வெள்ளி, 22 மார்ச், 2019

59. (641) சுயஆளுமைச் சிதறலோ!..








சுயஆளுமைச் சிதறலோ!...

தேன் மொழிகள் தேய
வீண் மொழிகள் பாய
ஏன் இத்தனை வன்மம்!
ஏன் நெஞ்சில் கனமோ!

அடிப்பார்கள் தன்னை என்று
கடிக்கிறது பாம்பு என்பார்.
இடிக்கிறதே இந்தச் செயல்கள்
அடித்தாரோ எவரோ! யாரோ!

கேள்விகள் பதிலைக் காணாது
கேள்வியைக் கேள்வியால் திருப்புவது
வாள் வீச்சென்றோ! - மகா
வேள்வி என்றோ ஆகுமோ!

கிட்டினாலும் கொட்டிக் கொட்டிஇ
பட்டு மொழியும் பட்டு
கெட்ட கொடுமைத் தோற்றம்
பட்ட சூட்டுக் களைப்போ!

சுட்டுச் சுட்டு மனிதர்
கிட்ட அண்டக் கூடாத
காட்டுக் குணம் ஏனோ!
எட்டியதோ சுயஆளுமைச் சிதறல்!


2-29-2012




58. (640) திருடன்








உழைப்பின் பெருமை அறியாதவன்இ
உழைக்க வழி தெரியாதவன்.
உருப்படாத ஒரு சோம்பேறி.
உலகை நிதம் ஏமாற்றுபவன்.
ஊழைச் சதை வளர்ப்பவன்
உருவாகிறான் ஒரு திருடனாக.

இதயம் தொலைத்த ஓர்
இரும்பு மனித உருவம்.
இறைச்சியாகப் பிறர் சொத்தை
இரையாக்கும் ஒரு வல்லூறு.
இழக்கின்ற பிறர் நிலையை
இணைத்தும் பார்ர்க்காத அரக்கன்.

உயிர்இ உணர்வின் பெறுமதி
உணராத ஒரு மரக்கட்டை.
உயிரையும் பொருளுக்காய் எடுக்கும்
உலக்கைஇ மனிதக் கொலைகாரன்
ஊரில் உலாவும் திருடன்.
உயிர் கொல்லும் மகாபாவி.


 5-4-2010



57. (639) தமிழனின் கலைத்திறனைக் கண்டு








தமிழனின் கலைத்திறனைக் கண்டு தரணியும் வியந்ததே.

விஞ்சுமாயிரமாண்டுத் தமிழர் கலைத்திறன்
நெஞ்சுயரப் பறைசாற்றுமுலகப் பாரம்பரிய சின்னம்.
தஞ்சைப் பிரகதீசுவரர், தஞ்சைப் பெருவுடையார்
தஞ்சாவூரின் வரலாற்றுப் பெருமைச் சிவனாலயம்.
மிஞ்சுமளப்பரிய ஏழாண்டுச் சாதனை. தலைமைச் சிற்பி
குஞ்சரமல்ல ராசராச ராம பெருந்தச்சன்.
சோழராட்சியின் பொற்கால உருவாக்கம்.
ஆயிரத்து நான்கில் கட்டுமானமாரம்பம்.

புவியதிர்வால் பாதிப்பற்ற முறையாகக், கோள்களின்
கதிர்வீச்சு மையத்தில் குவியுமமைப்புடைத்து.
புறநாட்டுப் படையெடுப்பாளர்களாலும் தகர்க்கவியலாத
முழுமையான கருங்கல்லிலுருவாக்கம். கற்பக்கிரகத்தின்
மேலோங்கிய விமானம் நூற்றுத் தொண்ணூறு
அடியுயரத் தனித்துவ மெருகுடையது.
தட்சிண மேருவென்று இராசராசனிதையழைத்தான்.
கட்டிடக்கலையின் கி.பி 1010ன் சவாலிது.

இருபது தொன்னுடையவொரே கல்லினால்
இரண்டாவது பெரிய நந்தியுருவமமைந்தது.
முதலாம் இராசராசசோழன் அருள்மொழிவர்மனின்
பதிலான கனவின் ஆணையிது.
முதிய எகிப்தியக் கோபுரக் கட்டுமான விதியுடையது.
சித்திர, சிற்ப, நடனக்கலையின் பிரதிபலிப்பு.
ஓன்றரை இலட்சம் தமிழ் கல்வெட்டுகளுள்ளதாமிங்கு.
130,000 தொன் கற்களாலுருவாகிய கோயில்.

நுண்ணிய கட்டடிக்கலையினெடுத்துக்காட்டு
இருநூற்றுப்பதினாறு அடியுயரக் கோவில் விமானமன்று
பொன் பூசிய தகடாலானது. 1311ல் 
மாலிக்கபூரின் படையெடுப்பில் சூறையாடப்பட்டது.

15-12-2017   




புதன், 20 மார்ச், 2019

56. (638). தென்றல் புயலாய் ஆனதேன்!







தென்றல் புயலாய் ஆனதேன்!


இனங்கள் பல இணைந்த டென்மார்க்கில்
இணைவாக்கம் இயங்கும்  மார்க்கத்தில்
இலங்கையர் அமைதி காப்போர்
இலங்கும் கருத்து பலர் ஏற்பார்
சங்கதி பயில நாம் பொதுவில்
சங்கடமற்றவர் பிறர் நோக்கில்.

நாட்டிலும் அகல்விளக்கு நாம்
கூட்டுப் புழுவாய் அமைதி காத்தோம்.
ஓங்கியது அரச அடக்குமுறை
தூங்காத சர்வாதிகார ஆட்சிமுறை
நீங்காது ஓதிய புத்தபிக்கு உரை
பலர் நம்பிக்கை முனைக்கரை.

பொங்கித் தகர்ந்தது இறுதிமுறை
தங்கிடத் தீர்மானி;த்த அடக்குமுறையை
கொன்றிட எம்மவர் தட்டினார் போர்ப்பறை
வென்றிடச் சென்றனர் போர்வரை
இறுதிவரை சுதந்திரம் சிறை.
குருதி ஈரம் போராளி  கல்லறை.

சங்கத் தமிழ்த் தென்றல் சூல்கொண்டது.
கொன்றிடும் புயலாய் மாறியது
அன்றில் பயந்து பறந்தது.
கன்றிலிருந்து கப்பலீறாய்
சுழன்று  புரட்டியடிக்கும் புயலாய்
நின்றவிடம் மாறியது தலைகீழாய்.

குமிண்சிரிப்பும் குலுங்கும் அழுகையும்
கொட்டும் அழுகையும் கொழுத்தும் வெயிலும்
கொள்ளையிடும் தென்றலும் குழப்பும் புயலும்
சகடவாழ்வு சந்திக்கும் ஆரமன்றோ
மகுடமிடும் வாழ்வின் மறைபொருளன்றோ!
விகடம் நிறை வாழ்வின் விசேடங்களன்றோ!

20-1-2003.




செவ்வாய், 19 மார்ச், 2019

55 . பெண்மை (பாமாலிகை பெண்மை- 29)









பெண்மை

பெண்மை சிறப்பு!
பெண்மை தெய்வீகம்!
கண்கள் பெண்களென
மண்ணில் வாழும்; 
பெண்மையைப் போற்றி நிதம்
விண்ணதிரக் கவி பாடினேன்.

வண்ணப் பெண்மையின் 
தன்மை  மாறலாமா!
கண் பட்டதோவெனும்
எண்ணத் தோற்றம்.
பெண்மையில் கருமை!
தண்மைப் பெண்மை 
எண்ணத்தில்  வழுக்கலாமா!
என்னவிது அருவருப்பு!

உண்மையெது பொய்யெது!
கண்ணியம் மறந்ததா
பெண் சுயநலம் பெருகியதா!
உண்மை நடமாட்டம் 
பெண்மைக்குப் பெருமையெனும் 
வண்ண வரிகள்

வானில் மறைந்ததா!
என்ன பெண்மையெனும்
எண்ணக் குமிழிகள்
என்னைச் சூழ்ந்து
கண்ணை மூடுகிறது.

28-12-2002

வேறு

மரிப்பதில்லை தாய்மை மனம்.

