திங்கள், 8 ஜூலை, 2019

131. (708) தினமும் தினமாக...






தினமும் தினமாக...

(தினம் நட்சத்திரம், என்ற கருத்தை எடுத்து..
நிலக்குப் பொறையாக - நிலத்திற்குப் பாரமாக) 

கங்கையாய்ப் பெருகும் தொல்லைகள் துடைத்து
சங்கீதப் புனலாக அன்பைப் பெருக்கி
தங்கிட ஆனந்தச் சாம்பிராணி தூவி
பாங்காய் எழுதுவேன் தினமும் தினமாக.
ஊன்றிட எண்ணும் சினம் கழுவி
என்றும் செல்வமான குழந்தைக் குதாகலத்தை
நன்று பயிராக்கி நம்பிக்கை உரமிட்டு
வென்றிட எழுதுவேன் புதிய பாரதியாக.

மனமும் சூழலும் மகிழும் கரையமைத்து
எனக்கு நானே ஒளி வழியமைத்து
தினமும் தினமாய் நதியாய் வரைந்திடுவேன்
கனமாய், தனமாய் நலம் விளைந்திட
கலக்கமில்லாக் கருத்தைக் கோர்த்து
இலக்கணப் பல்லக்கில் வர்த்தைகள் ஏற்றி
துலக்கும் பாதையில் சுந்தரப் பாவெழுதி
நிலக்குப் பொறையின்றி தினமும் தினமாகலாம்.

தினமும் தினமான சந்தன நினைவுகளை
ஊனங்கள் சமூகத்தில் போக்கிடத் தெளித்து
ஞானம் வளர்த்து மானம் உயர்த்திட
தினமும் தினமாய் மகுடம் சூடலாம்.
என்பாணியில் என்றும் சுதந்திரமாய்
எண்ணத்தின் வலிமையால் தனித்துவம் ஓங்கிட
கண்ணியம் பேணப்பண்பான மொழியை
வான் பரந்த இடமெல்லாம் வைப்பேன் தினமும் தினமாக

1-3-2006
இலண்டன் தமிழ் வானொலி வியாளன் கவிதை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு