புதன், 28 மே, 2025

479. (1021) பாதக எண்ணம் அழியட்டும்

   

           

 

                           

       

         பாதக எண்ணம் அழியட்டும்


கனமான இரகசிய மூட்டைகளை

தனமாக இதயத்தில் மூடி

மனம் திறக்காத மானுடனே

தினம் புதையலாக மூடினாலும்

இருமலும் கர்ப்பமும் உன்னால்

ஒருநாளும் மூடமுடியாது

00

இனங்களோடு உறவாடாமல் மானுட

மனம் ஆனந்தம் அடையுமா!

நல்லொழுக்கம் அறிவால் குணம்

வில்லத்தனம் ஆகாது சாந்தமாகிறது.

பொல்லாத்தனம் அழுக்காறால் எழுகிறது

தொல்லை மேலும் பெருகுகிறது.

00

மொழியால் வடிக்கிறேன் கனத்தை

வழிகிறது அவலட்சணம் மிரட்சியாக

விழிகளில் அழகின்றி வெறுப்பு

எழிலாக நேசத்ih வளர்க்காது

கிழிப்பதாக ஏன் முரண்பாடு.!

அழியுங்கள் பாதக எண்ணத்தை

00

கவிமலை – வேதா. இலங்காதிலகம்.தென்மார்க் 28-5-2025


             



ஞாயிறு, 25 மே, 2025

478. (1021) நிசங்கள்!

 

         


                                   


                    நிசங்கள்!

நிலையற்ற வாழ்வில் நிசங்களைத் தேடல்

விலையற்ற வேலை   முயற்சியின் பாடல்.

வலை பிரித்து இடர் அழித்து ஓடல்.

தலையுடையும் மலை மீது மோதல்.

நிலையூன்ற ஒரு நேர் வழியோ

தொலையாத தமிழ் வழியோ கொள்ளல்

இலையூடு மறைந்த காய் தேடும்

அலை போன்ற அயராத ஆடல்.


கலையால் களிப்பு உலகில் காத்திரம்.

சிலை  சித்திரம்  ஓவியம் நிசம்.

மலை  மந்த மாருதம் இன்பம்.

விலையற்ற நர்த்தனம   கீர்த்தனம் நிசம்.

கறை அழித்து குறை தீர்க்கும்.

இறை நேசம் இன்பம் தரும்.

நிறை அன்பு எனும் பரமானந்தம்

சிறையுடைத்து வேதனைக் கதவுடைக்கும் நிசம்.


இணைய வலைப்பூ நிச்சயமோ இல்லையோ

அணைக்கும் அச்சடித்த தாள்கள் நிசம்.

அரசாங்கமும் தமிழரும் தினம் அடிபடுதல்

வரமிகு எழுதுகோலின் சத்தியப் போரும் நிசம்.

வாழ்ந்து மடியும் சாதாரண மனிதனிலும்

வாகை சூடி சாதிக்கும் சாதனை நிசம்.

வான்  நிலம்  கடல்  கதிரவன்

வாடாத தமிழ் வாசனையும் நிசம்.


திலகம் வைப்பதாய்ச் செய்யும் செயல்கள்

நலமாய் அமைதலே நிலத்திலூன்றும் செயல்.

கம்பன் இலக்கியத்தில் கொடியேற்றினான்.

கருணையற்ற கிட்லர் இம்சையில் நிலைத்தான்.

காந்தி அகிம்சைப் போரில் நிசமானார்.

கவிதையில் பாரதி நிலைக்கிறார் நிசம்.


பைந்தமிழ் பாவலர்-  வேதா. இலங்காதிலகம் - தென்மார்க் -9-2006


                         







வெள்ளி, 23 மே, 2025

477. (1020) பாடுபொருள் இப்பிரபஞ்சமே

   


          



          


பாடுபொருள் இப்பிரபஞ்சமே


அழுத்துபவை அருமைக் கருவாக

விழுத்திடத் தடைகளற்ற விதானத்தில்

எழுத்து வானிலெடுத்துக் காட்டாய்

முழுநேரமாய் மூழ்கி நீந்த

முனைப்பாயெழுகிறது மனம் ஆவலாய்

00

அலங்காரப் பேச்சை உள்ளெடுத்தாலும்

அறிவான செயல் சுயமாகட்டும்

அற்புத ஞானவெண்ணங்கள் நிறைந்து

அளவற்றுத் ததும்பும் உணர்வுகளை 

அக்கறையாய் உலகுயர அமைத்திடலாம்.

00

வாழ்த்துங்கள் ஞானவுரை வானளாவ

வாக்குநயம் வாக்குமூலம் வாசனை

வராத வாசக வாசனையாளர்கள்

வாமன மனமும் வளமற்றதாயினும் 

வாழ்க! நீடு வளமுடன்!

00

விரல்கள் வடிக்கும் திறன்

விரிபுவி உலகெலாம் விண்ணெட்டட்டும்

வசிப்பது எங்கே ஆயினும்

வலுவுடன் அமை வார்த்தைகளை.

வரலாறு ஆகட்டும் வனப்புடன்.

00

பாடுபொருள் இப் பிரபஞ்சமே

கூடுதலாய் வேறெது கூடும்!

நாடும் நலிவற்ற ஏகமான (ஒப்பற்ற)

ஏற்றமிகு ஞானமும் ஏற்புடைத்தாகணும்

ஏறப் பறத்தலாகப் பிரவகிக்கட்டும்.


வேதா. இலங்காதிலகம். தென்மார்க் 29-8-2021





புதன், 21 மே, 2025

476 (1019) சொற்பொழிவு. 2. சுந்தரக் கனக நிலா!

 

                          


          



2022 வாழ்க தமிழ் - கலை மாலை   விழாவில் எனது சிறு உரையும் கவிதையும்

-------------------------------------------------


சுந்தரக் கனக நிலா!


அது என்ன ?.சுந்தரக் கனக நிலா!  ...சு.ந்தரம் - அழகு.  கனகம் பொன்

அழகிய தங்க நிலா இப்படி - தமிழ் சொல்லை –வார்த்தையைக் 

குறிப்பிடுகிறேன். 

அன்பே  அமுதே  அருங்கனியே ஆனந்தத்தேனே   என்ற இவைகளைக் கேட்கும் போது இனிமையாக உள்ளதல்லவா!

கொஞ்சுமொழிப்  பெண்களுக்கு அஞ்சா நெஞ்சம் வேணுமடி !

இதுவும் இனிமையல்லவா! இதனால் தான் சுந்தரக் கனக நிலா என்று தமிழ் சொற்களைக் கூறுகிறேன். இதற்குப் பின்னாலே வருகிறேன். இப்போது தமிழ் சொற் பிறப்பு என்பது பற்றிப் பார்ப்போம்.


சொற்பிறப்பு


தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும்இ தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவை தவிர இச் சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முக்கியமானவர். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிளஇ தமிழ் என்று ஆனது என்கிறார். தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள்இ மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாகஇ 'தமிழ் - தமிள - த்ரமிள - த்ரமிட - த்ரவிட ஆகியது என்பர். சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி 'தனது மொழி' என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார். காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது 'தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி' என்ற பொருள் தரவல்லது என்கிறார்.   ------தகவல்ஃஃஃஇணையம் -----


சுந்தரக் கனகநிலா – (தமிழ் வார்த்தைகள்.)

00

 தொடர்பு இணைப்பை மனிதருள்

படர வைக்கும் வளையம்.

இடர்கள் தீர்த்து இன்பம்

படர்த்தும் வார்த்தைகள் பூக்கள்.

ஓர் எழுத்தாயும்   இணை

சேர்த்துக் குழு நிலையாலும்

வார்த்தைகளில் அர்த்தம்    உயிர்க்கும்.

வார்த்தைகள் கடல் –  மகா கடல்.


நேர்த்தியான வார்த்தைகள் கூட்டுச்

சேர்த்தால் இன்ப மொழிச்

சொர்க்கம் அருகிலே – இங்கேயே.

உதடுகள் பேசும் வார்த்தைகளை

உயிரான கண்களும் பேசும்.

தீர்க்கமான ஆசையில் பாசமாய்

போர்த்திய நேசக் கனகநிலா

வார்த்தைகள் உயிரை ஈர்க்கும்.



சிந்தனை வெள்ளத்தால் படியும்

சுந்தர வண்டல்கள் வார்த்தைகள்.

மந்திரமாய் சீவராசிகளை  வசமாக்கும்.

