வியாழன், 31 அக்டோபர், 2019

213 (782 ) தில் வரிகள்







தில் வரிகள்

தன்னினத்தோடு தொழில் பார்க்கத் தனியாய் வேண்டும் தில்
தனியாய் நின்று  போராட தளிர்க்க வேண்டும் தில்
தன்னிலொருவன் திறமை கண்டால் தாங்கிட வேண்டும் தில்
தணிக்க வேண்டும் பொறாமைத் தீயை தனியாய் வேண்டும் தில் 

சமாளித்து நடந்து சமர்த்தாய் இருக்க
சமத்துவமாய் நடுநிலையாக அனுசரிக்க வேண்டும் தில்
ஊன்றட்டும் மனதில்  ஊட்டமான தில்
தோன்ற வேண்டும் உன்னில் தில்

(வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும் - தில் படப் பாடல் சாயல்)

28-3-2002




புதன், 30 அக்டோபர், 2019

212. (781 ) துன்பப் பாசி








துன்பப் பாசி

வாழ்வில் ஊன்றித்  தொடர்ந்து பரவும்
ஆழ்ந்த துன்பப் பாசி இடறும்
சூழ்ந்து கவியும் கிரணம்  வதைக்க
வீழ்ந்து மனிதன் படும்   இரணம்
தாழ்ந்த வாழ்வின் அழிவின் காரணம்

நலல நினைவுகள் நறுமணமாகும்
நறுமணம் விரிந்து நாற்திசை பரவ
நல்லுணர்வுசெறிந்து விரியும்.
கள்ள நினைவுகள் கழற்றி வீழ்த்தினால்
வெள்ளமாய் இதயத்தில் நல்லவை நிறையும்.

நிகரில்லா நம்பிக்கையை ஆழ ஊன்றி
மகரசோதிக் கருணையால் காலத்தை வெல்லலாம்.
பகர முடியாத காலக்கெடுவால்  நேர்மை 
நகர, ஆணிவேரான கண்ணியம் விலகுகிறது.
வேரான மனிதப் பண்பு அறுகிறது. 

2018



211. (780 ) நன்மைகளால் மனிதம் வாழவேண்டும்.







நன்மைகளால் மனிதம்  வாழவேண்டும்.

பந்தங்களின்றிப்  பாசவலை அறுந்து
நொந்து இதயம் துகள் துகளாகுவோர்
வெந்து மனம் வேதனையில்  கரைவோர்
வெறுமைத் தனிமையில் விரக்தி கொள்வோர்
வறுமையில் சுயதகுதி இழப்போருடன்
வசநதத்  தென்றலாய் இதமாகப் பேசுதல்
நொந்த இதயத்திற்கு நெம்புகோலாகும்- இது
நொடியில் மனம் இயக்கும் மின்சாரமாகும்.

இந்த உலகு தனக்கு வேண்டாம் என்றவனுக்கு
உந்தும் வார்த்தை உயர்ச்சிப் படியாகும்.
கெந்தும் தடுமாற்றம் மனப்பாரம் விலக்கும்
சிந்துபாடி சுயநம்பிக்கை அரங்கேற்றும்.
வந்த தனிமைத் தடை நீங்கும்.
எந்தப் பணமூட்டை தரும் நன்மையிலும்
எளிமை மனஉதவி தரணியில் தளர்வோனுக்கு
குளிர்மைத் தபோவனமாகும், தலை உயர்த்தும்.


தொன்மை   மனிதரின் ஆதி வாழ்வின்
தன்மை தகுதி வேறு - இன்று
பன்மை  அறிவு பெற்ற மனிதர்
நன்மை   வழி நடக்காது மாறுவது
வன்மை வழியைச் சிலர் தேடுவது
உண்மை அறிவுடை மனித சுபாவமல்ல
வெண்மை உள்ளமாய் நன்மைசெய்தால்
அண்மையாய் இறைவன் அருகில் நெருங்கலாம்.

