புதன், 29 ஜனவரி, 2025

440 (984) மனிதன் மாறுவானா!!!!!

        

        

                                        

                                   



மனிதன் மாறுவானா!!!!!


சரவணன் பெயர் சூட்டி
மரணம் என்பதை மறக்கடித்து
அரவணைக்கும் பணம் எதுவரை!
சுரண்டி வாழ்தல் கெடுதி!
பரம்பரைக்கும் கேடு தரும்!
நரகலிக்கும் கடனைத் தொடமாட்டார்.
நிரந்தரமாய்க் கடன் ஒளித்து
பரிதவிப்பின்றி நிம்மதியாய் வாழ்வார்.
00
உரம் சொந்த உழைப்பு!
தரவேணுமெனும் சுரணை நேர்மை!
தரமுடியாதெனும் ஏமாற்று வழி
பரவணிப் படியும் நடக்குமோ!
இரவல் பணத்திற்குக் கைநீட்டல்
அரவமது கொடிய கரவு!
உராய்ந்து சுகம் தருமெனும்
உரத்த எண்ணம் தவறு!
00
திரவியம்   என்று திரண்டு
துரத்தும் கடன் தொல்லை
துரிதமாய்த் துயிலவும் விடாது!
தெரிநிலையால் கடனைத் தொலைப்பார்
நரகம் என்று தெரிந்தும்
நயப்பார் யார் உளர்!
நமசிவாயன் ஏமாற்றுக்காரனை  மாற்றுவானா!
நன்னயம் நிறைய  அருள்வானா!!!!!.....
00

வேதா. இலங்காதிலகம்.   தென்மார்க்  29-1-2025  











செவ்வாய், 21 ஜனவரி, 2025

439 (983) தமிழன் மானம் அழிக்காதே!

 


               




தமிழன் மானம் அழிக்காதே!

(இக் கவிதை   அலைகள் இணையத் தளத்தில் 18-12-2012ல் பிரசுரமானது.)


அழகிய கண்ணால் பார்த்திடு!

அழகுடன்அருளைக் காட்டிடு!

அழலாக அறிவொளி கூட்டிடு!

விழல் தொழில்களை விரட்டிடு!

நிலையற்று நாளும் அடுத்தவரது

நிலைப்பாட்டுயர்வைத் தாங்காது

அலைதல்  அலைக்கழித்தல் என்ற

தலைகளற்ற நிலை மாற்று!

00

நிலைதடுமாறுவோர் சங்கமத்தில்

விலையற்ற விழலான ஒரு

வலையமைப்பு ஏன்! பெரு

கலை கலாச்சார அழிவேன்!

புத்திக்கு வேலை கொடு!

கத்தி புத்தியழிந்தவன் பாட்டு

உருகிடப் பேசு! வன்முறையற்று

உருக்குக் கருவியையும் வீசு!

00

தன் ஆக்கம் வேண்டாதோன்

பிறன் ஆக்கம் அழிப்பான்

ஒரு தடவை பிறப்பு

கருமையாயேன் பெருமழிப்பு!

மூதேவியை அணைப்பது வீண்!

சீதேவியை அணைப்பது தேன்!

தமிழனே அறிவால் வெல்லு!

தமிழன் பெயரைக் காத்திடு!

00

பொதியான அறிவைத் திற!

நிதியான தமிழன் கலாச்சார

மதிப்பை உயர்த்து! காலித்தன

கொதிப்பு நோய் பாதிப்பு!

சங்கைக் கேடாகத் தமிழ்

சங்கு ஊதாதே தமிழா!

எங்குமுன் பண்பாடு காத்து

பாங்குடன் ஓங்கிடு தமிழனென்று!


வேதா. இலங்காதிலகம்.   தென்மார்க்  21 - 1-2025






ஞாயிறு, 19 ஜனவரி, 2025

439 (982) பிரபலம் - கவிதை மறைமலை அடிகள்

    



439 -   பிரபலம்  - கவிதை    

           மறைமலை அடிகள்


தனித்தமிழ் இயக்கம் தொடங்கி

தமிழைச் செழுமையாய் வளர்த்தார்.

தமிழறிஞர்  ஆய்வாளர் வடமொழி

கலப்பற்ற தூயதமிழில் தமிழெழுதியவர்.

00

கடவுள் - சமயப் பற்றுருவாக்க

சைவப்பணி சொற்பொழிவு ஆக்கினார்.

இயற் பெயர் வேதாசலம்.

திருக்கழுக்குன்றத்தார் மறைமலையென்று பெயராக்கினார்.

00

நான்காம் வகுப்புவரை படித்தார்.

தந்தையிறக்க தமிழ் புலவர்   

நாராயணசாமி  பிள்ளையிடம்  தமிழ்கற்றார்.

பேராசிரியர் ஆகப் பணியாற்றினார்.

00

ஐம்பத்திநான்கு நூல்கள் எழுதினார்.

பல்லாவரத்தில் இருந்த வீடு

மறைமலை அடிகள் நூலகமாக

தமிழக அரசு பராமரிக்கிறது.

00

சொக்கநாதபிள்ளை  சின்னமடையார் தவப்புதல்வன்.

1876 ஆடி  15ல் பிறந்தார்.

தமிழ்கடல் - பல்லாவரம் முனிவர்

தனித்தமிழின் தந்தையெனவும் அழைக்கப்பட்டார்.

00

வேதா. இலங்காதிலகம். – தென்மார்க். –19- 1-2025







ஞாயிறு, 12 ஜனவரி, 2025

437 (971) தோதாவானோ மனிதன்!....

 


        




தோதாவானோ மனிதன்!....


நாலாபுறமும் பொன்னிலைகளாய்  நழுவி
காலாவதி ஆகிடாது மரக்கவிதைகள்
மேலாக விழுந்தினி மேவிடும் பனி 
சூலாயுதமாய்ப் புத்திலை சூடிட
கோலாகலமாகிறது மறுபடி துளிர்த்து

பிரபஞ்சத்தின் சுவாசமோ செம்பொற்சருகு
வரமாம் பிறப்பும் இறப்பும்
காலக்கிரமத்திலிக் காலச்சுவடு காலடிமேற் 
காலடி சூரியனதுவாகிச் சீரியமுறைச்  சேவையாய்
பாரிய காலநிலைப்  பெயர்ப்பாகிறது

உதிர்ந்த சருகுகள் இயற்கை வண்ணத்துகிலாய்
அதிர்ந்திடாது புற்களில்   உறைவிடமாகிறது
ஒதுக்கிடப் புல் சிலிர்க்கிறது பழுப்பு, சிவப்பு, 
அழுக்கில்லா மஞ்சளாய் புனையா ஓவியமாகிறது.
மரங்கள் பறவைகளின் மாடமன்றோ!

விழுந்தவைகள்! இஃதென்ன  விருட்சத் தியானமா!
அழுவதில்லையா இவ்விழப்பிற்கு!
சாதுவாகி ஞானம் போதிக்கும்
சூதுவாதற்ற மரக்கவிதை உரக்களஞ்சியம்
தோதாவானோ மனிதன் மரத்திற்கீடாக!

(தோது – ஆவானோ)


பா வானதி வேதா. இலங்காதிலகம்.    தென்மார்க் 20-11-2020
000


436 (970) கறள் பிடித்த உணர்வு

 கறள் பிடித்த உணர்வு


கறள் பிடித்த உணர்வு

00

( துறத்தல் - கை விடுதல்- நீங்குதல்.)


00

மறதி மாபெரும் கெட்ட நோய்

கறள் பிடித்த உணர்வு தான்.

இறப்பின் நினைவு  சிறப்பற்ற துயர்.

00

துறத்தலானது ஒரு தங்க மாலை

அறம் புறமாகத் தேடத் தேட

உறங்கலானது எண்ணம்   அது எங்கே!

00

யாரும் மாலையைத் திருட வாய்ப்பில்லை

ஊகம்  குப்பையோடு குப்பை ஆனதா!

யோகம் இல்லையா  அது தொலைந்ததா!

00

தூக்கம் அற்ற சிந்தனை ஓட்டம்

ஊக்கமுடன் தியானமும் துணையாக ஒட்டியது

ஊரிலொரு புது மாலை வாங்கினேன்

00

பழையதை விற்றது ஒளியாகத் தோன்றியது

தழைத்தது மகிழ்வு தொலைக்கவில்லை மாலையை

பழைய நினைவு  தரும்பியது புதுமை!

00

திருடன் மாலையைத் திருடவில்லை நினைவுத்

திருடன் ஒளிந்திருந்து  வந்தது திகைப்பு!

தித்திக்கும் தெளிவு!   நிம்மதி  திரிசுடரானது!

00

வேதா. இலங்காதிலகம் - தென்மார்க்  6-1-2025


494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...