பத்து மாதம் சுமந்து
பத்திரமாகக் காத்தவளிற்கு இது
அத்தனை பாரமே அல்ல.
சித்தம் இனிக்கக் காலமும்
பத்திரமாய்  மனதில் காப்பவள்
உத்தமத் தாய்!   பிள்ளைகள் 
சிரித்தால்  அவளும் சிரிப்பாள்!
மரிப்பதில்லை தாய்மை மனம்!


31-5-2016





54. (637) போய் வா இரண்டாயிரத்திரண்டே!









போய் வா இரண்டாயிரத்திரண்டே!

நட்சத்திர மின்னல்களின் ஜொலிப்புகளில்
நடுமையம் கொண்ட இரண்டாயிரத்திரண்டே
உன் இராசாங்கம் முடிகிறது போய்வா
உருண்ட காலத்தின் உபயோகம்
இருண்ட காலமல்ல நம் யோகம்.

புரட்சிஆண்டே உன் ஆளுகை
சமஷ்டி கிடைக்குமென்ற சைகை
திருஷ்டியின்றிப் போய் வாவுன்  செய்கை
திரட்டி மொழிவது மனதிலுவகை
ஆண்டிறுதி விடுமுறையுமின்பச் சிறையே

வித்தகன் வியூகள் சகோதரர் செல்வா
சத்தினைக் குறைத்த மாபெருமிழப்பு.
சோதனை தந்த பெரும் குறை.
தொலைக் காட்சிகள் மீள்வரவு
கலைக்காட்சிகள் பெரும் குவிவு.

தீண்டும் நவரச வேள்வியலை
ஆண்டுகளின் அனுபவ அலை.
நட்சத்திர ஜொலிப்புகளும் வால்
நட்சத்திர வீழ்ச்சிகளும் அனுபவித்தோம்.
இரண்டாயிரத்து இரண்டே போய்வா!

3-12-2002




53 (636) தீப ஒளி தந்திடட்டும்







தீப ஒளி தந்திடட்டும்


புத்தாடை பெறுவாம்
பூவாணம் விடுவோம்
பித்தாகப் பட்டாசு
தித்திக்கும் பட்சணங்கள்
மொத்தமாய் ஏங்கியது.
சிறுவயதுத் தீபாவளியது.

பாரெங்கும் பண்டிகைக் கோலம்
பரவசமான பெருநாள் கோலம்
பண்டிகை நாளானாலும்தொழிலுக்கு
வண்டியில் ஏகும் சங்கடமான 
புலம்பெயத் தீபாவளி நாள்

மத்தாப்பு சொரிந்து சொத்தாகும்
மனதிலொளி மகிழ்வைத் தந்திடட்டும்
நயனங்கள் ஒளிரும் நல்வாழ்த்து
சேரட்டும்! திருவிழாக் காட்டிடும் 
தீபாவளி நல் வாழ்த்துகள்.
உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்!

5-11-2002  (ரிஆர்ரி வானொலியில் சகோதரார் லோகதாஸ் நிகழ்வில் நான் வாசித்த கவிதை)

வேறு

தீப   ஆவளி

தீவினை  அழித்து நன்மை செய்யென்று
தீதறக் காட்டிய வழி தானோ
தீப வரிசை இட்டு மகிழ்வது!

தீஞ்சுவைப் பலகாரம், புத்தாடையோடு
தீங்கனி மழலைகள் ஆனந்திக்க
தீக்கதி தமிழனுக்கு  வரமுதல்
தீர்க்கமாய் ஆனந்தித்தோம். இன்று
தீர்வின் வழியோடு  தீபாவளி ஆகிறது.

நண்பர்கள் உறவுகள் அனைவருக்;கும்
நனி சிறந்த தீபாவளி வாழ்த்துகள்

 26-10-2019
















52. (635) புத்தொளிர்வாயா புத்தாண்டே!







புத்தொளிர்வாயா புத்தாண்டே!


காலம் போரில் அழிந்துவிட்டது
ஞாலம் முழுதும் அறிந்துவிட்டது.
கோலம் திருத்த முனைந்துவிட்டது.
பாலம் அமைக்கத் தொடங்கிவிட்டது.

எத்திசையும் புகழ் ஓங்க
தித்திக்கும் நம்நாடு ஆங்கே
சொத்தாக எமக்காகிட  பாங்காய்
புத்தொளிர்வாயா புத்தாண்டே

புலம் பெயர்ந்தோர் துன்பங்கள்
தலம் பெயரட்டும். இன்பங்கள்
களம்  நிலைக்கட்டும். சொந்தங்கள்
உளம் மகிழ   பொங்கட்டும் மங்களம்.

செத்தொழிந்த உயிர்கள் போதும்
மத்தாகிய தமிழர் நிலையும் போதும்
எத்திசையும் பட்டொளிர்வாயா புத்தாண்டே
புத்தொளிர்வாயா புத்தாண்டே!


20.12.2002





ஞாயிறு, 17 மார்ச், 2019

51 (634) வளர்ச்சி வரம். - மாற்றங்கள்






வளர்ச்சி வரம்.


வளர்ச்சி வரம்!


வரமெனும் ஒளியை  வளர்ச்சியை
விரலாலும் கண்கள் சாத்தினும்
பரமானாலும் அழிக்க முடியாது.
தரவின் விதிப்படியே நடக்கும்

மனிதப்பிறவியும் பறவைகள் பறப்பதுவாக
புனித மழலை  எழுவதுவாக
இனிய மாற்றங்கள் கசப்புடனும்
சனியொட்டுவதாக உலகில் நடக்கும்.

பலமான புறக்கணிப்பும் அலட்சியமும்
வலமிடமென வதைத்தாலும் உருகிடும்
வெல்லும் தன்மையன.
தளர்த்த யாரால் முடியும்!


 17-3-2019



மாற்றங்கள்

மாற்றங்கள் மாறி மாறி வரும் 
சீற்றங்களாயும்  சிரிப்பாகவும்
ஆற்றலாயும் அமைதியாயும்
ஏற்றங்களாயும் இறக்கங்களாயுமே

குழந்தை , பிள்ளை , குமரர்
கணவன், அப்பா, தாத்தாவாக
கடமை, சவால், பயமாக
காதலாக, வானவில்லாக வாழ்வு.

பயணத்தால் மாற்றம் இனிமையாக
பயங்கரத் தொற்று கொரோனாவாகிப் 
பாழாக்கும் மாற்றம் கொடுமை
பாதிப்பின்  குறையையெங்கு  கூறுவது!

மாற்றங்கள் சிலவற்றை மூளையால்
தேற்றலாம், தன்னை மாற்றுதலாலும்.
மாற்றங்களாக வாழ்வில் உன்னதம்.
ஏற்றமான நாற்பருவ காலங்கள்

சிந்தனைக்  கூட்டுறவு சமூகத்தில்
சிறந்த மாற்றம் உருவாக்கும்.
நிறைந்த  அன்புப் பரிமாற்றம்
தடுமாற்றம் ஏமாற்றம் தவிர்க்கும்.

எதிர்த்தலும் ஏற்றலும் தேடலாலும்
புதியனவாகக்,  கற்பலகையின் படிப்பு
கணனியிலாக,  கண்களைப் பழுதாக்கும்
தொழில் நுட்பமாற்றம். இது மாறாதது.

அறிவாயுதத்தால்  உலகை மாற்றலாம்
ஆயுளை  புன்னகைத்து நேசிப்பருடன்
ஆனந்தியுங்கள்  மாற்றம் உருவாகும்.
இயற்கை,யான,  தன்னிச்சையான நிகழ்வே வாழ்வு.

எதிர்த்தல் துன்பமே இயல்பாக விடுங்கள்.
உங்களை வெளிப்படுத்துங்கள் மாற்றம் தானாயுருவாகும்.
உலகிற்கேற்ற வகையான கருத்துப்
பலம் உன்னை உயர்த்தும்

 12-2-2021




50 (633) .அவ கீர்த்தியுலகு








அவ கீர்த்தியுலகு

நரகக் கோட்டைகளின் நாற்றம்
அரக்கர் அரற்றல்களின் விநோதங்கள்
அரங்கம் அரிவாள் இடுப்புப்பட்டி
அரட்டு மிரட்டல் அரசாங்கம்
அரசியல் மர்மப் புகைகள்
பரவலாகக் கொலைத்தபடி வாழ்வு.

உணர்தலற்ற வன்மைப் புணர்வு
வணர்தலற்ற (வளைதலற்ற) ஊமைப் படபடப்பு
திணறும் துயரக் கதறல்கள்
பிணக்குகள் இருட்டு இரகசியங்கள்
தணலாக நான்கு சுவரிடை
தகதகத்து முனகிப் புகைகிறது.

அரக்கரின் பூவுலகு இது
அண்ணன் தம்பி துணையானவள்
அங்ஙனம் கர்ப்பத்தடை மாத்திரைகளோடின்று
அரவுரியான காமம் இளமையோடழியும்
அஃதுணராது இருபாலாரும் இயக்கும்
அவலட்சணம் அல்லோலகல்லோல உலகு.


டென்மார்க் 14-3-2019







புதன், 13 மார்ச், 2019

49. (632) உலகம் நம் கையில் -1 -2









உலகம் நம் கையில் -1

(தலகம் - தடாகம் 
செலகம் - மல்லிகை)

வேடங்கள், பொய்மை, புரட்டுகளை அழியுங்கள்
சூடமாம் அறிவை உள்ளெடுங்கள் பரப்புங்கள்.
பாடங்களை எல்லோர் மனதிலும் ஏற்றுங்கள்.
மூடத்தனம் அவநம்பிக்கைகள் முற்றாக துடையுங்கள்.
தலகமாம் மனதில் தூய எண்ணங்களை
செலகமாய் அனைவரிடத்தும் ஓயாது தூவுங்கள்..
திலகமென வாழ்வைத் திண்ணமாய் அமைக்கலாம்.
கலகமற்ற உலகம் நம் கையில்.

ஆத்திசூடி, ஒளவை மொழி திருக்குறளாம்
ஆராதிக்கும் நல்வழி அறிவு நூல்களையும்
ஆரம்ப அரிச்சுவடி வகுப்பில் சிறுவருக்கும்
ஆசையாகக் கற்பித்தல் அதிக அவசியம்.
அவ்வழி வந்த நாமிங்கு இன்றும்
செவ்வழி செல்லுதலொரு நல்ல உதாரணம்.
சிறுவயது உரைகள் பசுமரத்தாணி இதயத்தில்.
சிறுமையல்ல சீருலகு நம் கையில்.

பண்பாடு பழக்கமெனும் அரிய நமது
மண் மணக்கும் வழக்குகளை விட்டொழித்து
கண்ணெனும் மூத்தோரை மேல் நாட்டினது
கலாச்சாரக் காதலில் எமை மறந்து
பெயர் கூறி அழைக்கும் பீடைத்தனங்கள்
பெயர்த்தல் பெற்றவர் கடனென இயங்குங்கள்.
முறை சொல்லிப் பண்பாக அழைத்தால்
குறையற்ற பண்பாட்டுலகம் நம் கையில்.


5-2-2016.

உலகம் நம் கையில்  2  

நாடுகளை ஆக்கிரமித்து ஆண்டார் அன்று
கோடிட்ட பொருளாதாரத் தடையாட்சி இன்று.
மதம், இன, மொழி வெறியென்றும்
விதவிதமாய் வன்முறைகள் ஆண் பெண்ணென்றும்.
சூதுடை சதுரங்கப் பொய்மைகள் அழித்தால்,
சூடமாய் அறிவொளி உலகத்தில் ஒளிர்ந்தால்,
வஞ்சக எண்ணங்கள் மாறி மறைந்தால் 
நஞ்சில்லா உலகம் நம் கையில்.

ஆணும் பெண்ணுமாயாக இரு ஜாதி
ஆணவத்தால் ஆக்கினார் பல ஜாதி
மதம் கொண்டு ஆடும் மூடரும்
சதமென்று மனிதநேயம் உணர்ந்து நடந்தால் 
குண்டென்ன கூச்சலென்ன உலகில் நீதி
கண்டு வாழ்ந்திடல் நல்ல சேதி.
ஒருமைப்பட்டு அனைவரும் இன்பமாய் வாழ்ந்தால்
அருமை உலகம் நம் கையில்.

அறவழியேக சிறாருக்கு அறிவுடை திருக்குறளாம்
அறிவு நூல்கள் புகட்டலாம். செவ்வையாம்
நல்ல தொழிற் கல்வி பெருக்கலாம்.
கொல்லும் வேலையின்மை பசிப்பிணி அழிய
பாராளும் தடைகள் விலகும், இயற்கையை
ஆராதிக்க விவசாயம் பெருகும். பொருளாதாரம்
நிறையும். சுவர்க்கம் கீழிறங்கி வரும்.
குறையற்ற உலகம் நம் கையில்.

5-2-2016.




48. (631) .வன்கொடுமைகளால் நிலம் நடுங்கும் ஊமைநிலை









வன்கொடுமைகளால் நிலம் நடுங்கும் ஊமைநிலை

வக்கிர புத்திக்காரன் அது

அக்கிரகாரமானாலும் அகில உலகமானாலும்

சக்கரமாக மனதைச் சுழலவிடுபவன்

அக்கறையற்ற மனக்கட்டுப்பாடு அற்றவன்

உக்கிரமான காமுகனும் ஆகிறான்.

காம அக்கினி (காமத்தீ) மிகுந்தவன்

காமதூரன்,   காமியர்,  காமி.

காமப்பேயாம் காமுகனின் காமவிடாய்

காட்டுத் தீ சூறாவளியாகும்.

காமநோய் காமப்பற்று காமப்பித்தாம்.

காமம் உடல் சார்ந்த

காட்டுத்தர்பார் காட்டுத்தனம்.

காதல் உளம் சார்ந்தது.

காமம் இருமனம் ஒத்தாலுயர்வு!

தீமுகமான பண்பாட்டுப் புரிதலற்றது.


பா வானதி வேதா. இலங்காதிலகம் 
டென்மார்க் 12-3-2019



47. (630) .கைகளுக்குள் சிக்காத காற்று









கைகளுக்குள் சிக்காத காற்று

கைகூட   முடியாத    எண்ணம்
கைகள் பிணையாத   திருமணங்கள்
மைவிழிக்குள்  அடங்காத  ஆசை
கைவிலங்கு  போடாத  ஊற்று
கைகளுக்குள்  சிக்காத காற்று.

குட்டிப்    பேரன்  குடுகுடுவென
குமிழி    போல    உருண்டோடி
குறும்பு  செய்து  அலைக்கழிக்கும்
குட்டிக்  கண்ணன்  எம்
கைகளுக்குள்   சிக்காத  காற்றே

எத்தனை   ஆசைகள்   மொழிந்தாலும்
மொத்தமாய்   மரக்கட்டையாக    இருந்து
சுத்தமான    உணர்வுகளை    அடக்கி
ஏனோ  இப்படி  நீயிருக்கிறாய்
கைகளுக்குள்   சிக்காத  காற்றாக....

 21-7-2018




செவ்வாய், 12 மார்ச், 2019

46. (629) தேவதையின் சிறகு







தேவதையின் சிறகு

தேனருவி எண்ணங்கள் தினம்
தேனாய் இனிக்கஇ காதல்
தேவன் உனைக் கண்டதும்
தேவரகசியம் கூறிட மனம்
தேடுது உன்னை ஆசையாய்.

தேவதை என் சிறகெடுத்து
தேவரஞ்சனி இராகம் இணைத்து
தேடுகிறேன் இந்த ஊஞ்சலிலே
தேவதையாய்ச் சிறகெடுத்து ஆடுகிறேன்.
தேனிலாவிவ் இன்பநிலாவாக வருவானா!

தேடும் காதல் கனிந்தால்
வாடும் மனம் சிலிர்க்கும்.
ஓடும் சிறகடிக்கும் வானுலா.
நாடும் எண்ணங்கள் வானவில்லாகி
பாடும் இனிய கானம். 

ஊஞ்சல் ஆடும் தோழியரும்
ஊக்கப் பாடலால் இணைந்து
ஊர்க் கதைகள் பேசுவர்.
ஊதற் காற்றும் சிற்றாடையுடன்
ஊடாடி மகிழுது பார்.

ஊமைப் பெண் கூட
ஊதும் காற்றை உல்லாசமாய் 
அனுபவிப்பாள். சிறகு விரித்து 
தேவதைகள் மகிழ்ந்து காதலோடு
ஆடுவோமே ஒன்றாக. ஆனந்தமாய் ! 

தேவதையின் சிறகு விரித்து
காதல் கவிவனம் அமைக்கட்டும்.!