17-4-2007
(தமிழ் அலை வானொலியில் வாசிக்கப்பட்டது)









செவ்வாய், 29 அக்டோபர், 2019

210. (779 ) தத்துவம்








தத்துவம்

அமைதிக் குளத்தின் ஆழ்ந்த தியானம்
சமைந்தது சளக் கென விழுந:த கல்லினால்
சுழன்று சுற்றியது சுழி அலைகள்
தொலைந்தது பளிங்கு நீரின் அழகு
கலைந்தது ஒப்பில்லா அமைதித் தவம்

மதிநுட்ப மனஅரங்க அமைதி
விதியெனக் கலைவதும் மனிதர்களால் தான்
கொதிக்கும் பல நினைவு அலைகள்
மிதிக்கும் மனஅமைதித் தவத்தை

எறும்புச் சுறுசுறுப்பு ஒழியாமல்
குறம்புச் சிறுகதை குறையாமல்
விரிந்த பூ  முகம் வாடாமல்
மலர்ந்த மலர்ச் சிரிப்பு மனக்கட்டும்.
(பந்தபாசம் படத்தின்- கவலைகள் கிடக்கட்டும்- பாடலுக்கு எழுதிய வரிகள்.)

2006




209. (778 ) வானொலி நுளைவு







வானொலி நுளைவு

தண்ணென கால்கள் நுழைய  எண்ணிட ஆவல் மீறும்
கண் பறிக்கப் பலர் ரசிக்கும்  விண்ணுயர் வசந்த வளைவு
நண்ணுவது இன்பம் ஆகா, புகழெனும் வளைவு.

சேவை மனமோ நிதமும் தேவை என்றது மிகவும்
கலை களித்ததுவிளைவு கலையின் வலைப் பிணைவு
ஆரம்ப நிலையிது, (10-6-1998 )  ஏரம்பன் துதி பொது

தெ ள்ளிய சிந்தனை என்றும்  பள்ளி கொள்ளா நினைவு
உள்ளே நுழைவேனோ வென்றிட, வள்ளத்தில் கரை சேருவேனோ
கொள்ளை மகிழ்வில்  உள்ளம் துள்ளியது உண்மை நிதம்

கிட்டுமோவெனும் ஏக்கத்  தழைவு எட்டியது வானொலி நுழைவு
நுழையும் வரை தவித்ததும், நுழைந்து வேர் பரவியதும்
விளைந்து எழுந்தது வேகம், ஆரம்ப எண்ணம் சொர்க்கம்.

16-4-2002

இலண்டன் தமிழ் வானொலி ஆரம்பம்.10-6-1998










சனி, 26 அக்டோபர், 2019

208. (777 ) வந்தது வசந்தம்








வந்தது வசந்தம்


நட்சத்திரப் பூக்கள், நன்நீலவானம்
கட்புலம் கவரும் அருவி, நந்தவனம்
கவர்ந்து இழுக்கும்  மழலை விழிகள்
கனவு ஊற்று கலலை காண்கையில்
கலை, வர்ணம், பா புனைதல்,
கணவன், குழந்தைகள், உறவுகளோடு
கலந்து உறவாடும் கலகலப்புப் பொழுதுகளில்
குறையின்றி வசந்தம் வந்தது எனக்குள்.

மாயை இருள் குளிர் அரக்கன் 
நேயமாய்க் குளிர் போர்வை விலக்கலில்,
உழைக்கச் செல்லும் அதிகாலைப் பொழுதில்,
குழையும் இன்னிசை  மெல்லிய இழையலில்,
கிழக்கு  வெளுத்து ஒளியான  பொழுதில்,
கிசுகிசுக்கும் பறவைகள் அதிகாலை மொழியில்,
பாசம் குழந்தைகளால் மதிக்கப் படும் பொழுதில்,
பாடம்   நூல்களால் உணரும் பொழுதில்,

நம் காதல் திருமணமாய் மலர்ந்ததில்
எம் முதற் குழந்தை   ஆணென்ற பொழுதில்
எமக்கென்று பெண் குழந்தை பிறந்ததில்
எதையும் தாமே இன்றவர்கள் சமாளிப்பதில்
எனது பாக்கள் நூலுருவம் ஆனதில்
எனக்குள்ளானது வசந்தம் பல தடவை
சாதக நினைவுகளால் பொங்கும் வசந்தம்
பாதக நினைவுகளால் மங்கும் வசந்தம்.

