம் விரியும்
பிள்ளை மனஎண்ணமே கிறுக்கலாய் விரியும்.
அள்ளி எடுத்து ஆய்கிறார்கள் மனவியலாளர் 
வெள்ளி நிலவாக மின்னட்டுமிது சுவரெல்லாம்.

15-5-2018




செவ்வாய், 16 ஜூலை, 2019

140. (716) கண்ணன் வேடம்








கண்ணன் வேடம்

' கண்ணன் வேடமிடக் கலவரமா கண்ணா!
கிண்ணம்    நிறைத்துப்   பால்   தருவேன்.
வண்ண   நிலாவைக்   கையில்   தருவேன்.
அப்பாவைப்  பாருடா!  படம் எடுக்கிறார்!

முகநூலிலும் இன்னும் அனைத்திலும் ஏற்றுவார்
சிரிடா  செல்லம்!  சிரிடா!  சிணுங்குவதை
நிறுத்துடா கண்ணா! உப்பு  காவுகிறேன்!
உப்பு  வேண்டுமா1   உப்பு!  உப்பு!..'

16-5-2017





திங்கள், 15 ஜூலை, 2019

139. (715) அன்பின் தேடல்.










அன்பின் தேடல்.

ஊன் உயிராய் உலவிக் கலக்கும்
தேன்மொழி மாந்தரையும் விரவும் கலக்கும்.
தேன் மாந்தும் வண்டுகளையும் இணைக்கும்
அன்பு  ஒட்டியுறவாடும் உலக இயக்கம்
இன்புருவான உன்னத உயிரிணைப்பாம்
வன்மையற்ற மென்மை மனதின் முயக்கம்.

தென்றலின் தடவலில் துய்க்கும் உலகம்.
கன்றின் உரசலில் சிலிர்க்கும் தாய்மை.
நீரின் தழுவலில் துளிர்க்கும் பூச்செடி.
அன்பின் ஆதரவிற்கேங்கும் உயிர்கள்!
இவ்வாடலிற் தானே பிரபஞ்ச மயக்கம்!
இத் தேடலிற்றானே உலக இயக்கம்.

12-6-2002





ஜேர்மனி வெற்றிமணி பத்திரிகையில் வெளியானது 2002ல்




ஞாயிறு, 14 ஜூலை, 2019

138. (714) என் சுமை







என்   சுமை

உன் மலர் வதனம் பார்க்கையில்
என் சுமை எனக்குப் பெரிதல்ல.
அன்பே நாம் சேர்ந்தே வாழ்வோம்.

காத்திரு எனக்காக கண்ணனே
கடினமாயினும்  வேலையை விரைவில் முடிப்பேன்.
காதல் பலம் மிக்க உணர்வன்றோ!

தாஜ்மகால் கல்லறை தானே நாம்
தாமரைக்   குளத்தருகே  மனை  அமைப்போம்.
தாம்பத்தியம் அமைப்போம் தாலாட்டும் பாடுவோம்.

 12-3-2018




137 (713) தனம் தாரகம்








1. தனம் தாரகம்

தனம் பெருக்கித் தருமம் செய்!
இனம் விரும்ப ஈந்து வாழ்!
தனம் குணம் மாற்றும் கவனம்!
தினம் உழைத்துத் தனம் தேடலின்பம்.

2. தனம் தலைக்கனம்.

தனமாள்பவனுக்குத் தனத்திமிர் உண்டு.
நனவு உண்மை இது மாறாதது.
தனமின்றி அழுவார் மனமுடைந்து விழுவார்.
தனமே நாட்டின்இ வீட்டின் மூலமந்திரம்.

18-3.2018





136. (712) என்ன தவம் செய்தனை






   என்ன தவம் செய்தனை

இன்பத்தமிழோடு நாளும் இசைந்து இணைந்திட
என்ன தவம் செய்தனை என்கிறார்
கன்னல் மொழியின் இனிமையே அனந்தம்
அன்னைத்தமிழை ஏந்திச் சீராட்டுதல் ஆனந்தமே.

