வியாழன், 27 அக்டோபர், 2022

396. (929) காத்திடுங்கள் பழமையை

 



       




காத்திடுங்கள் பழமையை


மொழி இனத்தால் விளைந்த மூலம்

வழி வகுத்தது புலம்பெயர் கோலம்

பொழிலெனப் பூத்த எம்தமிழ்க் கோலங்கள்

சுழிமிகு நவீன மேற்குக் கோலங்களால்

செழிப்பிழக்கும் செந்தமிழ் நாளங்கள்

விழித்துக் காக்கலாமோ நேரகாலத்தில்

00

பழிக்காது பயிலுங்கள் தாய்மொழி மூலங்கள் 

மழிக்காது காத்திடுங்கள் தமிழ்ச் சொற்கோலங்கள்

அழிவுறும் எம் ஆதி மரபுக்கோலங்கள்

இழிவதைத் தடுத்தல் உயரறிவுக் கோலங்கள்

எழிலாம் தாய்நிலை உறவுப் பாலத்தால்

விழிப்புடன் காக்கலாமெம் பழமைக்கோலங்கள்.

00

-27-10-2022 


செவ்வாய், 18 அக்டோபர், 2022

395. ( 928) (இல்லை ஒரு) எல்லை

 


      




      (இல்லை ஒரு) எல்லை

00


சுதந்திரம்  உரிமை உணர்வுக்கு 

எல்லை தேவை.

பிறரை நோகடித்துக் காயமாக்குதல்

துன்பப்படுத்தல் எல்லை தாண்டிய பயங்கரவாதம்

மன ஆற்றலுக்கு இல்லை எல்லை

உடல் வலிமைக்கு உண்டு எல்லை

பொறாமை கோபம் பேராசை  அடுத்தவர் 

துன்பத்தில் இன்பம் மன எல்லைகளைக் கட்டுப்படுத்தாது

00

உறவுகளுக்கு எல்லையுண்டு பாசத்தின் 

எல்லை மீறலால் துன்பங்கள் பெருகும்.

எழுத்திற்கு எல்லை ஏது!

கவிதைக்கும் இல்லை எல்லை

''கற்றது கைமண்ணளவு கல்லாதது 

உலகளவு '' கல்விக்கில்லை எல்லை

வயதிற்கு எல்லை மரணம்  எதையும்

எல்லைக்குள் வைத்திருப்பது எல்லையற்ற நிம்மதி.

00

உறவுகளுக்கு எல்லை போடக்கூடாது அதுவரை 

இதுவரை செல்லலாமென்பது மாயத்தன்மை

நாகரீகம் சமூகப் பார்வையுமொரு எல்லை

தேவையற்ற இறுக்கம் தரும் அன்பைப் 

பாழ்படுத்தாத எல்லை இனிமை தரும்.

ஆசை இலட்சியத்திற்கு எல்லையிடுதல் கூடாது.

பிறருடைய எல்லைக்கோட்டை மிதிக்காத வரை

எல்லையற்ற சுதந்திரம் தனிவிதி சமைக்கும்.

00

19-10-2022



சனி, 15 அக்டோபர், 2022

394. ( 927_ உண்மையின் சுகம்

 


    






       உண்மையின் சுகம்



குடும்ப அமைதி அடிநாதமாய் 

குடியிருப்பு அமைதியிலிதம் பெறுதல்

குருவிகளின் இசையிலும் குதூகலமடைதல்

முகில்களில் ஓரோவியம் தீட்டல்

இவைகள் தலையசைப்பிலும் ஓரிதமான

இசைத்தாளமிணைய இரசித்தல்  இன்பம்

n0

தெளிந்த நீரோடைப் பளிங்கு நீரில்

குளிரக் கால்நனைக்கும் அமைதியும்

களிப்புமென்றும் ஆரத்தி யெடுக்கட்டும்.

வசந்தம் குடிகொள்ளும் சூழலில்

வன்முறை நோய் மொழியாளருக்கு

சின்ன வரவேற்பும் வாசலுமில்லை.

00

இன்னமுத அருளுடைய இதயப்பூங்காவில்

பின்னிய பாசப்பூக்கள் உணர்வுகளாக

இன்புநிலாப் பின்னணியிலாடி அசையும்

சின்ன அசைவிலும் சிலிர்க்க வைக்கும்

என்வீட்டுச் சுதந்திரக் கொடியின்

உன்னத அர்த்தம் உண்மையின் சுகம்.

00

 16-10-2022


428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...