இப்போது இரண்டு பேரக் குழந்தைகள்
அப்பப்பா பண்ணும் கும்மாளங்கள் குளப்படிகள்

தப்பாது வசந்தம் நாள் முழுவதும்...

17-3-2006
18-4-3004ல் இலண்டன் தமிழ்    வானொலியில் 
வியாழன் கவிதை





செவ்வாய், 22 அக்டோபர், 2019

207. (776 ) கவிதை பற்றி- கவிதை






கவிதை பற்றி

நல்லதைச் சேர்த்து நவிலல் கவிதை
சொல்வதைச் சுருங்கச் சொல்லல் கவிதை
கவிதை அமைப்பு சத்தான சமைப்பு
கட்டுரை  அல்ல   கவிதை  அமைப்பு

கவிதை வரிகளின் தொகைக் கணிப்பும்
கட்டும் வார்த்தைகள் தொகைக் கணிப்பும்
கணக்கில் அமையும் தொகைக் கணிப்பில்.
கொத்தான  கருத்தும் கவிதைக் கணிப்பே.

கவிதைக் கருத்தரங்கம், கவிதைப் பட்டீமன்றம் 
கருத்துகள் விதைக்கும் நீட்டோலை வாசிப்பு.
பரஸ்பரம் புரிந்த  கவிதை நறவம்
பாயட்டும் பலர் அதில் நனையட்டும்

28-1.2002

கவிதை

கவிதை இதயத்தின் மென் இராகம்
கனம் அதிகரித்தால் அனல்
தெறித்துப் பொங்கும் புயல்
கள்ளம் இல்லாதது ஏழைகளிடமும்
உறவாடும் உண்மை முகம்.

சாமரமல்ல சவுக்கு எனலாம்
சந்திரன்இ நிலாஇ சஞ்சீவி 
சரவணப் பொய்கை சங்கமம் 
சங்கீதம் எனக்கெனச்  சொல்லலாம்.
சரணடைகிறேன் உன்னிடம் நானும்.

21-3-2019





206 (775 ) இது தான் நியதி








இது தான் நியதி

மழலையாயுதித்து உடலுறுப்புத் தளர்வால் 
மழலையாகுமிது  வாழ்வு  நியதி.
நடைவண்டியூன்றி நடை பழகி
தடையான செயலூக்கம் தவிர்க்க
விடை தருகிறது ஊன்றுகோல்.



இறப்பு,  பிறப்பு  அற்புதம்

மழை, சூறாவளியியற்கை நியதி.
சக்தியின்  சுற்றுப் பாதையானதால்
கோவில்  பிரகாரத்தை  இடமிருந்து
வலமாகச் சுற்றல்  வலிமையுடையது



வணக்கத்துடன் சந்தித்து, சுணக்கமானால்

மன்னிப்புதிர்த்து, பிணக்கென்றால் பேசியவிழ்ப்போம்.
புலன்களை  அடக்கியாளப்  பழகும்
மூச்சுப்  பயிற்சியாம்  நியதிகள்
வீச்சுடை சமுதாயம் அமைக்கும்.



காலை  மாலையிறை வணக்கம்.

தூரப் பயணமாவோர், மணமக்கள்,  
பிரசவம் முடித்தவரில்லம் வர   
மஞ்சள், சுண்ணாம்பு நீருடனொளியால்
ஆரத்தி எடுத்தல் சுகாதாரநியதி.



மனத்துயர்களைக்  கொட்டுதல் மனபாரம் 

அகற்றுமென்பது மனவியலின்  நியதி.
புலமைத்துவத்தால் பட்டம் பெறுதல்
நலமுடை அறிவியல் நியதி.
நியதியுடை வாழ்வு இன்பமே.


 20-7-2017






திங்கள், 21 அக்டோபர், 2019

205. (774 ) கனா கண்டேனடி












கனா  கண்டேனடி

கனா  கண்டேனடி  கவிதையில்  வென்றேனடி
வினா   ஏதுக்கடியினி    விசும்பாதேயென்னைப்   பார்!
கனா  காணடி!  தாலி  தயாரடி
பொன்னுருக்கி  வார்த்த  வானம்  பார்!
கண்மணியே    என்னை  மணப்பாயா  சொல்!

10-6-2017







கரையின்றி எழுதுவோம்  பல கவிதைகள்
கங்கையாய்  ஓடட்டும்,  இலக்கியத் தமிழ்க்
கடலில் சேரட்டும்   கலைவாணி அருளுடன்.
திடலில் வானம் தொடும் தூரமாகும்
கடலைத் தாண்டுதல் கடும் பிரயத்தனமே. 

கோட்டை கொத்தளம், குடிசையிலும் எம் 
பாட்டைப் பலரும்  பேச வேண்டும்.
ஊட்டமிகு கருத்துடனே இறப்பில்லா வரிகளாய்
கூட்டி  எழுத வேண்டும்  நாம்
கேட்டாயா கண்மணியே என் ஆசைகளை


5-11-2019





204. (773 ) நம்பிக்கை விடிவெள்ளிகள்.







ம்பிக்கை விடிவெள்ளிகள்.

ஊடகங்களுக்குள் போட்டி உயர்ந்திடவும்
ஊன்றி நிலைக்கவுமுயிர் வாழ்ந்திடவும்
உருப்படாது  அழியவும் உருவாகவும்
உலகெங்கும் போட்டி போட்டி

பூ மலர்ந்து வீழ்ந்தால்
காய் ஒன்று முளைக்கும்
கிளையொன்று முறிந்தால் புது
முளை ஒன்று வளரும்.

மூழ்கிடும் சீவனுக்கும் தருணத்தில்
ஆழ்கடலிலொரு தெப்பம்
நல் நம்பிக்கை விடிவெள்ளி
நல்லுயிர் தரும் சீவதுளி.

முல்லைக்குத் தேரீந்த பாரி
தொல்லையில் கையிணைக்கும் உறவுகள்
எல்லை வகுத்திடா அன்புள்ளங்கள்
இல்லை நமக்கினித் தொல்லைகள்.

துன்ப அலைகள் புரளும்
செவிட்டுக் கரைகளில் மோதும்
இரும்பு இதயங்கள் இறுகும்
இற்றுத் துரப்பிடித்து வீழும்

இளகிய இதயங்கள் வளையும்
இழைந்திணைந்து உலகை வெல்லும்
துன:பம் ஒன்று வந்தால்
புடிப்பினை ஒன்று தோன்றும்.

31-7-2001


வேறு

யார் யாருக்கு.... 

எண்ணும் எண்ணங்களிலும்
நண்ணும் செயல்களிலும்
மண்ணில் யார் யாருக்குத்
துணை  அருகாக எப்போதும்
இணையாவது யார்! – மாபெரும்
துணை தனது மனமே. – எறி
கணைகளுக்கும் சாயாத மனமே.
அணைக்கும் நம்பிக்கையே தூணாகும்.

23-7-2010






வெள்ளி, 18 அக்டோபர், 2019

203 (772 ) வீழ்வேனேன்று நினைத்தாயோ!







வீழ்வேனேன்று நினைத்தாயோ!

என்  பாதையில் சீரான நோக்கில்
நன் வழி அமைத்துச் செல்லும்
இன் பயணம் இனிதாக நிறைவுறும்.
வன் செயல்கள் இல்லாத நான்
புன்னகையற்று வீணே வீழ்வேனென்று நினைத்தாயோ!

சொல்வது கேட்டுத் தலையை ஆட்டி
வெல்வதை மறந்து கண்ணீர் விட்டு
புல்லரை ஏற்றுப் புனிதம் மறந்து
வல்லது செய்யாது வாடி நின்று
கல்லது போன்று வீழ்திட மாட்டேன்.

தடைகள் தாண்டித் தனித்தன்மை காட்டி
விடையாம் வெற்றி விளைத்திட  முயன்று
முடையெனும் நடை விலக்கி முன்னேறி
குடை பிடித்துத் துரோக மழையிலும்
குமிழ்ந்த சிரிப்பில் சிகரம் ஏறுவேன்.

தீராத போராட்ட வாழ்வின் எதிரி
தீரமுடன் போராடுவான் தருணம் நோக்கி
தீர்வு காண்பேன் தடியடி இன்றி
தீயபாதை அழிவிற்கே! எழுந்து உயர்வேன்!
தீர்க்கமான கனவு வெற்றிப் பாதைக்கே!

தாழ்ந்திடேன்! வெற்றி காண்பதே வேள்வி!
வாழ்ந்து வீழ்ந்திடாது வேர் ஊன்றுவேன்!
ஆன்ற தமிழோடன்றோ நடக்கிறேன்
ஊன்றித்  தவிப்படக்கும் மொழித் தூவல்
கையறு நிலையை விந்தையாய் மாற்றும்

14-6-2018



202. 771 ) விளையாட்டுப் பருவம்.








விளையாட்டுப் பருவம்.

தலைகீழாக நிற்க  வேண்டிய தைரியம்
விலையேதுமில்லாத்   துணிவு   நிலை   ஐசுவரியம்.
கலையிவை   பருவத்தில்   கற்கையென்பது  வைரம்.
இலையிடத்   தேவையற்ற  பசியற்ற ஆர்வம்.

கட்டியணைத்து உருண்டு புரண்டு புதுமைகள்
கண்டுணரும்   களியாட்டுப்  பருவம். கழிவறை
செல்வதையே    தள்ளி   வைத்துத்   தடுமாறியவோட்டம்.
ஆட்டம் பாட்டமே   தொழிலான  கூட்டானந்தம்.

 2-2-2018




201. ( 770 ) கருணைக் கடல்







கருணைக் கடல்

அன்பு, எளிமை, இறைபக்தி, ஆதரவு
வன்மையற்ற  சகிப்புத்  தன்மை  சகோதரத்துவம்
இன்பிக்கும் கருணையென்னும் கருவிகளைத்  தான்
அன்னை தெரேசா கையில் எடுத்தார்.
ஆன்மிக வழியில் வாழ்வைத் திருப்பினார்.

இன்னல் விலக்கியுலகில் கருணைக்  கடலானார்.
உன்னத   சேவையாக ஏழைகளை   தொழுநோயாளரையும் 
சின்ன வேறுபாடின்றி ஆதரித்து அரவணைத்தார்.
அன்னத்தையும்   இரந்து   சேகரித்துப்  பட்டினியாளருக்கீந்தார்.
சின்னமாம்  நோபல் பரிசையும் வென்றார்.

27-1-2018




செவ்வாய், 15 அக்டோபர், 2019

200. (769 ) சும்மாயிரு.







சும்மாயிரு.

ஏதற்கு இந்த அடக்குதல்!
ஐம்புலன்களை அடக்கி அமுக்குதல்
நல்ல நியாயம் அல்லவே!
இயற்கை உணர்வைக் கட்டினால்
அறிவுக் கும்மி என்னாவது!

வாழ்க்கை நந்தவனத்தில் ஒரு
வட்டத்தினுள் சும்மாயிருக்க முடியமா!
செவ்வகம் சதுரமாகவும் வாழ்வை 
அமைக்கலாமே! காற்று சும்மாவா 
வீசுகிறது! மனிதனுக்குச் சுதந்திரமில்லையா!

ஏக்கப் பள்ளங்கள் நிரவும்
பாசப் பேரொளி விரிந்தது.
பரவசமாய் மனிதனை இயக்கிடும்
நித்திலக் குவியல்கள் நேசம்.
நீந்திடும் மனிதன் தூண்டப்படுகிறான்.

அன்பு முகில்களில் குளிப்பவன்
சும்மாயிருக்க முடியாது! எழுவான்!
இன்பக் கிளர்ச்சி அப்படி!
சாதிப்பான் தனக்கும் சமூகத்திற்குமாய்
தேனீயாகு! தேடல்கள் தொடர்!

காற்றுப் புகும் புல்லாங்குழலாய்
முற்றம் கவரும் இசையிடு!
சும்மாயிரு என்பதை உடை!
இன்பச் சங்கீதம் உருவாக்கு!
மழையில் புல் முளைக்கும்!

இம் மாநிலத்துpல் எம்மை
அம்மா பிரசவித்தாள் நன்றி!
சும்மாயிருக்காது திறமையை விரிப்போம்.
அம்மா அப்பாவிற்கு நற்
பெருமை சேர்த்து வாழ்வோம்.

4-10-2016



ஞாயிறு, 13 அக்டோபர், 2019

199. (பெண்மை - 36) குவலயத்தில் குன்றிலிட்ட தீபமாகு!







குவலயத்தில் குன்றிலிட்ட தீபமாகு!

குத்துவிளக்கேற்று குலவிளக்கே உனக்கிது 
சத்தான ஆரம்பம் வலது கால் வைத்திடு.
குறைகள் குறைத்துக் குதூகலம் பெருக்கி
குடும்பத்தோடு  இணைந்து நிலையினைத் துலக்கு

பெண்ணில்லா  வீட்டின் பொருள் என்ன!
நன்குணர்ந்து பலர் விழித்தால் என்ன!
பூந்தளிர் வாடினால் நீர் ஊற்றுகிறார்
பூவையவள் வாடினால் என்ன செய்கிறார்!

பெண்ணே உன் எண்ணத்தின் திண்மையை
பெண்மையுள் ஏன் புதைத்து மௌனிக்கிறாய்
கண்களைத் திறந்திடு கண்ணே - உலகில்
ஆண்களும் சமயத்தில் உணர்ந்திடட்டும் இதை

உலை ஏற்றி உணவாக்க மட்டுமல்ல
உவகிற்கும் உண்மையாய் உன்னழகுக் கரங்கள்,
உன் அற்புத மூளையும் ஓயாது 
உதவட்டும் எண்ணத்தில் கொள் பெண்ணே!

நந்தவனக்  கிளியாய் அழகு மட்டும் சிந்தாது
நந்தாவிளக்காய் அறிவை  சிகரத்தில் ஏற்று
பிந்தாது நீ திருமகள் தானென்று காட்டு
' பெண்தானே ' எனும் நெஞ்சத்தில் தூசு அகற்று.

10-2-2003
(ரிஆர்ரி வானொலி பெண்கள் நேரத்திற்கு ரதி கோபாலசிங்கத்திற்கு அனுப்பி. 
வெளியானது)




வியாழன், 10 அக்டோபர், 2019

198. (768 ) தோல்வி என்பது முடிவல்ல.








தோல்வி என்பது முடிவல்ல.

முடிவற்ற முயற்சி முன்னேறும் சுழற்சி
விடிவற்ற பொழுது தருவது தளர்ச்சி
கடிதற்ற கருமம் கடைத்தேறாது வளர்ச்சி
விடிவினைக் காணு விடாத முயற்சியால்!

தொடக்கத்தின் ஊக்கம் வெற்றியின் முடிவு
குடங்காது வெற்றி குடைசாயாது தொடர்!
இடங்கொடு எப்போதும் உயர் சிந்தனைக்கே!
அடங்காத தாகம் எட்டிடும் சிகரம்

உருப்படும் வாழ்வில் தாழ்வே இல்லை
இருத்தலை நன்மையாக்கலில் இல்லை வீழ்வு
பெருமையாம் நானாகிய நதிமூலம் என்னைக்
கருவில் தாங்கிய தாயாகிய தேவதையே.


10-10-2019




புதன், 9 அக்டோபர், 2019

197 (767 ) கலகம் இல்லா உலகம்.






 கலகம் இல்லா உலகம்.

நடக்கும்  நிகழ்வுகளால்  நாட்டில்  வேதனைகள்
கடக்கும்  நிலை  உருவாகினால் நாம்
தடக்கி  வன்முறையில்  வீழ்வது  குறையும்.
முடங்கியது  மக்களின்  கருணை  மனவளம்!
கிடப்பில்  நற்குணங்கள்  துயில்வது  ஏன்!

அன்பைப்  பிணைத்து,  பண்போடு  பேசி
இன்முகமாய்  ஒருவரோடு  ஒருவர்  நலனில்
இன்னும்  அக்கறையோடு  உறவாடிக்  கலந்தால்
வன்முறையாளரும்  மாறிட வாய்ப்பு  உருவாகும்
நன்மையாம் கலகம்  இல்லா  உலகிதுவே!

தலகம்(தடாகம்)  நிறை  தாமரையான  பூமியில்
கலகமெனும்  குழப்பமான  பகை  உணர்வை
இலகுவாக   நீசர்  மூளைச்சலவையாக்கி  பிணக்கு
உலவச்  செய்கிறார்,  நிலவரம்  பின்னும்  
கலவரமாகி  நல்லவைகள்   விலகுவது  பெருமாபத்து.

சிறுமை பெருமையற்ற  ஒருமை  நிலையோடு
வறியவர்  தனவானற்ற  பறவைத்  தன்மையோடு
வல்லமைத்  தேனீயாய்  உழைத்து  உதவுவதோடு
வளமிகு  அன்பே  மதமாய்ச்  சமரின்றியின்புறுவோம்.
கலகமில்லா  உலகில்  திலகமாய்  பேராற்றலாயுலவுவோம். 

17-5-2017



196. (766 ) உறங்காத உள்ளம்







உறங்காத   உள்ளம்

கிறங்குவார்    நிதானமின்றி
நிறங்குணம்    மாறும்.
உறங்காத    உள்ளத்தால்  
இறங்கிடுமா  ஆரோக்கியம்.

ஏக்கம்,   வறுமை,   காதலீயும்
தாக்கத்தால்   பின்னலிடும்  உள்ளம்
ஊக்கத்தால்      தூக்கமிழக்கும்.
பூக்காதோ    யோகாவால்
சிக்கல்   சீராக!

குளிர் நீர்  நல்ல
குளிர்ச்சி தரும் உறங்காது
துளிர்த்திடும் நோக்கம்   நிறைவேற
துளிர்த்திடும்  உள்ளம்   உறங்காது.

6-5-2017





195. (765 ) முற்றுப் புள்ளி








முற்றுப் புள்ளி 

முயற்சிக்கு வேண்டாம் முற்றுப் புள்ளி.
முயற்சிக்காவிடில் நீயொரு வேலைக் கள்ளி.
முயற்கொம்பாம் நேர்மைக்கு முற்றுப் பள்ளி
முயற்சி ஒரு போதும் வேண்டாம்.

பெண்ணை மதிக்காதோரை தூர தள்ளி
உண்மை எடுத்தியம்பு அறிவோடு அள்ளி.
கண் திறக்கச் சென்றிடு பள்ளி
எண் எழுத்திற்கில்லை முற்றுப் புள்ளி.

நல்ல உறவு நட்சத்திரப் புள்ளி
இல்லை இதற்கொரு முற்றுப் புள்ளி.
இலங்கையின் இன மோதலைத் தள்ளி
எவரிடுவார் இதற்கொரு முற்றுப் புள்ளி.

அன்பு, காதல், அறம், தர்மம்
என்றும் நிலைத்திட முற்றுப் புள்ளி
என்பதே வேண்டாமிது ஆறுதல் புள்ளி.
நன்மையற்றவைக்கு வேண்டும் முற்றும் புள்ளி.

நடுவர்கள் பாரபட்சம், கோணல் நீதி
கொடுமை ஊழலிற்கிடுவோம் முற்றுப் புள்ளி.
இடுக்கண்ணான பாலியற் கொடுமைக்கு அவசியம்
இடுவோம் கட்டாய முற்றுப் புள்ளி.

பால பாடம்,  இளமைக் கோலக்
காலம் மாறியிட்டது முற்றுப் புள்ளி.
சீலமுடை வயோதிபம் தொடக்கப் புள்ளி.
ஆலமர வாழ்வினிறுதி முற்றுப் புள்ளி.

அக்டோபர் மாதம் 2016




செவ்வாய், 8 அக்டோபர், 2019

194. (764 ) நாணயஙகள்.








நாணயங்கள்.

நாணயம் இல்லா வாழ்வு இன்மை (பூச்சியம்)
நாணயத்திற்கு (மனச்சாட்சி) பயந்து வாழ்கிறான் மனிதன்.
நாணயம் (நேர்மை) இன்றேல் நல்வாழ்வு ஏது!
பெறுமானம் தன்னுள் அடக்கிய தனியுரிமை.

ஏமாற்றிட ஏதுவான நாணயமற்ற கீழ்தரம்
ஏமாந்து போகவும் முதற் காரணி.
ஏதுமொரு நாணயம் கொண்டு பிறப்புமில்லை.
எல்லோரும் பேசும் நாணயத்தையெடுத்துப் போவதுமில்லை.

பணயமாகப் பலர் வாழ்வில் விளையாடும்
நாணயம் நாநயம் இல்லாததால் - மேலும்
கண்ணியம் தொலைத்துப் புண்ணியமும் அழிக்கும்
மனிதனின் நாணயம் கெடுக்கும் நாணயம்.

நாணயத்தின் கையில் மனிதன், மானம்
நாணமழித்துக் குணம் பேதலித்து மாற்றுகிறது.
மனிதம் மதிப்பவன் நாணயத்தின் கட்டில்
மேன்மையான நிர்வாகத்தில் நயத்தோடு உயருகிறான்.

பூவா தலையா போட்டுப் பார்க்க
வாகான தலையாரி நிலையேற்கும் நீதிமான்.
நாணயம் இல்லையேல் கோணமும் அசையாது.
நாணயமற்றவன் எந்த வகையிலும் வீணனே!

பொன், வெள்ளி செம்பாலுமானது இது.
மன்பதை மனமும் தரத்தினாலிதே பெறுமதியே!
மன்னர்களின் பரிசாக பொற்காசு ஆனது.
ஆகழ்வாராய்சியில் நல்ல தகவல்கள் தருகிறது

22-5-2017




193. (763 ) நாகரிகம் உட்புகுந்த மானிடம்.









நாகரிகம்  உட்புகுந்த மானிடம்.

இலை    உதிர்ந்த    காலம்    போன்று 
கலைமிகு    பழைய    நகர    ஒழுக்கம்
தலை  குப்புறச்  சாய்கிறது.  மேலும்
நிலையுடைய  துளசி  மாடமும்     மறைகிறது.

அதி காலை,  மாலை  இறை  வணக்கம், 
ஆலய  தரிசனம்  அருகி  வெறும்
அற்ப  பகட்டு   ஆடையலங்கார    நடை
அரங்கமாக   ஆலயம்  அவலட்சணம்  ஆகிறது.

வேக  உணவுக்    கலாச்சாரம்  வியாபித்து
கேள்வரகு,    கம்பு,  தினையாம்  சம்பத்துகள்
காணாமற்    போயுடல்   நோய்களின்  சேமிப்புக்
கிடங்காக   மாறியது  பெரும்  தவிப்பு.

கணனி  முன்  அமர்வும்  கைபேசித்
தொண  தொணப்புமாக  புத்தக  வாசிப்பு   மயானம்
ஏகுதல்   கண்கூடு,  மழலையும்    இன்று
கைபேசி   அழுத்தும் கண்ணிறைந்த  காட்சி.

உணவுகங்களில்    உணவுண்டு   ஆரோக்கியம்  அழிகிறது.
பிள்ளைகளையும்  அதே  வழியில்   இழுத்துச்
செல்லும்   கொடிய   பழக்கம்   தீவிர
நோயாகிப்  பற்றும்  நாகரிகமுட்புகுந்த    மானிடமின்றையவுலகு. 

வாழ்வு  நெறி,  குறியற்ற    நோக்கில்
தாழ்ந்திட   பழைமைகளின்   அழிவு  காரணம். 
ஆழ்ந்த  இறை   பக்தி   மூலாதாரத்தின்
அடிப்படையில்   பழைமையைக்  கட்டி   எழுப்பலாம்.

5-6-2017





428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...