ஆனந்தமே  தினம் ஆராதித்திடு உயர்வாய்
ஆனந்தபரவசமே  தேடலும் ஆராய்தலும் திருவாசகமாய்
ஆனந்தி என்ற தாமிர பரணியாற்றின்
வானந்தம் போன்ற தமிழெமது தவமே.

எமது தவமே நல்ல பெறறவரமைவு
எனது தவமே நல்ல கவியமைவு
என்ன தவம் செய்தனை  மனிதனாக!
பின்னும் பிறர் கூற்றும் வரமே.

வரமே நண்பர்களின் வாசியான கூட்டமைவு
தரமே வாழ்வில்  கலைகளின் ஊட்டம்.
உரமே  வாழ்வின் உயர்விற்கு ஊக்கமாய்
சரமென எழுந்து சாதிக்கும் ஓவியங்கள்.

ஓவியங்கள் வரைந்திடவும் தேவை தவம்
காவியமாகும்  வாழ்வின் கற்பனைப் பேறுகள்
ஆவியுடன் ஒன்றிணையும் திறமை, ஊக்கம்
தாவி  அணையுங்கள் தவப்பேறு வாழ்வை

4-8-2018




புதன், 10 ஜூலை, 2019

135 (711) அரசாட்சி










அரசாட்சி

சங்கிலே கோட்டை புனைந்து
செங்கொல் கரத்தில் ஏந்திய
செங்கனல் வார்த்தைகள் அரசாட்சி
சங்கதிகள் பல்லவி, அனுபல்லவியாய்
பொங்கி விரிகிறதுவரணங்கள்
பங்கில் திரள்கிறது பகைப்படைகள்.

அன்பு அரசாளுமென்ற மென்விரிப்பு
வன்முறைக் கொடியால் அலைக்கழிப்பு
பொதியான சுயநலமூட்டை
விதியாய் உதைக்கிறது நல் மனிதத்தை
நதிவேக மாற்றம் இது.
விதிவலக்கற்ற புலிக்கூண்டு நிலையே

 (வரணம் - சூழ்தல்,  மதில்)

13-12.2008.





செவ்வாய், 9 ஜூலை, 2019

134 (710) எப்படிப் புரிய வைப்பது!







எப்படிப் புரிய வைப்பது!

செப்படி வித்தை உலகில் வாழ
தப்படியின்றிக் காலடி நீள
வைப்படி சீரென வைக்கும் அசையை
எப்படிப் பரிய வைப்பேன் உமக்கு!
முப்படியேற ஈரடி சறுக்கும்
அப்படிக் குளறுபடி இன்றைய உலகு.

கேட்டல் புரிதல் மனிதப் பண்பு
கேட்டாலும் புரியாது நடித்தல் வீம்பு.
ஊட்டும் நல்வழி சிலருக்குத் தப்பு.
காட்டில் மழை தான் நல்ல நினைப்பு.
கூட்டில் பறவையான மனதின் தவிப்பு
வாட்டுது வேதனை தெளிவது எப்போது.

வேப்பமரத்தடி மண்ணை அளைந்து
அப்பா அம்மாவுடன் அளவளாவிய தமிழை
அப்படி விலக்கி அன்னிய மொழியை
முப்பொழுதும் மொழிந்து பிணைந்து மகிழ்ந்தால்
எப்படித் தமிழ் மேற்குலகில் வாழுமென்று
எப்படிப் பரியவைப்பேன் உமக்கு!.

5-4-2006.
திண்ணை இணையத்திற்கு எழுதிய கவிதை 








133. (709) ஏணிகள் ஏறுவதில்லை




இலண்டன் தமிழ் வானொலி வியாழன் கவிதை

ஏணிகள் ஏறுவதில்லை

தோணியாய்க் கைகொடுத்துப் பிறர் நலம்பேணுவோர்
ஏணியாயிருந்து திறன்களை உயர்த்துவோர்
நற்கேணி மனதாளர் நற்தகுதிப் பணியாளர்.
ஆணியடித்தது போற் காணியில் நின்றிடும்
ஏணிகள் ஏறுவதில்லைஏற்றப் படுவதுமில்லை.
நாணிடும் செயலே வீணில் குளம்பாது
பாணியை மாற்றி மனிதநேயம் பேணுவோம்.
வாணியருளால் ஏணியை மதித்து ஆதரிப்போம்.