தந்திரமாக பந்தென பொய்களும்

யந்திர வார்த்தைகளும் உருளும்.

தூசி  பாசியுடை வார்த்தைகளால்

ஊசியாய்ச் சொருகும் வார்த்தைகளால்

கூசி ஒதுங்குவோர் நல்லோர்.


உணர்வுகளின் தாலாட்டில் அசைந்து

உதிக்கும் முத்துகள் வார்த்தைகளானால்

பேசிடும் வார்த்தையின் ஒலியும்

உயிரை வருடும் இனிமையினால்.

வார்த்தை  ஒலி இனிமையில்

கீர்த்தியும் நெருங்கும் அருகில்.

வார்த்தைகள் வனப்புக் குடையாக

நேர்த்தியான பிரசவமொரு இன்பத்தொல்லை.


சிந்தனைச் சிற்பி – வேதா. இலங்காதிலகம்.. தென்மார்க்  2022


       



ஞாயிறு, 18 மே, 2025

475 (1018) சொற்பொழிவு 1. சுவாமி ஐய்யப்பன்

 

        சிறு கட்டுரைகள் தலைப்பில் வேதாவின் வலை  - 1  ல்( kovaikkavi.wordpress.com-) 41ம்

வேதாவின் வலை - 2ல்  (kovaikkothai.wordpress.com) சிறுகட்டுரை  தகவல்கள் தலைப்பில் 14ம் பிரசுரித்துள்ளேன்.

இனி இங்கு -kovaikkothai-bloger.com) ஒன்றிலிருந்து ஆரம்பமாகிறது. 





 1. சுவாமி  ஐய்யப்பன்

 ( ஓகுஸ்கோயிலில் பேசியது)   10-01-2020


சுவாமி ஐயப்பன் பற்றிய சில தகவல்களைக் கூற வந்துள்ளேன்.

கேரளநாட்டில் இரண்டு விடயங்கள் நடந்தது.

பந்தளநாட்டு  மகாராஜாவிற்கு பிள்ளைகள் இல்லையென மனம் வருந்தினார்.

மகிஷி என்ற எருமைத் தலை அரக்கி ரிஷிகளைத் துன்புறுத்திவந்தாள்.

இந்த இரு பகுதியாருக்கும் சிவபெருமான் உதவி செய்ய எண்ணினார்.

விஷ்ணு மோகினியாக மாற சிவன் மோகினி மீது ஆசைப்பட  ஐயப்பன் பிறந்தார்.

பிறந்த குழந்தையைக் காட்டிலே ஒரு மரத்தின் கீழே விட்டு விட்டு சிவனும் விஷ்ணுவும்  சென்றுவிட்டனர். வேட்டைக்கு வந்தார் பந்தள மகாரஜா. குழந்தையின் அழுகுரல் கேட்டு  இறைவன் தனக்குத் தந்த குழந்தையென மகிழ்ந்து அரண்மனைக்கு எடுத்துச் சென்று வளர்த்தார்கள்.

ஓளி நிறைந்த முகமும் கழுத்தில் மணிமாலையுடன் பிள்ளை இருந்ததால் மணிகண்டன் என்று பெயரிட்டனர். மணிகண்டன் வந்த ராசி....மகாராணி   கர்ப்பமுற்றார் இன்னொரு ஆண் பிள்ளை பிறந்தது.

சொந்தப் பிள்ளையிருக்க வந்த பிள்ளைக்கு அரசு எப்படி என்ற துர் போதனைகளால்

காராணி தனக்கு வயிற்று வலி வந்தது என நடித்தார். புலிப்பால்  குடித்தால்

வயிற்றுவலி   தீரும் என்று யோசியரைக் கூற வைத்தாள்.

மணிகண்டனுக்கு இவை தெரியாதா! மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காடு சென்றார்.

வழியில் அரக்கி மகிஷி துன்பம் தந்து தடுத்தாள். அவளை வதம் செய்தார்.

மணிகண்டன் அவதாரம் இதற்காகவே நடந்தது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

இந்திரனே புலியாகவும் தேவர்கள் புலிப்படையாகவும் அரண்மனை வந்தனர்.  மணிகண்டனைக் கண்டு தாயார் திடுக்கிட்டார்.  மன்னிப்புக் கேட்டார். புலிகளை; திருப்பி அனுப்பமாறு கேட்டார்.

அவ்வாறே மணிகண்டன்   செய்தருளினார்.

தனது பிறப்பின் காரியம் முடிந்ததால் தான் 18 படிகளின் மேல் சபரி மலையில் தவம் செய்யப் போவதாககவும்  தன்னை வணங்க விரும்பினால் அங்கு வந்து தரிசிக்கவும் என்று கூறினார்.

ஒரு முறை பந்தள மகாராஜா மணிகண்டனைத் தரிசிக்க வந்த போது மணிகண்டன் தந்தை என்று எழுந்திட முயன்றார் இறைவனானவர் தனக்காக எழக் கூடாது என்று பந்தள மகாராஜா தனது சால்வையைத் தூக்கிப் போட்டார் . இது ஐயப்பன் காலைச் சுற்றி நின்றது


அதுவே சுவாமி எழும்புவது போன்று முழங்கால் கட்டிய ஒரு தோற்றத்தைத் தருகிறது.

-.........................................................


ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலமாக சபரிமலை விளங்குகிறது.

பாரதப் போர் நடந்தது 18 நாட்கள். இராமாயணப் போர் நடந்தது 18 மாதங்கள்.

தேவ அசுரப் போர் நடந்தது 18 ஆண்டுகள்.  இப்படி 18 என்ற எண்ணுக்கு சிறப்புகள் உண்டு.

சபரி மலை 18 படிகளும் தங்கத்தால் ஆனவை.

இங்குள்ள 18 படிகளும் விநாயகர்  சிவன்  பார்வதி  முருகன்  பிரம்மா  விஷ்ணு  ரங்கநாதன்  காளி  எமன்  சூரியன்  சந்திரன் செவ்வாய்  புதன்  குரு  சுக்கிரன்  சனி  ராகு  கேது என 18 தெய்வங்களாக விளங்குவதால்  தலையில் இருமுடி வைத்திருப்பவர்கள் மட்டுமே 18 படி ஏறமுடியும்.

'தத்வமஸி':

பதினெட்டு படி ஏறியவுடன் பக்தர்களை வரவேற்பது கொடிமரம். சன்னிதான வாசலில் 'தத்வமஸி' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது 'நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய்' என்பது இதன் பொருள். ''ஏ மனிதனே! தெய்வத்தை தேடி நீ இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்க வேண்டியதில்லை.

காடு மேடுகளைக் கடந்திருக்க வேண்டியதில்லை. உனக்குள்ளேயே நான் இருக்கிறேன். நான்  இங்கிருந்து உன்னை எப்படி பாதுகாக்கிறேனோ  அதுபோல் நீயும் உன்னைச் சார்ந்தவர்களை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள். அவர்களிடம் நல்லதைப் பேசு  நல்லதை செய்  நன்மையே நாடு' என்பது  இந்தச்சொல்லுக்குள் அடங்கியுள்ள தத்துவம்.

18 படியிலும்இ 18 வன தேவதைகள் குடி கொண்டிருக்கின்றனர். 18 தேவதைகளையும் படியில் ஆவாஹணம் ஆரத்தி   செய்து அவர்களை பூஜிப்பது தான் படிபூஜை.

சபரிமலை 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய ஷேத்திரமாகும்.

புலன் ஐந்து  பொறி ஐந்து  பிராணன் ஐந்து  மனம் ஒன்று  புத்தி ஒன்று  ஆங்காரம் ஒன்று  இவைகளைக் கடந்து ஐயப்பனை காண வேண்டும் என்ற கருத்தின்படி 18 படிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளை வைத்து 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது. அவை வில்  வாள்  வேல் கதை  அங்குசம்  பரசு. பிந்திபாவம்  பரிசைஇ குந்தகம்  ஈட்டி  கைவாள்  சுக்குமாந்தடி  கடுத்திவை  பாசம்  சக்கரம்  ஹலம்  மழுக்  முஸல ஆகிய 18 போர் கருவிகள் ஆகும்.

-  18 படிகளை 18 வகை தத்து வங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்.

-  மெய்  வாய்  கண்  மூக்கு  செவி  சினம்  காமம்  பொய்  களவு  வஞ்சநெஞ்சம்  சுயநலம்  பிராமண சத்திரிய 

  வைசிய   சூத்ர  தாமஸ  ராஜஸ என்ற 18 வகை குணங்களை தாண்டினால் பகவான் ஐயப்பனை காணலாம் என்று கூறப்படுகிறது.

-  கோயிலைச் சுற்றியுள்ள 18 மலை தெய்வங்கள் 18 படிகளாக   ஐயப்பன் சன்னதிக்கு முன்பாக இருப்பது மிகவும் விசேஷமானது.


               


           



வியாழன், 15 மே, 2025

474 (1017) மனிதம் உயிர்க்கட்டும்...

 


             



                  

  

          மனிதம் உயிர்க்கட்டும்...


தாராளமாயுலகில் நம்பிக்கைத் துரோகங்கள்

தாறுமாறாக நடக்கிறது விந்தையல்ல.

தாழ்பாள் போட்டாலும் எவரும்

தடையிட முடியாத  இன்னலிது

1-6-2020


மூச்சும் பேச்சும் நேசத்தின்

வீச்சாக ஆக்கிய வரிகள்

ஆச்சரியம் அல்ல அழகு

ஓச்சம்   கொண்டு பழகு

(ஓச்சம் - உயர்வு -  புகழ்)

6-6-2020


அதிகாரன்.

மனஉணர்வு வழி பொங்கிப் பிரசவிப்பன்

கனதியாய் ஏங்கும் சத்தியங்களின் எழுச்சிகளிது

தனம்! மாயத்தரம்! தளர்விலும் வாழ்வெழுதும்

மன ஆளுமை தீங்குடைய திமிரல்ல

தனக்கென இருக்கை செய்பவன் படைப்பாளி

மன உன்னத வானிலிருந்து வண்ணமாக

சினமற்ற காற்றெனும் பேரோசையாய் எழும்

00

தாகம் தீர்க்கும் பூமியின் மரக்குழந்தைகள்

வேகமாக அழிக்கப்பட்டு செழுமை வறுமையாகிறது.

பாகமாய் மனிதன் விழித்து இயற்கையைக் காத்திடலாம்

00

மனதில் கருணை இணைந்து பெருகும்.

மனிதம் மரித்தால் வசந்தம் வருமா

இனிதாய் மனதைக் குவித்து  உணரும்

புனித இணைப்பு மனதின் சுகமே-  2-5-2019


கவிமணி – வேதா.இலங்காதிலகம் - தென்மார்க் 2025


             




புதன், 14 மே, 2025

473 (1016) அலைகள் ஓயாது

 

        


     


          அலைகள் ஓயாது


எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள்!

சுத்தமாய்த் துடைத்து அழித்தல்கள்!

கெத்தாகவே! சுயச் சோர்வில்லை

நித்தமும் சலிப்பின்றிச் சாதனையே!

பித்தமேறினால் கனவுகளுக்குத் திரையிடுவதா!

சித்தத்தில் உரம் நேர்மையுடன்

மொத்தமாய்த் தலை நிமிரலாம்

சத்தாகப் பூரணமாய் ஆக்கவினையாற்றலாம்.

00

ஏமாற்றும் அலைகள் ஓயாது

நீமாற்றி நான் மாற்றியது

கால் மாற்றி பாறையில்

மோதிட எத்தனிக்கும் பாவனையே

நெஞ்சம் பாறை  அல்லவே!

கொஞ்சம் நசுங்கி  விம்மும்

மஞ்சமல்ல வாழ்வுப் பயணம்!

பஞ்சமல்ல போர் நிலவரம்!

00

கவி நட்சத்திரம் - வேதா. இலங்காதிலகம் 10 டென்மார்க் - 14-9-2021


     



        





செவ்வாய், 13 மே, 2025

472 (1015) வாழ்த்துகள். - அறுபதாம் பிறந்தநாள்.

   


    வாழ்த்துப்பா  என்ற தலைப்பில் வேதாவின் வலை ஒன்றில்  - kovaikkavi.wordpress.com -  47 கவிதைகளும்.

வேதாவின் வலை -2 ல் - kovaikkothai.wordpress.com -  34 கவிதைகளும் பிரசுரித்துள்ளேன்.

இங்கு - kovaikkothai.bloger.com -  முதலாவதாகத் தொடங்குகிறேன்.


      வாழ்த்துகள்.  - அறுபதாம்  பிறந்தநாள் - 1


றெஜினா ஆனந்தராஜா ஓபன்றோவில்

றிச்சாகக் கொண்டாடும் அகவை 

அறுபது நாள்  (12 -2 -2025) 

அறுபதல்ல என்றும் இருபதாக

அருமையாக வாழ்க! வாழ்க!

00

ஓகுஸில் இருந்து பயணப்பட

ஓம்படவில்லை தூரம் அதிகமென

ஓராட்டலாம் வாழ்த்தை எழுத்தாலென்று!

ஓவியமாய் ஒரு இல்லறம்

ஓளியாய் நான்கு பிள்ளைகள்

00

இனிது வாழ்க பேரர்களுடன்!

என்றும் ஆரோக்கியம் பொங்குக!

இனிய அனுபவங்கள் பெருகுக!

மனதின் நெருக்கத்தின் வாழ்த்துகள்!


வாழ்த்துவோர் வேதா. இலங்காதிலகம் தம்பதிகள்.

00


               



ஞாயிறு, 11 மே, 2025

471 -(1014) கவிதைப் பள்ளு -2

 


                 



   


 





கவிதைப் பள்ளு -2


கவிதைப் பரிசுப் பொதியை விரித்து

அவிதலாகாது (அணைதல்) கவினுறு மொழிக் குருத்துகளை

கவிழாது ரசிக்கிறது சீர்தமிழாக மனம்.

குவியும் தேன்துளிகள் அலட்சியக் கிண்ணங்களை

தவிர்த்து  நற்கருத்துகளைத் தரிசித்து இன்புறுகிறது.

00

காற்றின் மீதொரு நடனமாக மொழி

ஏற்றம் இழிவுற்றது உயர்வுடைத்து.

சற்றுமே ஓயாது சகலதும் வாசித்து

பற்றுடன் தமிழைப் பற்றுதல் இன்பம்.

வற்றாத சீவநதி தான் தமிழ்.

00

மழைத்துளி உயிர்க் குருத்தைச் சிலுப்பி

அளையும் குளிர் போன்றது தமிழ்

இழையும் இதம் தலைகோதும் இன்பமானது.

இரவில் ஊர்வலமாகும் நட்சத்திர ஓடை போல

தரவாய்ப் பெருகும்  அனுபவ ஓடைகள்.

00

கவிதையில் வரையும் உருவங்களை எழுதி

பூவிதையாகக் காற்றில் கடலில் உலகில்

பவித்திரமாக விதைத்து மரத்தின் இலைகளாக

குவிகிறது கருத்துக் கனிகள். இனிமைக் 

கவிதையில் இன்பம் ஆனந்த ஓடையாகிறது.

00

இன்று நேயர்களுக்கு நல்ல மனமா!

வென்று மலையாகிறது கருத்துப் பொதிகள்.

அன்பின் ஆதரவில் தான் உயிர்த்தல்

என்றும் அலட்சியம் அங்கீகாரமின்மையில்

தன் நம்பிக்கை தூளாகிச் சிதறுவது உறுதி.


கவிச் சிற்பி - வேதா. இலங்காதிலகம். தென்மார்க்  11-5-2025


        







புதன், 7 மே, 2025

470 (1013) கவிதைப் பள்ளு - 1

 


              



       



   

      

       கவிதைப் பள்ளு - 1


எடுத்து வாசிக்க மனமில்லாமல் சமையல்

அடுப்போடு போராடும்பலருக்குக் கவிதையேன்!

அடுத்து அடுத்து எழுதிக் குவித்தாலும்

படுத்துச் சாய்ந்து கட்டிலே கதியாகிறார்

வீட்டிலே சோர்ந்து இருக்காது சிலர்

பாட்டிலே வரிவரியாய் எமுதிக் குவிக்கிறார்.

00

கருத்துடை வரிகளை அழகாக எழுதி

உருத்துடன் பெறுமதி நூலாக்குகிறார்

நெஞ்சில் முட்டி மோதும் உணர்வை

கொஞ்சு தமிழில் கோர்த்து மீட்கிறார்.

அஞ்சாது போட்டிகளில் எழுதிக் குவித்து

அருத்தமுள்ள விருதுகள் அளவின்றிப் பெறுகிறார்.

00

எங்கும் நூல்களைப் பரப்பி  விதைக்கிறார்

எடுப்பார் இல்லையெனில் இலவசமாய் விதைக்கிறார்.