6-6-2018




வெள்ளி, 8 மார்ச், 2019

45. வழிமேல் விழி வைத்து ( பாமாலிகை பெண்மை- 28)







வழிமேல் விழி வைத்து


அளிகள் மொய்க்கும் பூங்காவில்
ஒளிவீசும் கண்களோடு தமிழ்
மொழியால் கவி படைத்து
வழி மேல் விழிவைத்து
களிப்போடு காத்திருப்பாள்
காதலன் வருகைக்காய்.

அன்பு மொழி கேட்க
ஆசை விழி சோர
வழி மேல் விழிவைத்து
வனப்போடு காத்திருப்பாள்இ
வாசலில் பழியாகத் தன்
வாழ்க்கைத் துணைக்காக

பிஞ்சுக் கால்கள் வெயிலில்
பிள்ளை பிந்துகிறானே பள்ளியால்
பாசத்தில் நொந்து காத்திருப்பாள்
வாரிசுகள் குடும்பத்தைத் துளிபாசமிழக்காமல்
வரவேற்கக் காத்திருப்பாள்
வரப்போகும் திருநாளில்

வயதான துணை அவன் 
வலிமையாய் வீடு வர
வழியோடு விழியாக வழிபட்டு
வாழ்வெல்லாம் காத்திருந்து
பிறருக்காய் வாழும் அவள்
பெண்மை தாய்மை.

18-8-2002
ரிஆர்ரி தமிழ் அலை வானொலியில்



44 மாதுரியப் பெண்ணே.. (பாமாலிகை பெண்மை 27)









மாதுரியப் பெண்ணே....

பெண் குழந்தை பிறந்தால் அடுப்பில் தட்டுவார்
ஆண் கழந்தை பிறந்தால் கூரையில் தட்டுவார்.
சமையலறையில் உணவை விதவிதமாக
சமைத்திடுவாய் பெண்ணேயென அருமையாக
சமைத்து வைத்தனரொரு வட்டச்சிறை
சகித்துக் கொண்டவளுக்கு ஆதிக்கச்சிறை
முன்னாள் வரைகோடுகள் பெண்ணுக்காயிவை
இன்னாளில் நரை கண்டுள்ளவை.

கடலில் வீழ்ந்த மழைத்துளியல்ல
காணாமற் போகும் பெண்ணல்லவள்
பென்னம்பெரு விருட்சம் ஒவ்வொரு
சின்னஞ்சிறு வனிதப் பெண்மனமும்
ஊற்றும் மதுச்சாறவன் நாடியிலுள்ளாகி
தோற்றும் சாத்தான் வாழ்வைப்பிளக்க
நேற்றில்லாத மாற்றம் நுண்ணொளிக்
கீற்றாக ஆணுள்ளத்தில் நழையட்டும்.

மாற்றம் காலம் கொண்டிட
ஏற்றம் ஒளி விரிக்க
வெற்றியடையும் ஆணின் பின்புறம்
தொற்றும் வீரியப் பெண்ணே
சுற்றி நீயாய் முன்னாயெழு
வெற்றியுன் தேசியக் கொடியாகட்டும்
தீட்டும் வாழவினோவியப் பிழைகள்
தீயாகட்டும்! வாழ்வு காவியமாகட்டும்!

ஆளும் பெண்மையன்றுமிருந்தாள் நிலவுக்கு
நீளும் பெண்மையின்றும் இருக்கிறாள்.
தோள் கொடுக்குமேற்றம் அன்றில்லாததல்ல!
வாளும் எடுத்தாளே ஜான்சிராணி!
தாளின் அறிவு கேளவியறிவால்
மாளா ஞானம் வளர்ந்தவரைக்கும்
மாநில வாழ்வு சிறக்கும் பெண்ணே!
மாதுரியப் பெண்ணினாற்றல் மதிக்கப்படட்டும்!

2004.







Vetha-  Denmark










மிக்க மிக்க நன்றி வளரி இதழ்






428 (961) ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை.

                       ஆலமர விழுதற்ற அவலநிலை மனிதக்காட்சிச் சாலை மிருகக் காட்சிச் சாலை மாறி மனிதரே மறந்த மனிதம் போனதால் மனிதக் காட்சிச் சாலை...