திங்கள், 2 மார்ச், 2020

260. (823 ) விதையின் தரம்.








விதையின் தரம்.

சீராளன் மனிதன் சீவகாருண்யன்.
சீதள சிறப்புக் குணவாளன்.
சீர்மிகு சிந்தனைகளால் சுயத்தை
சீர்தூக்கி மனமாளும் சிறப்பாளன்.

சீதளமனதின் காலநிலை மாறினால்
சிதிலமாகும் மனம் சீக்குநிலையால்.
சீண்டும் மனதாய்ச் சிந்தனை நூற்பார்.
சீப்பை ஒளித்தும் திருமணம் நிறுத்துவார்.

சீப்பை ஒளித்தால் திருமணம் நிற்குமா!
காப்பை ஒளித்தால் கல்யாணம் நிற்குமா!
காழ்ப்பு மனதின் இருட்டு எச்சம்
காளவாயாய்க் கொதிக்கும் உச்சம்.

மனவணுக்கள் பிராண்டக் கனதிக் கலகம்.
விறுவிறுவென விசமம, சரசரவென ஏக்கவடுப்பு
பரபரவெனக் குரோத நெருப்பால்
சருகு மேடை மனம் பற்றும்.

களைகள் பெருத்தால் காடு மண்டும்.
வளர்த்த பக்குவத்தில் பண்பு அறியலாம்.
இழைக்கும் தவறுகளில் இனம் காணலாம்.
விதையின் தரத்தில் விளைச்சல் சிறக்கும்.

2-2-2003
(ரி ஆர்ரி தமிழ் அலைக்கு- இலண்டன் ரைம் ல் வாசித்தது)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

423 (962) ஊடகம் -- தடம் தீட்டு