கருத்து மலைகள் உயராவிடினும் முயற்சியால்

விருப்போடு நற்கருத்துகள் பொங்குகிறது

கருத்துகள் மளமளவெனத் தளிர் விடுகிறது

குறுஞ் சிரிப்புடன் கவித்தளிரிற்கு உரமிடுகிறார்.

00

கவி  நறுமணத்தில் உயர்ப்புறும் சவடுகள்

கடந்து போவதில்லை மனது நிறையும்.

கங்கு கரையின்றிக் கடலாகப் பொங்கும் 

கடவுள் தந்த வாழ்வுப் புத்தகத்தில்

மொழியால் கவிப்பள்ளு வரைகிறேன்

அழியாத மடிப்புகளாய் மிதக்கும் சிறகுகளாய்.


கவியருவி - வேதா. இலங்காதிலகம். - தென்மார்க் -7.5.2025


                   





ஞாயிறு, 4 மே, 2025

469 (1012) வாசிக்க மனிதநேயம் தேவை

  


               


                                                         



     வாசிக்க மனிதநேயம் தேவை


என்  தொடுகையால் வெற்றுக் காகிதம்

இன் கவிதையால் நிறைகிறது.

எழுத்தியக்கம் ஓயாதது  எவர்

இழுத்து அணைப்பாரோ உதறுவாரோ

கழுத்தில் அணிந்த எழுதுகோல்

எழுதும் எழுதும் எழுதும்.

00

நான்;  எழுதும் போது 

என்மீது நடனமாடும் மகிழ்வு

பிரசுரிப்பால் தோகை விரிக்கும்.

இரசவாத எழுத்தை மதித்து

பரிகசிக்காது மேலும் எழுத

உரசும் ஆர்வம் முயற்சி.

00

யாசிக்காது முதிர்ந்து மலர்ந்த

பூசிக்கும்  மலராகப் பொழிந்து

தூசி அடக்கும் மழையாகப் 

பாசி விலக்கும் கருத்துகள்

வாசிக்க அன்பு ஆழமான

மனிதநேயம் தெளிவு தேவை.

00

கவியூற்று – வேதா. இலங்காதிலகம். தென்மார்க் -4-5-2025






வியாழன், 1 மே, 2025

468 (1011) மொழிஊர்வல அற்புதம்

   

             


 



     மொழிஊர்வல அற்புதம்


காற்றைத்  தொட்டு    கருமுகில் இழுத்து

நூற்றை  எண்ணி நுழைந்து கட்டி

ஏற்றினேன் என்னாசைக் கவிப்பட்டம்

விசிறி  இன்றி  இரட்டைக் கொம்பு

விசிறாத முற்றுப் புள்ளி  மறக்காத

வினைமுற்று என்றும் தமிழில் மறக்காதே

00

செழித்துத் தளிர்க்கும் கற்பனை

முளைத்தது நினைவுக் குமிழிகள்

நதி சுமந்து செல்லும் இரகசியமாய்

மகரந்த இறகுகள் காற்றினில்

மனித உணர்வுத் தொடுகையாய்

மொழி ஊர்வலமாகும் அற்புதம்.

00

சொல் வேலியில் காலிடறாது செல்ல

நல்லெழுத்து விமானத்தில் ஏறவேண்டும்

ஞாபகஅரும்பு  உன்னதமாய் விரிய

உள்ளப் புணர்ச்சியின் வசனகாவியம்

காலச்சிகரமாய்க் கவிதை வாசகம்

தளிர் அடர்த்திய மரமாக அமைக்கலாம்

00

வரங்கள் இறைவனின் கொடை

தரங்கள் எமது திறமையென்பது

வாங்கி வராத இறைவனின் வரங்கள்.

ஏங்கும் ஆசீர்வாதங்களும் எம்முடன்

தங்கிடும் பேறுகளும் வாழ்வின் 

மங்கலமும் நல்ல வரமே


கவி அரசி  - வேதா. இலங்காதிலகம்.  தென்மார்க். 28-4-2025   




    
       

494 (1036) கவியரங்கம் எனது 10வது

             நிலாமுற்றம் தொடர் நிகழ்வாகக் கவியரங்கம் நடந்ததில் சிலவற்றில் நான் கலந்து கொண்டேன். வேதாவின் வலை ஒன்றில் கவியரங்கம் நிகழ்வில் 6...