உதவியெடுத்தோர் பண்பிழந்த செயல்கள், வார்த்தைகள்
உதவிய உன்னதத்தை உடைக்கும் பாறைகள்
பதவிசு காத்து நற்பண்பு வளர்க்கும்
கதவு திறத்தல் ஏணியை உயர்த்தும்.
நூற்றில் ஒருசிலர் ஏறிய ஏணியை
கீறி சேதமாக்காது கூறிப் போற்றுவார்.
மாறிடும் உலகில் நழுவிடும் மனிதத்தில்
மீறிடும் பண்பது பீறிடுதல் நன்மையதே!

1-8-2004




132. ( என் மன முத்துகள் 3-4- )









ஆசை அளவுக்கு அதிகமானால் 
தூசைக் கிளப்பிக் கண்களை மறைக்கும்.

00

மரியாதை கொடுத்து மரியாதை வாங்குதலாய்
இன்சொல் பேசியும் இன்சொல் வாங்கலாம்.

இன்சொல் பேசுதல் பிறப்போடு வரும்.
நன் முயற்சியிலும் பெறமுடியும்.

இன்சொல் பேசல்நன்மைமிகு அற்புதம்.
இன்பம் தந்து என்புருக்கும் அற்புடம்.

வன்முறை அழித்து பண்பாடு பெருக்கும்.
இன்சொல் தன்பாட்டில் தகவு பெருக்கும்.

19-9-2006




திங்கள், 8 ஜூலை, 2019

131. (708) தினமும் தினமாக...






தினமும் தினமாக...

(தினம் நட்சத்திரம், என்ற கருத்தை எடுத்து..
நிலக்குப் பொறையாக - நிலத்திற்குப் பாரமாக) 

கங்கையாய்ப் பெருகும் தொல்லைகள் துடைத்து
சங்கீதப் புனலாக அன்பைப் பெருக்கி
தங்கிட ஆனந்தச் சாம்பிராணி தூவி
பாங்காய் எழுதுவேன் தினமும் தினமாக.
ஊன்றிட எண்ணும் சினம் கழுவி
என்றும் செல்வமான குழந்தைக் குதாகலத்தை
நன்று பயிராக்கி நம்பிக்கை உரமிட்டு
வென்றிட எழுதுவேன் புதிய பாரதியாக.

மனமும் சூழலும் மகிழும் கரையமைத்து
எனக்கு நானே ஒளி வழியமைத்து
தினமும் தினமாய் நதியாய் வரைந்திடுவேன்
கனமாய், தனமாய் நலம் விளைந்திட
கலக்கமில்லாக் கருத்தைக் கோர்த்து
இலக்கணப் பல்லக்கில் வர்த்தைகள் ஏற்றி
துலக்கும் பாதையில் சுந்தரப் பாவெழுதி
நிலக்குப் பொறையின்றி தினமும் தினமாகலாம்.

தினமும் தினமான சந்தன நினைவுகளை
ஊனங்கள் சமூகத்தில் போக்கிடத் தெளித்து
ஞானம் வளர்த்து மானம் உயர்த்திட
தினமும் தினமாய் மகுடம் சூடலாம்.
என்பாணியில் என்றும் சுதந்திரமாய்
எண்ணத்தின் வலிமையால் தனித்துவம் ஓங்கிட
கண்ணியம் பேணப்பண்பான மொழியை
வான் பரந்த இடமெல்லாம் வைப்பேன் தினமும் தினமாக

1-3-2006
இலண்டன் தமிழ் வானொலி வியாளன் கவிதை.




428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...